Tuesday, December 24, 2013

வாழ்த்துக்கள்!

மலரப்போகும் 2014 அனைவருக்கும் நலம்-வளம்-மகிழ்ச்சியை அனுதினமும் அள்ளி வழங்க எங்களின் இனிய வாழ்த்துக்கள்!
~~
Wish You All a Very Happy New Year! 
~~


கிறிஸ்துமஸ் கொண்டாடும் அனைவருக்கும் இயேசு பாலன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
~~

Saturday, December 21, 2013

நன்றி..

கண்மூடிக் கண் திறப்பதற்குள்...
நான்கு லட்சம் என்ற எண்ணிக்கையைக் 
கடந்திருந்த பார்வையாளர் வருகை
ஐந்து லட்சங்களைக் கடந்துவிட்டது! :) 
அடிக்கடி வலைப்பக்கம் வராத காரணத்தால்
5,00,000 என்ற எண்ணை கேமராவில்
பிடிக்க முடியவில்லை!  அதனாலென்ன..
எண்கள் கண்ணாமூச்சி விளையாடினாலும் 
மகிழ்ச்சி மாறாதது!! 
வடை-பாயசத்துடன் நன்றி! :)
~~~
சமீபத்தில் வீடு மாறியிருக்கிறோம். ஜீனோவுக்குப் புதுவீடு மிகப்பிடித்துவிட்டது. அவர் ஓடி விளையாட நிறைய இடமிருப்பதால் தலை தெறிக்க ஓடிப்பிடித்து விளையாடினார்கள்..
பால் காயுது..
பால் பொங்கியாச்சு! 
அன்பேக்கிங் வேலைகள் நடக்கின்றன. நாளும் பொழுதும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஓடுகின்றன. வலைப்பூவை உயிரோட்டத்துடன் வைக்க வேண்டி கையில் கிடைத்த படங்களுடன் ஒரு பதிவைத் தேத்தியிருக்கிறேன். ஹிஹி...
~~~
பாப்புவின் சைல்ட்-ஸீட் வீடு வந்தபோது ஜீனோவின் வரவேற்பு...
குட்டித் தங்கையின் சின்னச் சத்தங்கள் க்யூரியஸ் ஜீனோவின் க்யூரியாஸிட்டியை இன்னும் உச்சத்துக்குக் கொண்டுபோகின்றன! :) 
வீடு மாற்றம், புதுவரவு என்று நாங்கள் எல்லாரும் கொஞ்சம் பிஸியாக இருக்கவே ஜீனோ தன் இடத்தை தானே தெரிவு செய்து கொண்டார். அவ்வ்வ்வ்!
க்ரிஸ்லி: பாவம் குட்டிப் பையன், என்ர மடில வந்து படுத்துகிட்டான், அவனும் இன்னும் பேபிதானே? 
அப்புச்சி:ஆமாமாம், சின்னப்புள்ள, ஏங்கிப் போயிருமல்ல? 
டெடி:சரி, சரி....ரொம்ப சென்டிமெண்ட் போடாம எல்லாரும் அமைதியா இருங்கப்பா! ஜீனோ கொஞ்சம் தூங்கட்டும்! 
இந்தாட்களின் கலாட்டாக்களை இன்னும் படிக்க விரும்பினால்,  டாய் ஸ்டோரி, டாய் ஸ்டோரி- 2, டாய் ஸ்டோரி-3 இவற்றை படித்து பாருங்க. நன்றி! 

Wednesday, December 11, 2013

ரசித்த பாடல்கள்..

கோவை வானொலியில் தினமும் காலை 6 மணி முதல் 6.45 வரை "பக்தி இசை" ஒலிபரப்பாகும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் பாடல்கள் தலா ஒவ்வொன்று ஒலிபரப்புவார்கள். அப்படி வரும் பாடல்களில் ஒன்றுதான் இது. பின்னணி இசையோ, வேறு எந்த இசைக்கருவிகளோ இல்லாமல், எஸ்.பி.ஷைலஜா அவர்களின் தேன் போன்ற குரலில் இனிமையானதொரு பாடலிது. பாடலைக் கேட்கையில் மனதில் ஒரு அமைதியையும் நிறைவும் தோன்றுமெனக்கு. பலநாட்களாக இணையத்தில் தேடியும் ஒலி வடிவமோ, வரி வடிவமோ அகப்படவில்லை! என் அதிர்ஷ்டம்,  ஊரிலிருந்து மாமா-அத்தை வந்தவர்கள் மனதில் மனப்பாடமாக இருந்த பாடல் வரிகள் கிடைத்தன! :) நான் ரசித்தவற்றை பகிர்வது வழக்கம் என்ற வகையில், நீங்களும் ரசிக்க அந்த வரிகள் இதோ...

