Thursday, June 28, 2012

உருளை - குடைமிளகாய் மசாலா / ஆலூ-கேப்ஸிகம் மசாலா

ஆலூ-கேப்ஸிகம் மசாலா செய்முறையைப் பார்க்கும் முன், எங்க வீட்டு தக்காளியின் விளைச்சலை ஒரு பார்வை பார்த்துட்டு அப்புறம் சமைக்கப் போலாம்! :) ஒரு தக்காளிச் செடியை தொட்டியில் வளர்த்தாலும், அந்தச் செடி எண்ணி அஞ்சு காய் காய்ச்சாலும், நம்ம வீட்டுத் தக்காளி ஸ்பெஷல்தான், காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு! கரெக்ட்தானே? :))

இந்த உருளை-குடைமிளகாய் மசாலா யாஸ்மின் அவங்க குறிப்பில் பார்த்து செய்தேன். அவங்க போட்டிருந்த சில பொருட்கள் கைவசம் இல்லாததால் வழமை போல, நம்ம இஷ்டப்படி கொஞ்சம் அங்க இங்க மாத்தி செய்தது. கலர்ஃபுல் & டேஸ்ட்டியா இருந்தது.
தேவையான பொருட்கள்
வேகவைத்த உருளை கிழங்கு -1
கலர் குடைமிளகாய்- 11/2
[மஞ்சள் கலர் பாதி, சிவப்பு பாதி, பச்சை பாதி..மொத்தம் 11/2 மிளகா, கணக்கு சரியாகிருச்சா? ;) ]
பச்சைமிளகாய்-1
[பச்சைக்கலர்ல இல்லையேன்னு படத்தில தேடக்கூடாது. பழமிளகாய் போட்டிருக்கேன், செக்கச்செவேர்னு வெங்காயத்துக் கூட மின்னும், பாருங்க! ;)]
தக்காளி (சிறியதாக) -1
[நான் மேலே படத்தில் இருக்கும் எல்லாத் தக்காளிகளையும் சேர்த்தேன்]
வெங்காயம் -1
கறிவேப்பிலை-கொத்தமல்லி தழை - கொஞ்சம்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
மிளகாய்த்தூள் -1 டீஸ்பூன்
கறிமசாலா - 1 டீஸ்பூன்
கடுகு -1/2டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு
அரைக்க
தேங்காய்த் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
பொட்டுக் கடலை - 2 டீஸ்பூன்
வரமிளகாய் -3
சீரகம் -1டீஸ்பூன்

செய்முறை
தேங்காய் -வரமிளகாய்- பொட்டுக்கடலை -சீரகம் இவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைஸாக அரைத்து வைக்கவும்.
வெந்த உருளை கிழங்கை தோல் உரித்துவிட்டு, பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
குடைமிளகாய்களையும் பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு, கறிவேப்பிலை தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
நறுக்கிய தக்காளியும் சேர்த்து குழையும் வரை வதக்கவும்.

தக்காளி குழைந்து மசிந்ததும் மஞ்சள்தூள் - மிளகாய்த் தூள் - கறிமசாலா -தேவையான உப்பு சேர்த்து வதக்கவும். பொடிகளின் பச்சை வாசம் அடங்கியதும் நறுக்கிய காய்கறித் துண்டங்களை சேர்க்கவும்.

காய்கள் சேர்த்து கிளறிவிட்டு, ஓரிரு நிமிடங்களில் அரைத்த தேங்காய் விழுதைச் சேர்க்கவும்.

கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு, மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
மசாலா நன்கு கொதிவந்ததும் கொத்துமல்லித் தழை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.

சப்பாத்தியுடன் சாப்பிட மசாலா கெட்டியாக இருக்கட்டும் என்று கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு செய்திருக்கிறேன். உங்கள் விருப்பப்படி தண்ணீர் அளவினை கூட்டி க்ரேவியாக செய்துகொள்ளலாம்.

