Wednesday, July 26, 2017

Lemonade


போஸ்ட்டின் டைட்டிலை பார்த்து லெமனேட் செய்வது எப்படி என்ற பதிவு என்று நினைத்தால்....
........
....
...
..
.
அதனை தண்ணி தொட்டு அழிச்சுட்டு, தொடர்ந்து படியுங்க! :)

இப்போது இங்கே வெயில் காலம்...கொளுத்தும் வெயில் என்று சொல்ல முடியலைன்னாலும் கொஞ்சம் வெயில்தான். பள்ளிகளுக்கெல்லாம் கோடை விடுமுறை. எங்க குட்டிப்பெண் ப்ளே ஸ்கூல் போவதால் லீவில்லை..கடந்த வாரத்தில் ஒரு நாள் அவங்களை அழைத்துவர நடந்து சென்றோம் (நானும் சின்னக் குட்டியம்மாவும்..) ..நல்ல வெயிலாக இருக்கே என்று நினைத்தவாறே சாலைமுனையொன்றில் திரும்பியபோது 2 சிறுமிகள் சாலையோரம் லெமனேட் விற்றுக்கொண்டிருந்தார்கள். அடிக்கிற வெயிலுக்கு சில்லென்று லெமனேட்!! 2 கப்புகள் வாங்கினேன்..ஒன்று 50சென்ட்  என்றார்கள், கரெக்ட்டாக ஒரு டாலர் சில்லறையும் இருந்தது. சமர்த்தாக சாலையைக் கடந்து கொண்டுவந்து கொடுத்துவிட்டு சென்றார் ஒரு சிறுமி. நாங்கள் மூவரும் எதிர்த்திசையில் திரும்பி நடக்க ஆரம்பித்ததும், " Yay...we made a dollar!!!" என்ற அவர்களின் சந்தோஷக் கூச்சல் காதைத் தொட்டது. சில்லென்ற லெமனேட் தொண்டையில் இதமாக இறங்க, அதை விடவும் அவர்களின் மகிழ்ச்சிக் கூக்குரலில் என் இதயமே நிறைந்துவிட்டது!! :)))))


அப்போதுதான் விற்பனையை ஆரம்பித்திருப்பார்கள் போலும், நான்தான் முதல் போணியாக இருந்திருக்கக்கூடும்!! நல்லபடியாக லெமனேடை விற்று முடிக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தியவாறே நாங்கள் நடையைக் கட்டினோம்.
பின்குறிப்பு 
கோடை விடுமுறை காலங்களில் பள்ளிக் குழந்தைகள் இது போல வீட்டில் லெமனேட் (எலுமிச்சை ஜூஸே தான்!! ;) ) செய்து எடுத்துக்கொண்டு வந்து சாலைமுனைகளில் "லெமனேட் ஸ்டேண்ட்" என்ற பெயரில்  சிறு டேபிள்கள் போட்டு வைத்து விற்பனை செய்வார்கள். குக்கீ, கேக் போன்றவையும் வீட்டில் செய்து விற்பனை செய்வதும் உண்டு..நாற்சந்திகளில், சிக்னல் அருகில் டேபிள்கள் போட்டு  விற்பனை செய்வார்கள். நம்மால் முடிந்தது, வாய்ப்புக் கிடைக்கும்போது இவற்றை வாங்குவது, குழந்தைகளுக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும், நமக்கும் வெயிலுக்கு இதமான குளிர்பானம் கிடைக்கும்! ஒரே கல்லில ரெண்டு மாங்கா!! 