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

தாமரைத் தாள்களையே ஏழை மனம் நினைக்கும்..
செண்பகப்பூ மணக்கும் அம்பிகையே வணக்கம்!

காலிலிரு கிண்கிணிச் சதங்கைமணி ஒலிக்கும்..
தாளலய பேதமதில் கோலங்கள் பிறக்கும்!

இடைதுவள சிற்றாடை எழில் காட்டும் உன்னை..
இருவிழிகள் இமையாது பருகுவதும் உண்மை!

வளைகுலுங்க வளைந்தசைந்து அலைபுரளும் கரங்கள்..
வரமளிக்க அருகழைக்கும் நவமணிச் சரங்கள்!

கொத்துவட முத்துக்கள் கொஞ்சுகின்ற மார்பு..
கொடுக்கின்ற குளிர்ச்சியல்லால் வேறேது சால்பு?

கற்றைஒளி ரத்தினங்கள் கழுத்தாட ஆடும்..
காதணியைக் கண்கள் என்று கருவண்டு தேடும்!

மாணிக்க மூக்குத்தி மஞ்சள்முகம் மின்ன..
தேனிதழ்கள் விரிந்திருக்கும் செம்பவளம் என்ன?

பால் வழியும் புன்னகைக்கு ஏதுமில்லை ஈடு...
பார்வதி நீ தவம் செய்யும் காரணம்தான் ஏது?

அழகெல்லாம் தவழ்கின்ற அற்புதமே வணக்கம்..
அன்னை கன்யாகுமரி கண்மணியே வணக்கம்!

-----
பாடல் வரிகளில் ஒரு சில வார்த்தைகள் மாறியிருக்க வாய்ப்பிருக்கலாம். சிலவரிகள் காணவில்லையா, அல்லது முழுப் பாடலும் இதுதானா என்ற கேள்வியுமிருக்கிறது. தெரிந்தவர்கள் சொன்னால் நன்றாக இருக்கும். சொல்வீர்கள் என நம்புகிறேன்! :)
-----
அடுத்து வரும் பாடல் பி.சுசீலா அவர்கள் குரலில் இன்னொரு இனிய பாடல்..

"என் மூச்சில் சுவாசிக்கும் புல்லாங்குழல்"- வந்தபின் அவளுக்காய்த் தேடியபோது சிக்கிய இசைமுத்துக்கள் இவை..என் மனப்பெட்டகத்தில் சேமித்ததுடன் வலைப்பெட்டகத்திலும் சேர்த்துவைக்கிறேன்! :)

அப்பா பாசத்தை அழகாய்ச் சொல்லும் சில பாடல்கள்...
இளையராஜாவின் இனிய இசையில் இன்னொரு இனிமையான தாலாட்டு...

எனக்குப் பிடித்த பாடல்கள் உங்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன் விடைபெறுகிறேன். அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!  

Thursday, November 28, 2013

புதியதோர் உலகம்..

உலகம் சுருங்குதே..உனக்குள் அடங்குதே..! 
நாளென்ன கோளென்ன தெரியவில்லை..
தேதியென்ன கிழமையென்ன கவனமில்லை! 

தொட்டித்தோட்டம் என்னானது? யார் கண்டார்? 
என் நாலுகால்பிள்ளை சாப்பிட்டானா..வாக் போனானா? எவர் கண்டார்? .
வலைப்பூவில் தினசரி வருகையெப்படி? 
தினந்தோறும் உலவும் வலையுலகம் 
வழக்கப்படிதான் சுற்றுகிறதா? நினைக்கவும் நேரமில்லை! 
பால் வாங்கணுமா..கறிகாய் வேணுமா..நீங்களே பாருங்க.

இரவெது பகலெது புரியவில்லை..
நீ உறங்கும் நேரமெல்லாம் பகலானாலும், 
நீ விழித்திருக்கும் இரவுமெனக்குப் பகலே! 