மறுபடியும் ஒருமுறை தக்காளிப் பழங்கள்... :))) பின்னே? லேபிள்ல தோட்டம்னு குறிப்பிட்டிருக்கேன், கொஞ்சமாவது அதுக்கு சம்பந்தம் இருக்கணுமில்ல? பேக்ரவுண்டில குட்டி தக்காளிப் பழங்கள் குடுத்த குட்டிச் செடியும் தெரியுது பாருங்க..
...என்னது செடி தெரியலையா? கஷ்டப்ப்ப்பட்டுப் எட்டிப் பாருங்களேன், கண்டிப்பா தெரியும்!

குட்டிச் செடி இரண்டாவது முறையும் 5 பழம் பழுத்துவிட்டது. ஹேண்ட் ஃபுல் ஆஃப் தக்காளிப் பழங்கள்...அதாங்க 10 பழங்கள் அறுவடை(!) செய்துட்டேன்னு பெருமையாச் சொல்லிக்கறேன். :))))

Monday, June 25, 2012

தேங்காய்ப்பால் கடல்பாசி

தேங்காய்ப்பால் கடல்பாசி / அகர்-அகர் வித் கோக்கனட் மில்க் / சைனா க்ராஸ் வித் கோக்கனட் மில்க் /
Agar-agar/ China grass with Coconut milk

தேவையான பொருட்கள்

கடல் பாசி/ அகர் அகர் / சைனா க்ராஸ் - 15 இழைகள்
சர்க்கரை - 1/4கப்
தேங்காய்பால் பவுடர் - 2டேபிள்ஸ்பூன் ( அரைகப் சுடுநீரில் கரைத்தது) அல்லது தேங்காய்ப் பால் -1/2கப்
புட் கலர்ஸ்

செய்முறை
கடல்பாசியை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் 8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த கடல்பாசி கரையும்வரை அடுப்பில் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
(கிட்டத்தட்ட 25 நிமிடங்கள், on low medium heat).

அகர்-அகர் முழுவதும் கரைந்ததும் சர்க்கரை சேர்த்து கலக்கி, தீயை குறைத்துக்கொண்டு தேங்காய்ப் பாலையும் சேர்க்கவும்.

சில நிமிடங்களில் அடுப்பிலிருந்து இறக்கி, சல்லடையால் வடிகட்டவும்.
விரும்பிய வண்ணங்கள்சேர்த்து கலக்கி ஆறவைக்கவும்.

நான் பச்சை சிவப்பு 2 நிறங்களும் சேர்த்தேன். கலவை ஆறியதும் ஐஸ் கியூப் ட்ரேயில் ஊற்றி குளிரூட்டியில் வைத்திருக்கிறேன். குறைந்தது 2 மணி நேரம் குளிர்ந்ததும் ஐஸ் க்யூப் ட்ரேக்களில் இருந்து கடல்பாசி நட்சத்திரங்களை பெயர்த்து எடுத்து காற்றுப்புகாத டப்பாக்களில் போட்டு ஃப்ரிட்ஜிலேயே வைத்து, தேவைக்கேற்ப எடுத்து ருசிக்கலாம்.

அச்சுக்களில் ஊற்றி உறைய வைப்பதற்கு பதிலாக கலவை ஆறியதும் அகலமான தட்டுக்களில் ஊற்றி ஆறவிட்டு கத்தியால் விரும்பிய வடிவில் நறுக்கியும் வைக்கலாம்.

தேங்காய்ப் பால் சேர்த்ததால் வண்ணங்கள் பளிச் என்று வராமல் கொஞ்சம் glossy look-ல் இருக்கிறது. சிவப்பு என்று நினைத்தது பிங்க் கலர் ஆகிவிட்டது. எப்படி பளிச் வண்ணங்கள் கொண்டுவருவது என்று அடுத்து தேடவேண்டும். ;)

Friday, June 22, 2012

எங்கே செல்லும் இந்தப் பாதை?..

