Saturday, December 31, 2011

ஸ்வீட் ஷெல்ஸ் & ஹேப்பி நியூ இயர்!

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

ஸ்வீட் ஷெல்ஸ் -தேவையான பொருட்கள்
மைதா மாவு-1கப்
ரவை-1/4கப்
வெண்ணெய்- 2டேபிள்ஸ்பூன்
தண்ணீர்
எண்ணெய்
சர்க்கரை-1/2கப்
தண்ணீர்-1/4கப்

செய்முறை
மைதா,ரவை,வெண்ணெய் சேர்த்து பிசறிக் கொள்ளவும்.
கொஞ்சம் கொஞ்சமாகத் தண்ணீர் தெளித்து பூரி மாவு பதத்துக்கு (மாவு ரொம்பவும் தளரவும் இல்லாமல், டைட்டாகவும் இல்லாமல்) பிசைந்து 20 நிமிடங்கள் மூடிவைக்கவும்.

மாவை சிறு உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும்.
ஒவ்வொரு உருண்டையாக எடுத்து முள்கரண்டி அல்லது சீப்பின் மீது வைத்து தட்டையாக அழுத்தவும். பிறகு மாவின் ஒரு முனையிலிருந்து எடுத்து லேசாக வளைத்து தனியே எடுக்கவும்.
அழகான ஷெல் /சிப்பி/சங்கு வடிவம் கிடைக்கும்.

இங்கே இன்னொரு விஷயம்..முள்கரண்டியில் அழுத்தினால் ஷெல் பெரியதாக வரும்..சீப்பில் அழுத்துகையில் சிறிய வரிகளுடன் அழகாக வரும். (கொலாஜில் 3வது படம் பாருங்க) இரண்டில் எது செய்யலாம் என்று என்னவரிடம் வோட்டெடுப்பு நடத்தியதில், சீப்புக்கே அவரது வோட்டு கிடைத்தது. :) அதனால் சீப்பிலேயே எல்லா உருண்டைகளையும் ஷெல் செய்துவிட்டேன்.

அழுத்திய ஷெல்களை காற்றுப்புகாமல் மூடி வைத்துக்கொள்ளவும். மிதமான சூட்டில் எண்ணெய் காயவைத்து ஷெல்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.

வேறொரு பாத்திரத்தில் சர்க்கரை, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
பாகு நன்கு கொதிவந்ததும்(21/2 கம்பி பதம்..!!) அடுப்பிலிருந்து இறக்கி, பொரித்துவைத்த ஷெல்களைப் பாகில் போட்டு கலந்து, எல்லா ஷெல்களிலும் பாகு படும்படி குலுக்கி வைக்கவும்.

சர்க்கரைப்பாகுக்கு பதமெல்லாம் அவசியமில்லை..சர்க்கரை கரைந்து நல்லா பபுள்ஸ் வந்ததும் ஷெல்களைப் போட்டு கிளறிவிடலாம். ஆறியதும் ஷெல்கள் மீது வெள்ளைவெளேர்னு பாகு பூத்து நிற்கும்.

இந்த இனிப்பு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்துக்கொண்டால் ஒருவாரம் வரை இருக்கும். ஆனா அதுவரைக்கும் நம்ம காலி பண்ணாம இருப்போமான்னு சொல்லமுடியாது! ;)
2009-ல் செய்த இனிப்பு சிப்பிகளைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க! :))

மீண்டும் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

Wednesday, December 28, 2011

ரசித்து ருசித்தவை - 6

ரசித்து ருசித்தவற்றை பகிர்ந்து பலநாட்களாகி விட்டதுபோல தோன்றியது..அதனால் இந்த வருடத்தின் கடைப்பதிவாக ரசித்து ருசித்தவை ஆறாம் பகுதி! :)

1.Sweet Shells/Gavvalu - ஸ்வீட் ஷெல்ஸ்

Gavvalu -இது ஆந்திரா இனிப்பு, கவ்வாலு(கவ்வலு?) என்பது தெலுங்கில் சிப்பியைக் குறிப்பது. இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருமுறை இதனை செய்திருக்கிறேன். சுத்தமாக மறந்து போயிருந்த இந்த இனிப்பை இங்கே பார்த்ததும் மறுபடி செய்து பார்ப்போம் என்று செய்தேன். கடந்தமுறை முள்கரண்டி மூலம் சிப்பி வடிவம் செய்தேன், இந்தமுறை சீப்பு(!)!!! ஆமாங்க, comb-தான்!! புத்தம்புதுசா ஒரு சீப்பை இந்த ஷெல்ஸ் செய்யன்னு எடுத்து வைச்சிருக்கேன். ;) விரைவில் ஸ்டெப் வைஸ் படங்களுடன் ரெசிப்பியை போஸ்ட் பண்ணுகிறேன்.