ஆகமொத்தம், என் உலகம் சுருங்கி, 
உன் சின்ன உருவத்துள் அடங்கிவிட்டதடி! 
முகையான நீ மெல்ல மெல்ல மொட்டாகி, 
மலருகையில் நம்முலகும் மலருமடி! 
அப்போது உன் விரல் பற்றியபடி வலையில் 
உலா வருவோம் பழையபடி! 
இனி வாழ்வின் ஒவ்வொரு நொடியும் நாங்கள் நன்றி கூற ஒரு மிகப்பெரிய பரிசு கிடைத்து இரண்டு வாரமாகிறது! சின்னப் பெண்ணின் சின்னச் சின்னச் சிரிப்புகளிலும், செல்ல அழுகையிலும், ஏன்  ஒவ்வொரு அசைவிலும் என் இதயம் கசிந்து நன்றி நவில்கிறேன் ஆண்டவனுக்கு!
ஹேப்பி தேங்க்ஸ்கிவிங் எவ்ரிபடி! 
முன்போல என் பதிவுக்கு வரும் கருத்துக்களுக்கு நன்றி கூறவோ, மற்ற வலைப்பூக்களுக்கு வந்து கருத்துச் சொல்லவோ நேரமில்லை, இயலவில்லை! ஆனால் நட்பூக்களின் வலைப்பூக்களை கையிலிருக்கும் தொலைபேசி மூலம் பார்த்துக்கொண்டும் படித்துக்கொண்டும்தானிருக்கிறேன். மகியின் கருத்துக்களைக் காணோம் என யாரும் மனம் வருந்த வேண்டாம்!(கொஞ்சம் ஓஓஓஒவரா இருக்கோ? ;) அடக்கி வாசிக்கிறேன் இனி! ;) :))
எங்களை வாழ்த்திய அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய இனிய நன்றிகள்!

Saturday, November 16, 2013

ஒரு பயணம், புதுவரவு, பதவிஉயர்வு & விடுமுறை!

ஒரு பயணம்...
ஒரு நாளில்லை,
ஒரு வாரமில்லை..
ஒரு மாதமில்லை! 
சற்றே நீண்ட நெடும்பயணம்!

பயணத்தின் ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு மணியும்
ஒவ்வொரு நொடியும்
இதயக்கல்லில் செதுக்கிய 
இனிய சிற்பமாய்ப் பதிய..
பயணம் நெடுகவும் 
இடையிடையே
சொந்தங்களும் நட்புக்களும் 
சந்தோஷ கணங்களை 
அள்ளி வழங்க..
வாரங்கள் நாற்பதும் கழிய..
மாதங்கள் ஒன்பதும் முடிய..
 