சேது படத்தில் வரும் "எங்கே செல்லும் இந்தப் பாதை?.." பாடலைக் கேட்டால் இதயத்தை அழுத்திப் பிழிவது போன்ற ஒரு வலி ஏற்படும். மேலே இருக்கும் அந்த ஃபோட்டோவைப் பார்க்கையிலும் அது போன்ற ஒரு வார்த்தைகளில் விவரிக்க முடியாத உணர்வு வரும் எனக்கு! :) ;) பயப்படாதீங்க, இது சோகமான பதிவெல்லாம் இல்லை, வழக்கம் போல feel good பதிவுதான்! தைரியமா மேற்கொண்டு படிக்கலாம். அடுத்த கொலாஜ்-ஐப் பார்த்த உடனே கண்டுபிடிச்சிருப்பீங்க, அந்தப் பாதை எங்கே சென்று சேர்ந்திருக்கிறது என்று!

இது இங்கே அருகில், கிட்டத்தட்ட காட்டுக்குள் இருக்கும் ராமகிருஷ்ணா மடம். அதற்குச் செல்லும் பாதைதான் அப்படி வளைந்து நெளிந்து சென்றது. அதிலே சற்றே வேகமாக என்னவர் காரை ஓட்டிக்கொண்டிருக்க, தலை சுற்றுவது போன்ற உணர்வுடனே நான் க்ளிக்கிய படம்தான் பதிவின் முதல் படம். :)

வனப்பகுதியில் ஒரு சிறிய குன்றின் மேல் அமைதியான சூழ்நிலையில் இருக்கிறது இந்த மடம். இந்தியாவை நினைவு படுத்தும் அழகான வளைவுகளோடு கூடிய செங்கல் கட்டடங்கள், சிறிய செய்குளத்தின் நடுவில் வீற்றிருக்கும் விவேகானந்தர், குளம் முழுக்க வளர்ந்திருக்கும் அல்லிமலர்ச் செடிகள், அங்கே இசை பாடும் தேனீக்கள், நீந்தும் வண்ண மீன்கள், சற்றே நகர்ந்து பார்த்தால் இயற்கையன்னை பச்சைக்கம்பளம் விரித்து வைத்திருக்கும் சமவெளி என்று பரந்து விரிந்து கிடக்கும் இடமிது.

இந்த வீட்டைப் பார்க்கையில் நம்ம ஊர் கிராமத்து வீடு நினைவு வருகிறது. மடத்தில் பெரும்பாலும் இந்திய சாயலோடு, பெயர்களோடு அமெரிக்கர்களே இருக்கிறார்கள். மாயா-சாது என்ற இரண்டு பெரீஈஈஈய்ய பைரவர்கள் இருக்கிறார்கள். முதல் பார்வையில் பயமூட்டும் தோற்றம் இருந்தாலும் மாயாவும் சாதுவும் ரொம்பவுமே ஃப்ரெண்ட்லி! :)

~~

மடத்தின் வெளியே ஒரு சிறிய ஹைக்கிங் ட்ரெய்ல் இருக்கிறது. ஸ்பிரிச்சுவல் ஹைக் என்று சொல்லும் இந்தப் பாதையில் ஆங்காங்கே ஒவ்வொரு மத சின்னங்களும், அமர்ந்து தியானம் செய்ய/ ஓய்வெடுக்க இருக்கைகளும் இருக்கின்றன. ட்ரெய்ல் முழுவதும் அழகழகான காட்சிகள். ஒவ்வொரு சீசனிலும் ஒவ்வொரு மாதிரியாக இயற்கை பூத்துச் சிரிக்கிறது. மேலே, இடப்பக்கம் இரண்டு படங்களும் கடந்த பிப்ரவரியில் எடுத்தது..வலப்புறம் இருப்பவை இந்த மே மாதம் எடுத்தது. இந்த வரிசை அடுத்த கொலாஜில் vice-versa -வாக மாறிடுச்சு, அட்ஜஸ்ட் பண்ணிகிட்டு பாருங்க! :)

கிட்டத்தட்ட ஒரு மைல் இருக்கும் ஹைக்கிங் ட்ரெய்ல் சில இடங்களில் சற்றே கடினமான ஒற்றையடிப்பாதையாக இருக்கிறது, பலமுறை இங்கே ஹைக்கிங் போய்விட்டோம். எப்பொழுது சென்றாலும் விதவிதமான (மஞ்சள்) மலர்கள் பூத்திருக்கும். இந்த முறை ட்ரெய்ல் முழுக்க கடுகுச் செடிகள் காய் காய்த்திருந்தன. கண்ணைக் கவரும் மஞ்சள் பூக்கள் உங்கள் பார்வைக்கு..