என்னவர் இன்னும்கொஞ்சம் மேலே!! கடைகளுக்குப் போகும்போது வாசலில் பள்ளிச்சிறுமிகள் நின்று "Girl scout cookies" விற்பார்கள். அந்த குக்கீ-களை சாப்பிட வீட்டில் ஆளில்லா விட்டாலும் அதை வாங்காமல் வரமாட்டார்!! "நாளைக்கு நம்ம பொண்ணு கர்ள் ஸ்கவுட்டில் சேர்ந்து இதே மாதிரி குக்கீ விற்க போனா...வாங்காம வந்தா பொக்குன்னு போயிருவாள்ல?" என்ற ஜஸ்டிஃபிகேஷனோடு குக்கீ பாக்ஸ்கள் வரும்..சில நேரங்களில் வீட்டிற்கே கொண்டுவந்து விற்பனை செய்வார்கள், அப்போதும் அந்தக் குழந்தைகளுடன் உரையாடி ஒன்றிரண்டு பேக்கட் குக்கீகள் வாங்காமல் விடுவதில்லை!! :) 

பின்குறிப்புக்கு பின்குறிப்பு 
லயாக்குட்டிக்கு ஹேர்கட் பண்ணியாச்சு!! ;)  11 மாதத்தில் மொட்டை போட்டதிலிருந்து இதுவரை ஹேர்கட் செய்யவே இல்லை..சமீபத்தில்  அப்பாவுடன் சலூனுக்கு சென்ற அம்மணி, தானும் ஹேர்கட் செய்துகொண்டு வந்து எனக்கு அதிர்ச்சி (இன்ப அதிர்ச்சினு சொல்ல முடியாதுனு வைங்களேன்!! ) கொடுத்துவிட்டார்!! ஹூம்...தட் "நான் வளர்கிறேனே மம்மி!! " மொமெண்ட் யு சி!!
லாஸ்ட் பின்குறிப்பு
லெமனேட் எக்ஸ்பீரியன்ஸ் நெம்ப மொக்கையா இருந்தா கோவிச்சுக்காம ஒரு கப்பு லெமனேட் போட்டு குடிங்கப்பூ!!! ;) :) காட் ப்ராமிஸ், நோ மோர் பின்குறிப்பு!! 

Wednesday, June 28, 2017

வானமே, வானமே!!

கடந்த மே மாதக்கடைசியில்  ஒரு நாள் முற்பகல் வெளியே சென்றுவிட்டு வருகையில், வானில் மேகங்கள், சீராகக் கிள்ளிப் போடப்பட்ட பஞ்சுத் துணுக்குகளாய் பறந்துகொண்டிருக்க...

ஹைவே-யில் காரில் வர வர கண்ணாடி glare அடிப்பதையும் பொருட்படுத்தாமல் போனில் எடுத்த படங்கள், யாம் பெற்ற இன்பம் இந்த வலைப்பூவும் பெறட்டும் என்று இங்கேயும் வருகை புரிந்திருக்கின்றன! :)
நீலவானத்தில் காற்றின் திசைக்கேற்ப அலையும் மேகங்கள் அன்று மட்டும் ஏதோ ஒரு அலைவரிசையில் அடித்த காற்றின் கை பட்டு அழகழகாய் சிதறி கிடந்த காட்சி கண்களைக் கைது செய்தது.
 வீட்டுப்பக்கம் வந்துவிட்டோம் என்பதை பறைசாற்றும் மலைக்குன்றுகள்! :D
முன்பெல்லாம் வானம் பார்க்கும் வாய்ப்பு அடிக்கடி கிடைக்கும். இப்போது அரிதாகவே கிடைக்கிறது. பெரும்பாலும் மேகங்களற்ற வானமே கண்ணுக்குக் கிடைக்கும். பலநாட்கள் கழித்து பார்த்ததாலோ அல்லது, திடீரென வந்த பல்வலியால் துன்பப்பட்டு சொத்தைப்பல்லை சரிசெய்ய  முதல் படியாக இரண்டு மணி நேரம் பல் மருத்துவரிடம் சென்ற போது குட்டிப்பெண் அமைதியாக இருந்து காரில் திரும்பி வரும்போதும் சமர்த்தாக தூங்கிவிட்டதால் சும்மா கண்ணில் பட்ட வானம் வெகு அழகாகத் தென்பட்டதோ?! :) :) ஹிஹி...!! 

