Monday, October 24, 2016

ஜெயின் கிச்சடி

மதிய உணவுக்கு அவசரமாக ஏதாவது சுவையாகச் சமைத்து சாப்பிடலாமே என்று தோன்றுகையில், குக்கரில் ஒரே சாதமாக தாளிச்சு விட்டு 3 விசில் விட்டு இறக்கினால் போதும் என்ற உணவுவகைகள்தான் என் சாய்ஸ்..அஃப்கோர்ஸ், வீட்டில் ஒரு பிரியாணி பிரியர் இருப்பதால் வெஜிடபிள் பிரியாணி, மஷ்ரூம் பிரியாணி, கொண்டைகடலை பிரியாணி, தக்காளி பிரியாணி, மீல்மேக்கர் பிரியாணி என போட்டியாளர்கள் நிறைய இருந்தாலும், அதிக காரம்-மசாலா இல்லாத இந்த கிச்சடி இப்ப அடிக்கடி எங்க வீட்டில் இடம்பிடிக்கிறது. பிரியாணி பிரியரே விரும்பி சாப்பிடுகிறார்னா பாத்துக்கோங்க..!! ;) :)

அதுவும் இல்லாமல் பிரியாணி செய்தால் ரைத்தா இருக்கா என ஒரு கேள்வி வேற!! அவ்வப்பொழுது, எனக்கே கை அடங்காம, கத்தரிக்காய் க்ரேவி, மிர்ச்சி கா சாலன் இப்படி எதாவது சைட் டிஷ்-ஐ இழுத்து விட்டுக்கொள்வதும் நடக்கும். அவற்றிலிருந்து எஸ்கேப் ஆக இந்த கிச்சடி கை கொடுக்கிறது. இந்த கிச்சடிக்கு "பத்லா கடி" என்ற நார்த் இண்டியன் மோர் குழம்பு நல்லா இருக்கும் என்று ரெசிப்பில சொல்லிருந்தாலும் எங்களுக்கு அது கூட தேவையில்லை, அப்படியே சாப்பிட்டுடுவோம்! ;) :p

இந்த கிச்சடிக்கு விருப்பமான காய்கள் சேர்க்கலாம் என்றாலும் மிக முக்கியமான காய், குடைமிளகாய்..அதுவும் கலர் மிளகாய்கள் இருந்தால் ருசியும் வாசனையும் அருமையா இருக்கும். குடைமிளகாய் இல்லைன்னா கிச்சடி செய்யவே ஆரம்பிக்காதீங்க! ஹிஹி...!!...

அப்புறம் படத்தில் இருக்க குடைமிளகாய், தக்காளி மற்றும் பீன்ஸ் நம்ம வீட்டில காய்ச்சது..அதனால ருசி இன்னும் கொஞ்சம் அமோகமா இருந்துச்சு!! :))))

தேவையான பொருட்கள்
காய்கறிகள்
கேரட் - 1
பீன்ஸ் - ஏழெட்டு
குடைமிளகாய், சிறியதாக - 1 (அல்லது 2 வண்ணங்களில் பாதி பாதி)
பச்சை பட்டாணி - கால்கப்
உருளை கிழங்கு (சிறியதாக) - 1
தக்காளி (சிறியதாக) -1
வெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி - சிறுதுண்டு
பூண்டு - 4 பற்கள்
உப்பு

பச்சரிசி/பாஸ்மதி அரிசி - 1கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்

தாளிக்க
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
பட்டை - சிறுதுண்டு
கிராம்பு/லவங்கம் -2
சீரகம் - 1டீஸ்பூன்
மிளகு- 8
வரமிளகாய் -1
பிரியாணி இலை
கறிவேப்பிலை  - கொஞ்சம்
கடைசியில் சேர்க்க
நெய் -1 டேபிள்ஸ்பூன் (சுவைக்கேற்ப சேத்துக்கலாம்!! ;))

செய்முறை 
அரிசி-பருப்பை களைந்து ஊறவைக்கவும். 20 நிமிடங்களாவது ஊறினால் நல்லது.
காய்களை கழுவி ஒரே அளவாக நறுக்கிக்கொள்ளவும்.
இஞ்சி-பூண்டை தட்டி வைக்கவும்.
குக்கரில் எண்ணெய் காயவைத்து சீரகம், மிளகு, பட்டை கிராம்பு தாளித்து, வர மிளகாயையும் கிள்ளி சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி பூண்டு தட்டியது சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் வதங்கியதும், நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கிவிட்டு காய்களை சேர்க்கவும்.  சில நிமிடங்கள் வதக்கிவிட்டு, ஊறிய அரிசி-பருப்பை தண்ணீர் வடித்து சேர்க்கவும். ருசிக்கு உப்பு சேர்த்து 3 கப் தண்ணீர் விடவும். (ஒரு கப் அரிசிக்கு 3 கப் தண்ணீர்..கொஞ்சம் குழைவாக இருக்கும் இந்த கிச்சடி) 
குக்கரை மூடி , மிதமான தீயில் 3 விசில் வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும். ப்ரெஷ்ஷர் அடங்கியதும் குக்கரை திறந்து நெய் சேர்த்து கிளறி பரிமாறவும். ஆறிய பிறகு சாப்பிட்டாலும் சுவையாகவே இருக்கும். 
இதனுடன் ஜோடியாக பத்லா கடியும் செய்தேன், ஆனால் அது திரும்பி கூட பார்க்கப்படாமல் தங்கிவிட்டது.  ;)