மடத்தில் சிறியதாக ஒரு கடையும் உண்டு. புத்தகங்கள், கடவுளர்கள் சிலைகள், இந்திய ஆடைகள், ஊதுபத்தி மற்றும் அலங்காரப் பொருட்கள், மடத்தின் சிறிய தோட்டத்தில் விளையும் காய்கனிகள் எல்லாம் விற்பனைக்கு இருக்கும். இந்தமுறை நாங்கள் என்ன வாங்கிவந்தோம் தெரியுமா? :)

ஆலிலையில் ஒயிலாக அமர்ந்திருக்கும் ஆனைமுகக் கடவுளை எங்கள் இல்லத்துக்கு அழைத்துவந்திருக்கிறோம்.

ஹ்ம்ம்ம்...பாதை எங்கெங்கோ சுற்றுகிறது..மறுபடி புறப்பட்ட இடத்துக்கே உங்க எல்லாரையும் கொண்டுவந்து விட்டுடறேன்! அதாங்க, மகி கிச்சன்ல இருந்து கிளம்பினீங்க, ஸோ...வெல்கம் பேக் டு மகிஸ் கிச்சன்!

அஃபிஷியலா அமெரிக்க ஸம்மர் சீஸன் ஜூன் 20ஆம் தேதியில இருந்து தொடங்கிருச்சாம், அதனால கூலா இதைச் சாப்பிட்டுட்டுப் போங்க. இது சும்மா ஒரு வெள்ளோட்டம்தான்! என்ன பதார்த்தம்னு யூகிச்சு வைங்க, அடுத்த வாரம் அக்கு வேறு -ஆணி வேறா பிரிச்சு மேய்ஞ்சுரலாம்! :)) ஹேப்பி வீகென்ட் எவ்ரிபடி!

Monday, June 18, 2012

கோதுமை கச்சாயம் (இனிப்பு)

கோதுமைப் பாயசம், கேரளாவில் பிரபலமான இனிப்பு. ஊரில் எங்க வீட்டுப் பக்கத்தில் நிறைய மலையாளிகள் வீடு இருக்கும், என்ன விஷேஷம் என்றாலும் கோதுமைப் பாயசம் செய்துடுவாங்க. பலமுறை ருசி பார்த்திருக்கேன். சிலமுறை வீட்டில் செய்தும் இருக்கோம் என்று நினைவு. பலதிங்களுக்கு முன்பு எங்க(!) மார்க்கட்டில் இந்த கோதுமைப் பேக்கட்டைப் பார்த்ததும் கோதுமைப் பாயசம் நினைவு வர வாங்கிவந்துவிட்டேன்.

குக்கரில் கோதுமையைப் போட்டு வேகவிட்டால், மணிக்கணக்காய் வெந்து எக்கச்சக்க விசில் வந்தபிறகும் கோதுமை வேகாமல் கண்ணை முழிச்சுகிட்டு நின்றது! கோதுமைப்பாயசம் வைக்கப்போறேன் பேர்வழி-ன்னு பந்தாவாய் என்னவரிடம் சொல்லியாச்சு..வேறவழியில்லாமல் அதையே பாயசமாக வைச்சு, நறுக் நறுக்குன்னு கோதுமை சாப்பிட்டவாறே பாயசம் குடிச்சோம். அதன் பின்னர், இந்த கோதுமை இருப்பதே சுத்தமாய் மறந்துபோய்விட்டது. வேற ஏதாச்சும் செய்யலாம்னு ஒரு சில சமயம் தோணினாலும், சூடு கண்ட பூனையாய் அப்படியே வைச்சிருந்தேன். ஒருநாள் வெற்றிகரமா அம்மாவிடம் தொலைபேசியில் சந்தேகம் கேட்டுகிட்டு அடுத்த எக்ஸ்பெரிமென்ட்டை துவங்கினேன்!