Monday, June 5, 2017

வெஜிடபிள் பஃப்ஸ்

தேவையான பொருட்கள் 
பஃப் பேஸ்ட்ரி ஷீட் - 1 
உருளைக்கிழங்கு -1
கேரட் -1
பீன்ஸ் - 7
பச்சைப்பட்டாணி - 1கைப்பிடி 
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -1
இஞ்சி-பூண்டு விழுது -1டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - கொஞ்சம்
சீரகம் - 1/2டீஸ்பூன்
தக்காளி, சிறியதாக -1
மிளகாய்ப்பொடி - 1/2டீஸ்பூன்
கறிமசாலா பொடி - 1டீஸ்பூன் 
கரம் மசாலா பொடி -1/4டீஸ்பூன்
சர்க்கரை -1/2டீஸ்பூன் 
உப்பு 
எண்ணெய் 

செய்முறை 
பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை ஒரு மணி நேரம் முன்பாக ஃப்ரீஸரில் இருந்து வெளியே எடுத்து வைக்கவும்.
உருளை கிழங்கை குக்கரில் வேகவைத்து தோலுரித்து வைக்கவும்.
கேரட்-பீன்ஸ் இவற்றை கழுவி, பொடியாக நறுக்கி, மைக்ரோவேவ்-ல் வேகவைத்து வைக்கவும். (நான் பச்சைப்பட்டாணி சேர்க்கவில்லை, சேர்ப்பதாக இருந்தால் கேரட் பீன்ஸ் முக்கால் பதம் வெந்ததும் பட்டாணியையும் சேர்த்து ஒரு நிமிடம் மைக்ரோவேவ்-ல் வைத்து எடுத்துக்கொள்ளவும்)
வெங்காயம்- பச்சைமிளகாய் -தக்காளியை பொடியாக நறுக்கிவைக்கவும். இஞ்சி பூண்டை தட்டிக்கொள்ளவும். 

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து  சீரகம் தாளித்து நறுக்கிய வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், கறி மசாலாதூள், உப்பு, சர்க்கரை சேர்த்து வதக்கவும். 
பொடிகள் பச்சை வாசம் போனதும், மசித்த உருளைக்கிழங்கு, வேகவைத்த காய்கறிகள் (நீரை வடித்துவிட்டு) சேர்த்து கிளறவும். மசாலாவுடன் காய்கள் கலந்ததும் கரம் மசாலா பொடி சேர்த்து கலந்து அடுப்பிலிருந்து இறக்கவும். 

அவன்(oven) - ஐ 400F அளவுக்கு ப்ரீஹீட் செய்யவும். அறை வெப்பநிலைக்கு வந்திருக்கும் பஃப் பேஸ்ட்ரி ஷீட்டை மாவு தூவி இன்னும் கொஞ்சம் பெரியதாக தேய்த்துக்கொண்டு 9 துண்டுகளாக கட் செய்து கொள்ளவும். [இங்கே நான் யூஸ் செய்திருப்பது Pepperidge form puff pastry sheet ]. 