எங்கள் வாழ்க்கையின் அர்த்தம் சொல்ல, 
பூக்களின் வண்ணம் கொண்டு 
பிறந்திருக்கிறாள் எங்கள் தேவதை! 
We are Blessed with a BABY GIRL! 
:)
 ~~~ 
கணவன் - மனைவியாக இருந்த எங்களுக்கு அப்பா-அம்மா என்ற பதவிஉயர்வையும் செல்லக்குட்டியாய் வலம் வந்த ஜீனோவுக்குபெரியண்ணா என்ற பொறுப்பான:)பதவி உயர்வையும் தந்திருக்கும் எங்கள் மகளை உங்களுக்கு அறிமுகப்படுத்தவும், என் வலைப்பூக்கள் இன்னும் சிலநாட்கள் ஓய்வெடுக்கும் என்று அறிவிக்கவுமே இந்தப் பதிவு!
~~~
 உங்களனைவரின் வாழ்த்துக்களும் ஆசிகளும் எங்களுக்கு வேண்டும். விரைவில் மீண்டும் சந்திப்போம்! உங்கள் பிரார்த்தனைகளில் எங்களையும் சேர்த்துக்கொள்வதற்கு நன்றிகள்!:) :) :)
~~~

Sunday, November 10, 2013

குடைமிளகாய் குழம்பு/(Red) Capicum Gravy

எங்க வீட்டுச் செடியில் காய்த்த குடைமிளகாயைப் பழமாக்கிப் பறித்து...
கடையில் வாங்கிய பச்சை மற்றும் மஞ்சள் வண்ணக் குடைமிளகாய்களுடன் சேர்த்து..
கலர்ஃபுல்லாக ஒரு குழம்பு வைத்து இந்த வாரஇறுதியில் ருசித்தாயிற்று. ருசித்ததை உங்களுடனும் பகிர்ந்துகொள்ளவே இந்தப் பதிவு. :) 
தேவையான பொருட்கள்
நறுக்கிய குடைமிளகாய்-11/2கப்
நறுக்கிய வெங்காயம்-1/4கப்
கெட்டியான புளிக்கரைசல்-1/4கப் 
கடுகு-1/2டீஸ்பூன்
சீரகம்-1/2டீஸ்பூன்
பெருங்காயப்பொடி-1/8டீஸ்பூன்
சர்க்கரை-1/2டீஸ்பூன்
கறிவேப்பிலை, கொத்துமல்லி-கொஞ்சம்
எண்ணெய்
உப்பு 
வதக்கி அரைக்க
எண்ணெய்-1டீஸ்பூன்
வெந்தயம்-5
உளுந்துப் பருப்பு-1டீஸ்பூன்
கொத்தமல்லி (தனியா)-1 டேபிள்ஸ்பூன்
வறுத்த நிலக்கடலை-1டேபிள்ஸ்பூன்
வெள்ளை எள்ளு-1டீஸ்பூன்
தேங்காய்த்துருவல்-2டேபிள்ஸ்பூன்
வரமிளகாய்-5 (காரத்துக்கேற்ப)

செய்முறை
குடைமிளகாய்களை கழுவி, விதைகளில்லாமல் பெரிய துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
எண்ணெய் காயவைத்து வதக்கி அரைக்க வேண்டிய பொருட்களை கருகாமல் வதக்கி ஆறவைக்கவும்.
ஆறியதும் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்துவைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கடுகு, சீரகம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும்வரை வதக்கவும். பிறகு நறுக்கிய குடைமிளகாய்த்துண்டுகளைச் சேர்க்கவும்.
அடுப்பில் தீயை அதிகரித்து, குடைமிளகாய் ஓரளவு வதங்கியதும் புளிக்கரைசலைச் சேர்த்து கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்ததும் அரைத்த மசாலாவைச் சேர்க்கவும்.
தேவையான உப்பு மற்றும் தண்ணீரைச் சேர்த்து கொதிக்கவிடவும்.(தண்ணீர் சேர்ப்பது உங்கள் விருப்பம்,    திக்கான க்ரேவியாக வேண்டுமென்றால் கொஞ்சமாகத் தண்ணீர் விடலாம், நான் கொஞ்சம் தாராளமாகவே தண்ணீர் சேர்த்து செய்திருக்கிறேன்.)
குழம்பு நன்றாக கொதித்து மசாலாவின் வாசம் அடங்கியதும் தீயை ஸிம்-மில் வைத்து கொதிக்கவிடவும்.
குழம்பு விரும்பிய பக்குவத்திற்கு சுண்டி எண்ணெய் மிதந்து வந்ததும்,  நறுக்கிய கொத்துமல்லித் தழை, சர்க்கரை சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும்.
சுவையான கலர்ஃபுல் குடமிளகாய் குழம்பு தயார்.  குழம்பு செய்து ஒரு மணி நேரம், 2 மணி நேரம் கழித்து பரிமாறினால் புளிப்புச் சுவை நன்றாகச் சேர்ந்து சூப்பராக இருக்கும். :)
இந்தக் குழம்பு ஆறியதும்  கொஞ்சம் கெட்டியாகும் வாய்ப்பு உண்டு, எனவே தண்ணீர் அளவை பார்த்து வைத்துக்கொள்ளவும்.