ஒரிஜினல் ரெசிப்பி இங்கே..அதென்னவோ காமாட்சி அம்மாவின் சமையல்கள் எனக்கு கடந்த சில வருஷங்களாக தொடர்ந்து செய்து சுவைக்கும்படியாகவே அமைந்து கொண்டிருக்கின்றன. நன்றிம்மா!! :)
குறிப்பு
டைட்டில்-ல "ஜெயின் கிச்சடி" என இருந்தாலும், இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி அல்ல, இஞ்சி-பூண்டு, வெங்காயம் இவையெல்லாம் சேர்க்காமல் செய்தால் அதுவே ஜெயின் கிச்சடி. விருப்பமுள்ளோர் அப்படியும் செய்து பார்க்கலாம். :) நேரமிருந்தா இங்கேயும் எட்டிப் பாருங்க. இது ஒரிஜினல் ஜெயின் கிச்சடி - கடி ஜோடி!

Thursday, October 6, 2016

அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு

தேவையான பொருட்கள் 
சுண்டக்காய் வத்தல் (அ) மணத்தக்காளி வற்றல் - கொஞ்சம் 
உளுந்து அப்பளாம்/அப்பளம் - 2 (அ) 3 
நறுக்கிய வெங்காயம் - 4 டேபிள்ஸ்பூன் (அ) சின்னவெங்காயம் - 7 
புளி - எலுமிச்சை அளவு 
நசுக்கிய பூண்டு - 4 பற்கள் 
கறிவேப்பிலை கொஞ்சம்
வரமிளகாய் -1
வெந்தயம் -1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன் 
சாம்பார் பொடி -1 டீஸ்பூன்
ரசப்பொடி - 1 டீஸ்பூன் 
மல்லித்தூள் - 1டீஸ்பூன் 
பருப்பு பொடி -1 டீஸ்பூன் (நான் சேர்க்கவில்லை) 
அரிசிமாவு -1டீஸ்பூன் 
உப்பு 
சர்க்கரை அல்லது வெல்லம் - கொஞ்சம் 
நல்லெண்ணெய் 

செய்முறை 
வெங்காயத்தை நறுக்கி வைக்கவும். பூண்டை நசுக்கிக் கொள்ளவும். புளியை ஊறவைத்து நீர்க்க கரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பாத்திரத்தில் நல்லெண்ணெய் காயவைத்து வத்தலை பொரித்து, தனியாக எடுத்து வைக்கவும்.
அதே எண்ணெயில் கடுகு தாளித்து, வெந்தயம் சேர்த்து கருகாமல் சிவக்க வறுத்ததும் க.பருப்பு -உ.பருப்பு சேர்க்கவும். 
அப்பளத்தை சிறு துண்டுகளாக உடைத்து சேர்க்கவும்.
அப்பளம் பொரிந்ததும் நறுக்கிய வெங்காயம், நசுக்கிய பூண்டு,  உடைத்த மிளகாய் வத்தல் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் சாம்பார் பொடி - ரசப்பொடி - மல்லிப்பொடியை சேர்த்து, தேவையான உப்பும் சேர்க்கவும். (வத்தலில் உப்பு இருக்கலாம், கவனமாக உப்பைச் சேர்க்கவும்.)
புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
மிதமான தீயில் புளிக்கரைசல் பச்சை வாசம் போக கொதித்ததும், பொரித்து வைத்திருக்கும் வத்தலையும் சேர்த்து கொதிக்க விடவும். வெல்லம் (அ) சர்க்கரையையும் சேர்க்கவும்.
அரிசிமாவை கொஞ்சம் தண்ணீரில் கரைத்து சேர்க்கவும். (பருப்பு பொடி சேர்ப்பதாக இருந்தால் அரிசிமாவுடன் சேர்த்து கரைத்து சேர்க்கவும்)
குழம்பு நன்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான அப்பளாம் போட்ட வத்தக்குழம்பு தயார். பருப்பு உசிலி அல்லது பருப்புத் தொகையல் காம்பினேஷனுடன் சுவையாக இருக்கும்.
படத்தில்-- சோறு, வத்தக்குழம்பு, பீன்ஸ் பருப்புசிலி, பைனாப்பிள்-மேங்கோ சாலட். ரசமும் தயிரும் படத்தில் வரவில்லை. :)

குறிப்பு 
இந்த குறிப்பு காமாட்சி அம்மாவின் ப்ளாகைப் பார்த்துச் செய்தது. அவர்கள் மணத்தக்காளி வற்றல் சேர்த்து செய்திருந்தாங்க..என்னிடம் கைவசம் அந்த வத்தல் இல்லாததால் சுண்டவத்தல் சேர்த்தேன்.  அம்மா செய்த அளவு கலர் வரவில்லை..அடுத்த முறை மீண்டும் முயற்சித்துப்பார்க்கவேண்டும், மணத்தக்காளி வற்றலுடன். ;) நாமள்ளாம் ஆரு..கஜினி முகம்மது பரம்பரையில்ல? சீக்கிரமா செய்து அந்தப் படத்தையும் போடறேன் பாருங்க!! :D

LinkWithin

Related Posts with Thumbnails