நறுக்கிய சதுரங்களில் கொஞ்சமாக மசாலா வைத்து, ஓரங்களில் தண்ணீர் தடவி ஒட்டவும். அலுமினியம் ஃபாயில் விரித்த பேக்கிங் டிரேயில் ஒட்டிய பஃப்ஸ்களை அடுக்கவும். இதற்குள்ளாக அவன் ப்ரீஹீட் ஆகி தயாராக இருக்கும். தட்டில் அடுக்கிய பஃப்ஸ்கள் மீது சிறிது பால் அல்லது தண்ணீரை  (முட்டை சாப்பிடுவீங்கனா ஒரு முட்டைய உடைத்து சிறிது நீர் கலந்து நன்றாக கலக்கி அதை..) சீராகப் பூசிவிட்டு அவன் - ல் வைக்கவும். 
சுமார் 20 நிமிடங்கள் பேக் செய்து பஃப்ஸ்கள் பொன்னிறமானதும் எடுக்கவும். 16 நிமிடங்களுக்குப் பிறகு அவன் -ஐ கவனித்து தேவைப்பட்டால் பேக்கிங் டிரே-யை திருப்பி வைக்கவும். பஃப்ஸ்கள் எல்லாம் ஒரே நிறமாக வெந்ததும் அவன் -ல் இருந்து வெளியே எடுத்து சூடான டீ அல்லது காஃபியுடன் பரிமாறவும்.
குறிப்பு 
பஃப்ஸ்-களை இன்ன வடிவில்தான் ஒட்ட வேண்டும் என்ற வரையறை இல்லை...விருப்பமான வடிவத்தில் ஒட்டுங்க..கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரே விஷயம், மசாலா வைத்து பஃப்ஸ்கள ஒட்டும்போது மசாலா வெளியே வராதபடி ஒட்டவேண்டும். இல்லையெனில் பஃப்ஸ் பேக் ஆகும்போது மசாலா வெளியே எட்டிப்பார்த்து கருகிவிடும். :) 
அதே போல, மசாலா கொஞ்சம் காரமாக செய்தால் நன்றாக இருக்கும், பஃப்ஸ் பேக் ஆகி, அந்த லேயர்களுடன் சாப்பிடுகையில் காரம் சரியாகிவிடும்!! ;) 

Thursday, May 11, 2017

ஓட்ஸ் வெஜிடபிள் உப்மா

தேவையான பொருட்கள் 
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் -11/2 கப்
கேரட் -1
பீன்ஸ் - 5
பச்சை பட்டாணி (ஃப்ரோஸன்) - ஒரு கைப்பிடி
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -3 (காரத்துக்கேற்ப)
கறிவேப்பிலை -கொஞ்சம்
கொத்துமல்லி இலை - கொஞ்சம்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
ஓட்ஸை வெறும் கடாயில் வாசம் வரும்வரை வறுத்து ஆறவைக்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீரை கொதிக்க விடவும். தண்ணீர் கொதித்ததும் ஓட்ஸை சேர்த்து வேகவைக்கவும். தீயை குறைத்து வைத்து வேகவைக்கவேண்டும், ஓட்ஸ் சேர்த்ததும் பொங்கும். ஓட்ஸின் வகைக்கேற்ப சில நிமிடங்களில் வெந்துவிடும். குழையாமல் வேகவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி மூடி வைக்கவும். [தண்ணீர் அளவாக இருக்கும், வடிக்கத் தேவையில்லை]

கேரட் பீன்ஸை கழுவி நறுக்கி, கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைக்ரோவேவ்-ல் 2  நிமிடங்கள் வேகவைக்கவும். அதனுடன் பட்டாணியையும் சேர்த்து மீண்டும் ஒரு நிமிடம் வேகவிட்டு எடுத்துவைக்கவும்.

வெங்காயம், பச்சைமிளகாய் நறுக்கிவைக்கவும்.

கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு தாளிக்கவும். க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமானதும், கறிவேப்பிலை - நறுக்கிய வெங்காயம் பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும். லேசாக வதங்கியதும் தேவையான உப்பு, வேகவைத்த காய்கறிகள் (தண்ணீரை வடித்துவிட்டு) சேர்க்கவும். எல்லாம் நன்றாக வதங்கியதும் வெந்த ஓட்ஸை கொட்டி கிளறிவிடவும். [ரொம்பவும் கிளறக்கூடாது..காய்கள் ஓட்ஸுடன் கலந்தால் போதும்]

ஓட்ஸ் காய்களுடன் கலந்து சூடானதும் அடுப்பிலிருந்து இறக்கி, நறுக்கிய கொத்துமல்லி இலை சேர்த்து சூடாக பரிமாறவும். 