இந்த கலர்ஃபுல் குடைமிளகாய் குழம்பு புலாவ், பிரியாணி, இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றுக்கும் மிகப் பொருத்தமாக இருக்கும். இந்தக் குழம்புடன் எங்க வீட்டில் ஜோடி சேர்ந்தது மைல்ட் வெஜிடபிள் புலாவ். :) 

Tuesday, November 5, 2013

தோட்டம், பூக்கள்..

அக்டோபரில் தொட்டித்தோட்ட மலர்கள், மஞ்சள் நிற இளவெயிலில் ஒயிலாக கேமராவுக்கு போஸ் கொடுத்த ஆரஞ்சு ரோசா..
~~
வானமகள் தெளித்த பன்னீரில் தலைகுளித்து, மழைத்துளிகளையே ஆபரணமாகப் பூண்டு புன்னகை புரியும் என் வீட்டு ரோஜாமகள்! ...
மொட்டில் ஒரு நிறம்..மொட்டு மலர மலர நிறங்கள் கண்ணாமூச்சி ஆடுகின்றன இந்த ரோஜாச்செடியில்..
ஒரு மாலை நேர மதிமயக்கும் வெயிலில் என் மதியை மயக்கிய ரோஜாக்கள்..

பொதுவாகப் பூக்களைப் பறிக்காமல் ரசிப்பதே என் வழக்கம். :) ஆனால் அம்மா சொல்வாங்க, "ஒரு பெண், பூ பூத்திருக்கும் செடியைக் கடந்து செல்கையில்,  செடியில் மலர்ந்திருக்கும் ஒரு பூவையாவது பறித்து தலையில் சூடாமல் சென்றால், செடி வருத்தப்படுமாம்! இத்தனை பூக்கள் பூத்திருக்கிறேன், ஒரு பூவையாவது பறித்துச் சூடாமல் செல்கிறாளே இந்தப் பெண் என்று!" :)))) அந்த நினைவு வந்த ஒரு நாளில் ரோஜாக்கள் எல்லாம் செடியை விட்டு விடுதலை பெற்றன. 

எப்படி இருக்கிறது எங்க வீட்டு ரோஜாக்கூட்டம்?
:)
~~
மழைநீரில் நனைந்து நகை சிந்தும் ஜெரேனியம்..இது செடியில் வந்த 2வது மலர்க்கொத்து..மூன்றாம் கொத்தும் ஆன் த வே! :)
~~
கொலாஜில் இருப்பது "பூவாகிப் பிஞ்சாகிக் காயான ஒரே கத்தரிக்காய்" என்று நீங்கள் நினைத்தால்..... :)))) ஹிஹ்ஹிஹிஹ்ஹி....இல்லீங்கோ!! ஒவ்வொன்றும் ஒவ்வொரு தனித்தனி காய்கள். இப்போதைக்கு ஒரு கத்தரிதான் முற்றி பறிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. "பொண்ணு கிடைச்சாலும் புதன் கிடைக்காது" என்ற பழமொழி நினைவு வரவே நாளைக்கு பறிக்கலாம்(இங்கே இப்போது செவ்வாய் மாலைதான்! :)) என இருக்கிறேன். பறித்த பிறகு என்ன சமைத்தேன் என அப்டேட் செய்கிறேன்.
~~
கத்தரிக் கதையைப் படித்து உஷாராகி, மகி வீட்டில இவ்ளோஓஓஓஓஓஓஓ குடைமிளகாய்கள் காச்சிருச்சு-அப்படின்னு நீங்க நினைச்சா.......:)))) ஹிஹ்ஹிஹிஹ்ஹி....இல்லீங்கோ!! இது ஒரே குடைமிளகாய்தான்! அப்பப்ப எடுத்த பல படங்கள், காய் ஒன்றே ஒன்றுதான்.  முதலில் லேசாக முகம் சிவந்து, பிறகு மெல்ல மெல்ல உடலெல்லாம் சிவப்பு பரவப் பழுத்து புதன் அறுவடைக்குத் தயாராய்..
மிளகாய்ப் பழத்துக்குப் பதிலாக இலைகள் ஃபோகஸ் ஆகிட்டுது, அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க! ;)
~~
சீஸன் முடியும் தருவாய் என எண்ணும்படியாக மணத்தக்காளிச் செடி நோஞ்சானாகி, பூச்சித்தாக்குதலில் நோயுற்று நிற்கிறது. இதுவரை பலமுறை மணத்தக்காளிக்காய்களைப் பறித்தாயிற்று. அவற்றில் ஒருபகுதி...
~~
99 காசு கடைக்கு ஒரு விசிட் அடித்தபொழுது கிடைத்த மிளகாய், பேஸில், தக்காளி (விட மாட்டம்ல..தக்காளியா, மகியா? ஒரு கை பாத்துருவோம்னு ஒரு செடியை வாங்கிட்டேன்! ;)) செடிகள்.
பெரிய தொட்டிகளில் மாற்றியும் வைத்தாயிற்று. 
குளிர் அவ்வப்போது தீவிரமாகவும், அவ்வப்போது மிதமாகவும் அடித்துக்கொண்டிருக்கிற காரணத்தால் செடிகளின் வளர்ச்சி எப்படி இருக்கும் என்பது பற்றி பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும். 

செம்பருத்திப் பெண்ணின் சிரிப்பு... :) 
மேலே உள்ள மணத்தக்காளிக்காயில் வைத்த புளிக்குழம்புடன் கம்புதோசை..
நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails