Sunday, November 30, 2014

வெங்காயத்தாள் பருப்பு & வெங்காயத்தாள்-முட்டை பொரியல்

சிலபல மாதங்கள் முன் கடையில் வாங்கிவந்த ஸ்ப்ரிங் ஆனியனின் வேர்களைத் தொட்டியில் நட்டு வளர்ப்பதைப் பற்றி இங்கே எழுதியிருந்தேன். அந்த வெங்காயத்தாள்களை ஒரு முறை (வேரை விட்டுவிட்டு) நறுக்கி சமைத்தேன். பிறகு நேரமில்லாமல் அப்படியே விட்டிருந்தேன். 
இப்போது ஊருக்குப் போய்விட்டு வந்த போது ஒரு தொட்டியில் இருந்த வெ.தாள்கள் ரொம்பவே போஷாக்காக:) வளரத்துவங்கின.
 பறித்து சமைப்போம் என பசுமையான தாள்களை மட்டிலும் (வேரை விட்டுவிட்டு) நறுக்கி எடுத்தேன்..
நறுக்கும்போது தெரியவில்லை, உள்ளே கொணர்ந்து கழுவி எடுத்ததும் ஒரே முறையில் சமைத்து தீர்க்க முடியாது எனத்தோன்றியதால் இரண்டு ரெசிப்பிகள்  உருவெடுத்து உங்களைக் காண வருகின்றன.

வெங்காயத்தாள் பருப்பு ( step-by-step படங்களுடன் ஆங்கிலத்தில் ரெசிப்பி இங்கே)
தேவையான பொருட்கள்
வேகவைத்த பாசிப்பருப்பு (1/4 கப் பாசிப்பருப்பை தேவையான தண்ணீர் விட்டு குழைய வேகவைத்துக்கொள்ளவும்)
நறுக்கிய வெங்காயத்தாள்-1/2கப்
சீரகம்-1டீஸ்பூன்
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
வர மிளகாய்-3
பச்சைமிளகாய்-1
எண்ணெய்
உப்பு
நெய்-1டீஸ்பூன்

செய்முறை
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து சீரகம் தாளித்து, பச்சைமிளகாய்-வரமிளகாய் சேர்க்கவும். சில விநாடிகளின் பின்னர் நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு மற்றும் மஞ்சள்தூள் சேர்த்து குறைந்த தீயில் ஓரிரு நிமிடம் வதக்கவும்.
வெந்து மசித்த பருப்பினைச் சேர்த்து ஒரு கொதி விடவும்.
அடுப்பிலிருந்து இறக்கி நெய்யை மேலாகச் சேர்த்து சூடாகப் பரிமாறவும்.
~~~
வெ.தாள்-முட்டை பொரியல் (இந்தப் பொரியலில் முட்டைக்கு பதிலாக தேங்காய்த் துருவல் சேர்த்தும் செய்யலாம். அதற்கான குறிப்பு ஆங்கிலத்தில் இங்கே)
தேவையான பொருட்கள்
நறுக்கிய வெங்காயம் -1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-4 (காரத்துக்கேற்ப)
சுத்தம் செய்து நறுக்கிய வெ.தாள்-1கப்
கடுகு-1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு- தலா 1/2டீஸ்பூன்
முட்டை -1
உப்பு
எண்ணெய்

செய்முறை
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து, க.பருப்பு-உ.பருப்பு சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். பிறகு நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து லேசாக வதக்கிவிட்டு, நறுக்கிய வெங்காயத்தாளைச் சேர்க்கவும்.
வெங்காயத்தாள் சில நிமிடங்களிலேயே வதங்கிவிடும். பிறகு முட்டையை உடைத்து ஊற்றி கிளறிவிடவும்.
முட்டை வெந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.
சுடுசாதத்தில் அப்படியே பிசைந்து சாப்பிட நன்றாக இருக்கும். பொரியலாகவும், சப்பாத்திக்குத் தொட்டு சாப்பிடவும் நன்றாக இருக்கும். 

Monday, November 24, 2014

இது என்ன?...- "ஆப்பிள்" கூடை

ஆப்பிள் கூடை
இது என்ன?
கண்டுபிடிங்களேன்...
பதில்களைப் பார்த்தபிறகு இது என்னவென்று அப்டேட் பண்ணுகிறேன்!
நன்றி, வணக்கம்!
~~~
முதலில் தாமதமான அப்டேட்டிற்கு ஒரு சாரி...கண்டுபிடியுங்கள் பதிவைப் போட்ட மறுநாளே பழக்கூடையை வெளியிடவேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் லயாவின் அம்மாவால் நினைத்ததை எல்லாம் நினைத்த நேரத்தில் செய்ய முடிவதில்லை..ஹிஹி! ;)