Tuesday, April 11, 2017

Super Bloom, 2017


இந்த வருஷம் வருணபகவான் கலிஃபோர்னியாவிற்கு அபரிமிதமாக வருகை தந்து மண்மகளை குளிரக்குளிரக் குளிப்பாட்டியதில், பூமிப்பெண் மனங்கனிந்து மனிதர்கள் கண்ணுக்கு மலர்விருந்து படைத்திருக்கிறாள்!! :) :) 

காணும் குன்றுப்பகுதிகள், மலைப்பகுதிகள் யாவும் பச்சைப்பட்டுடுத்தி காட்சியளிக்கின்றன. பச்சை என்பதை விடவும், எங்கெங்கிலும் மலர்ந்திருக்கும் மஞ்சள் மலர்கள் பசுமையுடன் கலந்து அற்புதமான இயற்கையின் மலர்க்கண்காட்சி!! 
 
 மஞ்சள் மலர்களில் பெரும்பாலானவை கலிஃபோர்னியாவின் மாநில மலரான " பாப்பி / Poppy " மலர்களே! ஆனால் இவை மலர்வது மனித நடமாட்டம் குறைந்த மலைப்பகுதிகளில்தான்!!
எங்கெல்லாம் இம்மலர்கள் கண்களுக்கு விருந்தளிக்கின்றனவோ, அங்கெல்லாம் மக்கள் சென்று பார்க்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மக்களும் கூட்டம் கூட்டமாக டிஎஸ்எல்ஆர் கேமராக்கள், டிரைபாட் என்று எடுத்துச்சென்று மண்மகளின் எழிலைச் சிறைபிடித்து வருகிறார்கள்.
மஞ்சள் மலர்களில் இன்னுமொரு வகை..இவை போக, சாலையோரங்களிலெல்லாம் "  black eyed susan" மலர்களும், மற்றும் பெயர்தெரியாப்பூக்களும் சிரிக்கின்றன. இதுவரை வந்த படங்களெல்லாம் இணையத்திலிருந்து எடுத்தவை. இனி வருபவை எங்கள் கேமரா படங்கள்! 
~~~
 கணவரும், நண்பர்களும் வழமையாகச் செல்லும் ஹைக்கிங் ட்ரெய்ல் எங்கிலும் கடுகுப்பூக்கள்...!!
 இருமருங்கிலும் வரிசைகட்டிப் பூத்திருக்கின்றன.  ஏரியின் பின்னணியில் மஞ்சள் மலர்கள்!
மஞ்சள் மலர்கள் "மட்டுமே" வந்திருக்கின்றன என்று யாரும் எண்ணாமலிருக்க, கொஞ்சம் பர்ப்பிள் பூக்களும்!! ;) :) 
இந்த முறை எங்கள் இல்ல இரண்டுகால் பூக்கள் அரும்பாகவும், மொட்டாகவும் இருப்பதால் என்னால் எங்கும் சென்று சூப்பர் ப்ளூம்-ஐ கண்டு ரசிக்க இயலவில்லை.  வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் ஃபேஸ்புக்கில் வரும் படங்களைத் தவறாமல் கண்டு களித்தாச்சு!! வரும் ஆண்டுகளில் இன்னொரு சூப்பர் ப்ளூம் வராமலா போய்விடப்போகிறது? அப்போ பாத்துக்கலாம்!! 
:) <3 :="" p="">
~~~~~~~~~~~~
கல்லைக்கண்டால் பைரவரைக் காணோம், பைரவரைக் கண்டால் கல்லைக் காணோம் கதையாக என் கண்ணில் லேப்டாப் படுவதே அரிது, அப்படியும் பட்டால் பவர் இல்லாமல் பல்லைக்காட்டும். எல்லாம் சரியாக இருந்தால் நான் பெற்ற செல்லக்கிளி கீச் கீச் என கத்த  ஆரம்பிப்பா!! அப்படி இப்படின்னு, பிப்ரவரிக்கப்புறம் ஏப்ரல்ல ஒரு பதிவு போட்டாச்சு..இனிமேலாவது அடிக்கடி லேப்டாப், பவருடன் என் கையில் கிடைக்கோணும்னு எல்லாரும் வேண்டிக்குங்க.. (என்னடா இது கஷ்டகாலம்? என்றெல்லாம் முணுமுணுக்கக்கூடாது...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்!!!) நன்றி, வணக்கம்! 