வறட்டு கோதுமையை அப்படியே போட்டு கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து, இறுதியாக வெல்லம் -ஏலக்காயும் சேர்த்து அரைத்தெடுத்து கச்சாயமாக சுடுவாங்க. இனிப்புக்கு பதிலாக வரமிளகாய்-சீரகம் சேர்த்து அரைச்சு, வெங்காயம் அரிஞ்சு போட்டு காரக் கச்சாயமும் செய்வதுண்டு. சரிவருமா வராதா என்ற சந்தேகத்திலயே ஆரம்பிச்சேன். கச்சாயத்தை சுட்டு எடுத்துவைக்கும் வரை சந்தேகம் அப்படியே இருந்தது. கரெக்ட்டாக என்னவரும், பக்கத்து வீட்டு நண்பர்களும் பரிசோதனை எலிகளாக வந்தார்கள். தட்டுல வைச்சு, போட்டோ கூட சரியா எடுக்கலை, அப்படியே திகிலோடு தட்டை அவங்க கையில் கொடுத்தேன்!

சூப்பரா இருக்கு கச்சாயம் என்று அடுத்த ஈடு பொரித்து எடுப்பதற்குள் தட்டைக் காலி செய்துவிட்டார்கள்! அதுக்கப்புறம் ப்ளாகுக்கு வருகை தராமல் இருக்குமா கச்சாயம்? :))))
----------
தேவையான பொருட்கள்
கோதுமை -1 கப்
வெல்லம் - 1/2 கப் (இனிப்புக்கேற்ப )
ஏலக்காய்-2
எண்ணெய்

செய்முறை
சுத்தம் செய்த கோதுமையை க்ரைண்டரில் போட்டு, கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து அரைக்கவும். (வெல்லம் சேர்க்கும்போது மாவு இளகிவிடும், அதனால் தண்ணீர் கம்மியாகத் தெளித்து அரைப்பது முக்கியம்)

கோதுமையை ஊறவைக்காமல் போட்டால் அரைபடுமா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. இந்த unpelted wheat வேறு ஏதாவது(!)க்கு உபயோகிக்கும் கோதுமையோ என்னவோ தெரியவில்லை, ஜவ்வு மாதிரி எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துகொண்டே இருந்தது. நானும் சலிக்காமல் ஸ்பூன் வைச்சு பிரிச்சு பிரிச்சு தள்ளி விட்டுகிட்டே இருந்தேன். ஒரு கட்டத்தில், போகாத ஊருக்கு வழி தேடுகிறோமோ என்றே தோன்ற ஆரம்பிச்சது. ஆனாலும் விடாமல் அரைமணி நேரத்துக்கும் மேலாக அரைச்சு ஒரு வழிக்கு கொண்டுவந்துட்டமில்ல?! :)

அரைகப் பொடித்த வெல்லத்தையும் சேர்த்து அரைத்து..2 ஏலக்காயும் தட்டிப் போட்டு கச்சாயத்துக்கு மாவு தயாராகிவிட்டது.

மிதமான சூட்டில் எண்ணெய் காயவிட்டு, கோதுமைமாவை ஸ்பூனால் எடுத்து ஊற்றி...

ஒரு புறம் வெந்ததும் திருப்பிவிட்டு, கச்சாயங்கள் பொன்னிறமானதும் எடுத்து பேப்பர் டவலில் வைக்கவும்.
சுவையான கோதுமைக்கச்சாயம் ரெடி! கச்சாயம், பொன்னிறமாவேண்டும் என்பதைவிடவும், கொஞ்சம் நல்லாவே டார்க் ப்ரவுன் கலர் ஆகும்வரை வேகவைத்து எடுத்தால் நன்று.