கருத்துப்பெட்டியில் பலர் சரியான விடையைக் கூறியிருந்தீங்க..அனானி ஒருவர் இமேஜ் சர்ச் செய்து படங்களின் லிங்கையே இணைத்திருந்தார். பாராட்டுக்கள்! :)
கோவையில் ராஜஸ்தானி எக்ஸிபிஷனில் வாங்கிவந்தது இந்த ஆப்பிள் வடிவிலான ஆப்பிள் பழக்கூடை இது. முதலில் நான் பார்த்தது கட்டிங் போர்ட் மாதிரியான வடிவில்தான், கூடையில் கைப்பிடியைப் பிடித்து ஒரு உதறு உதறினால் அழகான பழக்கூடையாகிவிடுகின்றது. :)

மரத்தாலான அழகழகான கைவினைப்பொருட்கள் அங்கே இருந்தன. என்னவர் இங்கே வரும் நாளன்று அவசரமாகச் சென்று வாங்கிவந்த பொருட்களில் சில இவை..இன்னும் சில எழிலான விநாயகர் சிலைகளை இங்கே நண்பர்களுக்குக் கொடுத்தோம்.
 உப்பு-மிளகு தூவிகள், சந்தனம்-குங்கும கிண்ணங்கள்..
 காந்தித் தாத்தா பொம்மைகள் மற்றும் விநாயகர் சிலைகள்!

நன்றி, மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்! 

Saturday, November 15, 2014

இந்த நாள், இனிய நாள்...!!

இன்றைக்குச் சரியாக 365 நாட்களுக்கு முன்பாக..
எங்கள் வாழ்க்கைத் தோட்டத்தில் வசந்தம் வீச..
 கை-கால் முளைத்த ரோஜாப்பூச்செடி ஒன்று கையில் கிடைத்தது!

இளஞ்சிவப்பு நிறத்தில், தலைகொள்ளா முடியோடு, பவள நிற உதடுகளோடு 
எங்கள் தேவதை காலை 9.45 மணிக்கு எங்களை ஆசீர்வதிக்க முதல் குரலெழுப்பினாள்! :)
இன்னொரு அப்பாவும் அம்மாவும் இந்த உலகத்தில் பிறந்தனர்! :) :) 

நொடிகள் நிமிடங்களாகி, நிமிடங்கள் மணிகளாகி, மணிகள் நாட்களாகி
நாட்கள் மாதங்களாகி, மாதங்கள் பன்னிரண்டும் கடந்துவிட்டன இன்று!
கைக்குள் அடங்கிக் கிடந்த முல்லைப்பூ இன்று வீடெங்கும் தவழ்ந்து வாசம் வீசுகிறது!

எங்கள் வாழ்விற்கு அனுதினமும் புதுப்புது அர்த்தங்களைப் புரியவைக்க வந்த என் மகளே, 
பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாண்டு பல்லாயிரத்தாண்டு நீ நலம் வாழ்கவே! 


இந்த வலைப்பூவுக்கு வருகைதரும் அன்புள்ளங்கள் தம் அன்பான ஆசிகளை, வாழ்த்துகளை லயாவிற்கும் லயாவின் குடும்பத்தினருக்கும் தருவீர்கள் என்றுணர்ந்து எங்கள் உள்ளத்தினின்றும் இப்பொழுதே நன்றிகள் நவில்கிறோம் அனைவருக்கும்!  
பிறந்தநாள் விழாவிலிருந்து ஐஸ்க்ரீம் கேக்...ருசியுங்கள்! 
:)
நன்றி! 

Monday, November 10, 2014

ரோஜா..ரோஜா..ரோஜாப்பூ!!

எங்கள் தொட்டித் தோட்ட ரோஜாக்கள்...ஊருக்குப் போய்வந்த பின்னர் என் கவனிப்பில் உவகை கொண்டு..
குட்டிக் குட்டிப் பூக்கள் பூத்து..
எங்களை மகிழ்விக்கின்றன. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது போல ரோசாக்கள் சிறியவை எனினும் எழிலுக்குக் குறைவில்லை! :)
மேலே உள்ள பூக்களின் வண்ணம் எனக்கு மிகப்பிடித்த வண்ணம்.

அடுத்து வருபவை செந்நிற ரோஜாக்கள்..2010-ஆம் ஆண்டு 99 காசுக்கு ஒரு செடி என இரு செடிகள் வாங்கிவந்தேன்..
ஆண்டுகள் நான்கு கடந்த பின்னரும் பொலிவு குறையாமல் புன்னகை புரியும் பூக்களிவை!

கதிரவனின் ஒளியில் குளித்தவாறே என் படங்களுக்கு மென்னகை புரிந்த பூக்கள்..
கடேசிப் பன்ச்..!! :))))) என் ஆல்டைம் ஃபேவரிட் மஞ்ச ரோசாஆஆஆ!
பூக்களை ரசித்துப் புன்னகைப் பூக்கள் சிந்தப்போகும் அனைவருக்கும் அட்வான்ஸ் நன்றிகள்! :)

LinkWithin

Related Posts with Thumbnails