Thursday, February 2, 2017

ஐவரானோம்..!!

38 திங்களுக்கு முன்னம் 
எங்களுக்கு ஒரு பதவி உயர்வைத் தந்து 
எங்கள் வாழ்வென்னும் இசைப்பயணத்தில் 
லயம் இணைந்தது! 
:) 
நாட்களும் வருடங்களும் கணப்பொழுதில் ஓடி மறைய...
என் கைக்குள் அடங்கியிருந்த குட்டிக்கை மெல்ல மெல்ல
ஓடி ஆடித் திரிந்து..
சின்னஞ்சிறு குழந்தை 
நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து..
எனக்கு நல்லதொரு நட்பாய்ப் பரிமாணமெடுக்க...
இதயத்தின் ஒரு மூலையில் என் குட்டிப் பெண்,
 குழந்தைமை மறைந்து சிறுமியாய் மாறுகிறாளே என்ற சிறு ஆதங்கம் மெல்லியதாய்த் தோன்ற ஆரம்பிக்கையில்..
உன் ஏக்கத்தைப் போக்குகின்றேன்..
உங்கள் வாழ்க்கையில் லயத்துடன் ஸ்வரமும் சேரட்டும் 
என்று இறைவன் புன்னகைக்க..
எங்கள் குடும்பத்தில் தன் குட்டிப்பாதங்களைப் 
பதித்திருக்கின்றாள் எங்கள் இரண்டாவது தேவதை!!!
ஒருவர் இருவரானோம்..
எங்கள் நாலுகால்ப் பிள்ளையுடன் மூவரானோம்...
லயாவுடன் நால்வரானோம்..
இப்போது, 
ஸ்வரா-வுடன் ஐவராகி இருக்கிறோம்!!! 
:)))))) 
மழையின் துளியில் லயம் இருக்குது..
துளிகள் இணைந்து ஸ்வரம் பிரிக்குது!! 
வாழ்க்கை இனி இன்னும் இனிக்கப்போகுது!! 
:))))) 
We are Blessed with Another Beautiful Girl!! 
~~~~~
வழமை போல உங்களனைவரின் ஆசிகளை நாடி..
லயா, ஸ்வரா, ஜீனோ, அருண் 
மகி 

Friday, January 27, 2017

ப்ரோக்கலி


அக்டோபர் மாதத்தின் முதல் வாரத்தில் ஒரு "Raised Bed" Garden -ஐ உருவாக்கி, காய்கறிகள் வளர்க்கலாம் என ஆர்வத்தோடு செடிகள் வாங்கபோனால்...இந்தியக்காய்கறிகள் எல்லாம் கோடை விரும்பிகள், குளிர்காலத்தில் வரும் காய்கறிகள்தான் இப்போது வளர்க்கவேண்டும் என உரைத்தது. ;) :)  சரி பரவாயில்லை என்று வாங்கி வந்து அப்படி இப்படி என்று அவையும் வளர்ந்து அறுவடையும் செய்த பின்னர் ஒரு பகிர்வு.  

மேலே படத்தில் நர்ஸரியிலிருந்து வந்து மண்ணில் நட்ட உடன், நாற்றுகள்..வலப்புற ஓரத்தில் இருப்பதுதான் ப்ரோக்கலி நாற்றுகள். சுமார் ஒரு மாதம் ஆனபின் செடிகள் உயிர் பிடித்து வளர ஆரம்பித்த போது..

அடுத்த ஒரு மாதமும் கடந்தது..செடிகள் செழித்து வளர்ந்தன. காய் பிடிப்பதற்கான எந்த அறிகுறியும் தெரியவரவில்லை...
திடீரென்று ஒரு நாள் காலை பார்க்கையில்..
நட்டிருந்த அரை டஜன் ப்ரோக்கலி நாற்றுகளிலும் குட்டிக்குட்டியாய்ப் ப்ரோக்கலி மொட்டுக்கள் வந்திருந்தன..!! :) :D :) 

நாட்கள் நகர நகர ப்ரோக்கலி மொட்டுக்கள் அழகான :) ப்ரோக்கலி-யாக வளர ஆரம்பித்தன..