இன்னுமொரு விஷயம் என்னன்னா, இந்தக் கச்சாயம் செய்த உடனே சாப்பிடுவதை விடவும், பழசாகி சாப்பிட்டால் இன்னும் ருசியாக இருக்கும். அப்ப, ப்ரெஷ்ஷாச் சாப்புட நல்லா இருக்காதான்னு எக்குத்தப்பாக் கேக்கப்படாது, என்ன வேகத்தில் கச்சாயம் காலியாகுதுன்னு பாருங்க! :))))))
ஒரு க்ளிக் பண்ணிவிட்டு, தட்டை கொண்டுவந்து காஃபி டேபிளில் வைக்கும் முன் 2 கச்சாயம் காணோம்! சீக்கிரமா வந்து எடுத்துக்குங்க, அப்புறம் தட்டு காலியானபிறகு வந்து ஏமாந்து போயிராதீங்க! ;)

"விடாது கருப்பு!" மாதிரி இந்த முறை வேற ஒரு ப்ராண்ட் கோதுமை வாங்கிவந்திருக்கிறேன், சீக்கிரமா காரக்கச்சாய எக்ஸ்பெரிமென்ட்டும் செய்து பார்த்துடலாம், என்ன சொல்றீங்க? ;)))))

Thursday, June 14, 2012

முருங்கைகீரை பருப்பு

முன்பே ஒருமுறை பச்சைப்பயறு-கீரை கடைசல் என்று ஒரு ரெசிப்பி போஸ்ட் செய்திருக்கிறேன். இதுவும் அதே செய்முறைதான், பச்சைப்பயறுக்குப் பதில் துவரம்பருப்பு, பாலக்கீரைக்குப் பதில் முருங்கைக் கீரை. ஆகமொத்தம் பருப்பில கீரை போட்டு மொளகா வேவிச்சுக் கொட்டி கடைஞ்சிருக்கேன், சாப்புட வாங்க! :)

தேவையான பொருட்கள்
துவரம்பருப்பு -1/4கப்
ஆய்ந்த முருங்கைக் கீரை இலைகள் - 2 கைப்பிடி
சின்னவெங்காயம் -10
தக்காளி-2
வரமிளகாய் -5 (காரத்துக்கேற்ப)
கொத்தமல்லி விதை (தனியா)-1டீஸ்பூன்
சீரகம் -1டீஸ்பூன்
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
எண்ணெய்
உப்பு

செய்முறை
பருப்புடன் துளி எண்ணெய், மஞ்சள்தூள் சேர்த்து குழைய வேகவைத்து எடுக்கவும்.
சின்னவெங்காயம், தக்காளியை நறுக்கிவைக்கவும்.
பாத்திரத்தில் எண்ணெய் காயவைத்து கொத்தமல்லி, சீரகம் தாளித்து சின்ன வெங்காயம், கிள்ளிய வரமிளகாய் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
தக்காளி மசிந்ததும் கொஞ்சம் மஞ்சள்தூள், கீரை சேர்த்து அரைகப் தண்ணீர் விட்டு சிலநிமிடங்கள் கொதிக்கவிடவும்.
கீரை வெந்து நீர் சுண்டியதும் வெந்த பருப்பைச் சேர்த்து, உப்பு- கால்கப் தண்ணீரும் சேர்த்து ஒரு கொதிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும்.
கீரை-பருப்பு கலவை கொஞ்சம் ஆறியதும் மத்தை வைத்து கடைந்துவிடவும், அல்லது கரண்டியால் நன்றாக மசித்துவிடவும்.
சுவையான முருங்கைகீரை-பருப்பு தயார். சூடான சாதம் + நெய் உடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Monday, June 11, 2012

பூவே உன்னை நேசித்தேன்..

பூவே உன்னை நேசித்தேன்..
பூக்கள் கொண்டு பூசித்தேன்!..:))))))))



என்னதான் கட்டுப்படுத்தி வைத்திருந்தாலும் எனக்குள் ஒளிந்திருக்கும் பூப் பைத்தியம் அவ்வப்போது தளைகளை உடைத்துக்கொண்டு கிளம்பிவிடுகிறது. புதுப் புதுப் பூக்களை படமெடுத்தபின்னரே ஓய்கிறது! :)))

திடீர்னு ஒரு செவ்வாய்க்கிழமை, நடுப்பகல் 12மணிக்கு வீட்டிலிருந்து கையில் கேமராவுடன் கிளம்பிய இளம்புயல், அப்பார்ட்மென்ட் வாசலில் அழகாக நட்டிருந்த பூக்களில் சென்று நின்றது. மேகத்தில் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடும் கதிரவனோடு பூக்களும் பளீர் வண்ணம் - திடீரென்று மங்கிய வண்ணம் என்று கண்ணாமூச்சி விளையாடின.