இன்னுங்கொஞ்சம் ப்ரோக்கலி மொட்டுக்கள் பெரிதானதும், கட்டுக்கள் போட்டு,  காய் முற்றும் வரை பத்திரப்படுத்துவோம் என நினைத்திருந்த நேரம் ..
மழை வந்தது..வெளியே கால் வைக்க முடியாத அளவு சேறு, குளிர்..எல்லாம் காய்ந்து எட்டிப்பார்க்கையில்...
அணில்பிள்ளைகள் வந்து தம் கைவரிசையைக் காட்டிப்போயிருந்தார்கள்!! :( :) :( 

மீதமிருந்த காய்களை செடியின் இலைகளால் மூடி ரப்பர் பாண்ட் போட்டு கட்டி வைத்தோம்..அடுத்த நாள் பார்க்கையில், 
அழகாக ரப்பர் பாண்டை- பிரித்து உள்ளே இருந்த ப்ரோக்கலிப் பிஞ்சு சுவைக்கப்பட்டிருந்தது!!! :) :) :( :)  இலைகளும் விட்டு வைக்கப்படவில்லை!! அவ்வ்வ்வ்வ்......!! 
ஆக மொத்தம் அணில்களும் நாங்களுமாக  50-50அக்ரிமெண்ட் போட்டுக்கொண்டு, ஆளுக்கு மூன்று என்ற வகையில் ப்ரோக்கலிகளைப் பிரித்துக்கொண்டோம். மூன்றில் ஒரு ப்ரோக்கலி, முழுவதுமாக முற்றுமுன் பொங்கலுக்கு அறுவடை செய்யப்பட்டது. மீதமிருந்த இரண்டு காய்கள்..

நேற்று ஒன்றை பறித்து ...
வளைச்சுக்கட்டி ஃபோட்டோ எடுத்துட்டு...
சமைச்சுச் சாப்பிட்டாச்சு!! :)))) 
கடைகளில் வாங்கும் ப்ரோக்கலியை விட அருமையான சுவையில் சூப்பராக இருந்தது. நம்ம வீட்டில வளர்த்து, அணிலுக்கும் கொடுத்து நாமும் சாப்பிடும் சுவையே தனிதான்!! 
அக்டோபர் முதல் வாரம் நட்டு, ஜனவரி 26ஆம் தேதி அறுவடை செய்திருக்கிறோம், இன்னுங்கொஞ்சம் முன்னதாகவே பறித்திருக்கலாம்! ரீசண்ட்டாக  (எங்களுக்கு) அறிமுகமான ஒரு காயை வீட்டிலேயே வளர்த்து சமைச்சு சாப்பிடுவது ரொம்ப சந்தோஷமான அனுபவம்!! :)  உங்களுக்கு முடியுமெனில் முயற்சித்துப் பாருங்களேன்!! 


Monday, January 16, 2017

பொங்கல் 2017

இந்த வருஷ பொங்கல் ஸ்பெஷல் கோலங்கள்...!  


கோலங்கள் கோவையில் அம்மா வீடு மற்றும் பக்கத்து வீடுகளில் போடப்பட்டவை. வாட்ஸப் உபயத்தில் சுடச்சுட அமெரிக்கா வந்த கோலங்கள் இப்ப இங்கேயும் வந்தாச்சு! :) 
~~~~~
அறுவடைத் திருநாளுக்கு எங்க வீட்டுத் தோட்ட அறுவடை..கத்தரிக்காய், ப்ரோக்கலி, எலுமிச்சை,  ஒரு தக்காளி, இரண்டு குட்டிப் பழ மிளகாய்கள்! :)))  + சர்க்கரைப் பொங்கல் & வெண்பொங்கல்!  
சாமி கும்பிடும் குட்டிச்சாமி!! ;) 
 நீங்க எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்க என்று நினைக்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கலாம்..நன்றி! 

LinkWithin

Related Posts with Thumbnails