இந்தப் பூக்களை ஊரிலும் பார்த்திருக்கிறேன். பெயர் தெரியாமல் இருந்தது. அடுத்த நாள் பூக்களை எல்லாம் நட்பூக்களுடன் ;) பகிர்ந்தபொழுது, ஆல்பம் பார்த்த ஒரு நட்பூ :)
பூக்களின் பற்றிய லிங்க் தந்ததோடு, விதைகளை எடுத்து வந்து வீட்டில் வளர்க்கலாமே? என்று கேள்வியும் எழுப்பினார்.

உடனே புயல் மறுபடியும் படுவேகமா கிளம்புச்சு.. கேட் அருகே போனால்....ஆஆ!! என்ன ஒரு ஏமாற்றம்? பூக்களுடன் அழகழகாய் நின்ற cosmos செடிகள் எல்லாமும் பிடுங்கப்பட்டுவிட்டன. :-| :-| அவை இருந்த இடத்தில் குட்டிக் குட்டியாய் "zinnia"நாற்றுக்கள் நிற்கின்றன! நல்லவேளை கொஸ்மொஸ் மலர்களை படமாவது எடுத்துவந்தேன் என்று மனதைத் தேற்றிக் கொண்டேன்,வேறுவழி?!
~~~
கடந்த சனிக்கிழமை மாலை எந்தவித முன்னேற்பாடும் இன்றி [கேமராவ எடுக்காம கிளம்பிட்டாகளாம், அதுக்குத்தான் இம்பூட்டு பில்டப்பூ! ;) ] கடற்கரைக்கு போனோம். காரை பார்க் செய்துவிட்டு விச்ராந்தியாக நடக்கையில், நடைபாதை கடலோரம் இருந்த ரெஸ்டாரன்ட் வழியாக நீண்டது.
இருபுறமும் பலவண்ணங்களில் அழகழகான மெகா சைஸ் ரோஜாக்கள் தலையாட்டி முகமன் கூறின. கூடவே திருமண சீஸன் வேறு! பல இடங்களில் இருந்த வியூ பாயின்ட்ஸ் எல்லாவற்றிலும் ஒரு கல்யாணக் கும்பல் படங்கள் எடுத்துக்கொண்டு இருந்தார்கள். அடடா, கேமராவை எடுக்காமல் வந்துவிட்டோமே என்று அங்கலாய்ப்பாய் இருந்தது! ;)

மாலைக் கருக்கலில் கடலோரத்தில் பூக்கள் கவிதைகளாய் நின்றிருந்தன. சூரியன் இல்லாததால் மங்கலாக இருந்த வெளிச்சம்.. கேமரா இல்லாமல் ஐஃபோனில் எடுத்த படங்கள்! ரோஜாக்களின் வண்ணங்கள் சரியாகப் படங்களில் தெரியவில்லை.
மெதுவே நடந்து நடந்து பசிக்கவும் ஆரம்பித்தது. இணையத்தில் தேடி, அருகில் இருந்த ஒரு thai restaurant-ஐ சென்று சேர்ந்தோம்.

குட்டியூண்டு உணவகம், ஆனால் உணவு பிரமாதமாக இருக்கும் என்று ரிவியூ, Limousine காரில் வந்த வாடிக்கையாளர்கள் என்று கலகலப்பாய் இருந்தது. அரை மணி நேரம் வெய்ட்டிங் டைம்!! பெயரைக் கொடுத்துவிட்டு நடையைக் கட்டினோம். 20 நிமிடங்கள் சுற்றிவிட்டு வந்து பைனாப்பிள் ஃப்ரைட் ரைஸ், ஜிஞ்சர் டோஃபு கறி--வித்தவுட் டோஃபு(!), ஃப்ரைட் பனானா என்று சிம்பிளா டின்னரை முடிந்தது. ஜிஞ்சர் டோஃபு வித்தவுட் டோஃபு(!) சூஊஊப்ப்பர்! :P
சென்னையின் மெரீனா போல எங்களுக்கு இந்த பீச் ! :))) வாரம் முழுக்க, வழக்கமான வேலைகளில் ஈடுபட்டு சுணங்கும் மனதை ரீ-சார்ஜ் செய்வதில் இந்தக் கடற்கரையும் கடலோரக் கவிதைளும் பெரும்பங்கு வகிக்கின்றது என்று சொன்னால் அது மிகையாகாது.
படத்தில் பின்னணியில் தெரிகிறதே, அந்த மலையுச்சியில் இருந்துதான் சந்த்ரோதயம் படங்களை பார்த்தீங்க! :)

Thursday, June 7, 2012

பலாக்கொட்டை பிரட்டல்

தேவையான பொருட்கள்
பலாகொட்டை - 15
வெங்காயம் -1
பச்சைமிளகாய்-1
கடுகு -1/2டீஸ்பூன்
க.பருப்பு, உ.பருப்பு - தலா 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை,கொத்துமல்லி - சிறிது
மஞ்சள்தூள் -1/8டீஸ்பூன்
(சக்தி) கறிமசாலா பவுடர் -1டீஸ்பூன் (விரும்பினால்)
தண்ணீர்-11/2 கப்
உப்பு
எண்ணெய்

விழுதாக அரைக்க
வரமிளகாய் - 4
தேங்காய்த் துருவல்-1/4கப்

செய்முறை
பலாக்கொட்டையில் மேலுள்ள தோலை உரித்தபிறகே சமைக்கவேண்டும்.
இதைச் செய்கையில் கவனமாக உரிக்கவேண்டும், கொஞ்சம் ஏமாந்தாலும் பலாக்கொட்டையின் தோல் ஊசிபோல நகக்கண்ணில் ஏறிவிடும். எளிய வழி, அம்மிக்கல்லில் கொட்டைகளை தட்டி, உடைப்பது. உடைத்த பலாக்கொட்டைகளின் தோலை எளிதாக எடுத்துவிடலாம்.

பலாக் கொட்டைகளை தோலை உரித்து நறுக்கி வைக்கவும்.
ப.மிளகாய், வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கவும்.
தேங்காய்- வரமிளகாயை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் காயவிட்டு, கடுகு-க.பருப்பு-உ.பருப்பு தாளிக்கவும். பருப்புகள் பொன்னிறமானதும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் பாதி வதங்கியதும் பலாக்கொட்டை, மஞ்சள்தூள் சேர்த்து சிலநிமிடம் வதக்கவும்.

பிறகு அரைத்த விழுது, தேவையான உப்பு சேர்க்கவும்.
ஒண்ணரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
பலாக்கொட்டை வெந்ததும், கறிமசால் பொடி சேர்த்து தண்ணீர் வற்றி, பிரட்டலாக வரும்வரை சிறுதீயில் வதக்கி, கொத்துமல்லி இலை தூவி இறக்கவும்.
சுவையான பலாக்கொட்டை பிரட்டல் கறி தயார். சாதம், சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு
பலாக்கொட்டையை நேரடியாக வேகவிட்டால் கொஞ்சம் நேரம் எடுத்து வேகும். அவசரமாக சமையல் செய்கையில் பலாக்கொட்டையை குக்கரில் வேகவைத்து எடுத்து பிரட்டலில் சேர்க்கலாம். [அனுபவம்தாங்க..காலை அவசரத்தில் செய்தேன். ரொம்ப நேரமெடுத்த மாதிரி இருந்தது. பிறகு அம்மாவிடம் கேட்டபோது, பலாக்கொட்டையை குக்கரில் வேவித்து சேர்த்திருக்கலாமேன்னாங்க..அவ்வ்வ்வ்! அடுத்தமுறை அப்படி செய்துருவோமில்ல?! ;) ]

LinkWithin

Related Posts with Thumbnails