2.தெள்ளேவு/Thellevu - தோசை

இதுவும் அதே ப்ளாகில் பார்த்து செய்ததுதான்..தோசையேதான்,ஆனா நார்த் கர்நாடகா ஸ்பெஷல் தோசை. அரிசி-உளுந்து-வெந்தயம்-வெள்ளரிக்காய் சேர்த்து அரைத்து புளிக்கவைத்து தோசையாக ஊற்றவேண்டியதுதான். தோசை மிக மெல்லியதாக, பேப்பர் மாதிரி இருக்குமாம். கரண்டியால் தோசையை வட்டமாக தேய்க்காமல், வாழையிலையால் மெல்லியதாக தேய்த்து செய்வார்களாம். நாம கரண்டிலயே மெல்ல்ல்ல்ல்ல்ல்லிசா தோசை சுடுவம்ல?~ இதுக்கு ரெசிப்பியும் அடுத்து வந்துட்டே இருக்கு. :)

Thanks Vani Lohith for the yummy recipes! :)

3.எண்ணெய் கத்தரிக்காய் /Stuffed Brinjals

நித்து'ஸ் கிச்சன்ல இருந்து செய்த ஸ்டஃப்ட் எண்ணெய் கத்தரிக்காய். அவங்க ரெசிப்பியுடன் ஒரு டீஸ்பூன் கொத்தமல்லி விதை(தனியா) சேர்த்து வறுத்து பொடித்து ஸ்டஃப் பண்ணினேன். தக்காளி பிரியாணியுடன் சூப்பரா மேட்ச் ஆச்சு. நன்றி நித்து! ஸ்டெப் பை ஸ்டெப் படங்களைப் பார்க்க இங்கே க்ளிக் பண்ணுங்க.

4.தோசைப்பொடி

வானதியின் வலைப்பூவிலிருந்து தோசைப்பொடி! இதுவரை இட்லிப்பொடியைத்தான் தோசைக்கும் வைத்து சாப்பிடுவது வழக்கம். தோசைக்குன்னு தனியாப் பொடி அரைச்சதில்லை. ;) அதனாலேயே இந்தப் பெயர் என்னைக் கவர்ந்தது. கரெக்ட்டா வீட்டிலும் இட்லிப்பொடி தீர்ந்து போயிருந்ததால் உடனே வறுத்து அரைத்துவிட்டேன்..
அரை கப் ட்ரை தேங்காய்ப் பவுடர், கால்கப் எள்ளு, ரெண்டு வரமிளகாய், ஒரு டீஸ்பூன் குறுமிளகு எல்லாம் கருகாமல் வறுத்து எடுத்து உப்பு சேர்த்து அரைத்தா தோசைப்பொடி ரெடி.

இங்கே வழக்கம்போல மகி காமெடி ஒண்ணு நடந்தது..வறுத்த பொருட்களை மிக்ஸில போட்டு அரைஅரைஅரைன்னு அரைச்சுட்டேன் போல..எள்ளுல இருந்து கிட்டத்தட்ட நல்லெண்ணெயே வந்துடுச்சு..ஹிஹிஹி! இந்தப் பொடிக்கு எண்ணெயே வேணாம்,அப்படியே சாப்புடலாம்னு என்னவர் ரசித்து சாப்ட்டார். அப்புறம்தான் அவங்க ப்ளாக்ல பாத்தேன், ஒண்ணா ரெண்டாதான் அரைக்கணும் போல! ;) எப்படி அரைச்சா என்ன..பொடி சூப்பரா இருந்தது.நன்றி வானதி!

இது நான் இட்லிப்பொடிக்கு வறுத்து வைத்த பொருட்கள். இந்தமுரை ப.பயறு-கொள்ளு-து.பருப்பு-அரிசி இப்படி ஒரு காலத்தில் அம்மா சொன்ன ரெசிப்பிய ஃபாலோ பண்ணினேன்.கூடவே கொஞ்சம் மிளகும் சேர்த்துகிட்டேன்..படத்திலிருக்கும் பொருட்கள்+ சிறுதுண்டு வெல்லம்-தேவையான உப்பும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து எடுத்தா சூப்பர் இட்லிப்பொடி ரெடி! நீங்க விரும்பின தானியங்களை வறுத்து சேர்த்துக்கலாம், என்ன ஒண்ணே ஒண்ணு...கடலைப்பருப்பும்,உளுந்துப்பருப்பும் மேக்ஸிமம் க்வான்டிட்டி இருக்கறமாதிரி பாத்துக்குங்க. :)

4.மணத்தக்காளி வத்தக்குழம்பு

இது என்னோட வலைப்பூவில இருக்க சுண்டக்காய் வத்தக்குழம்பை ரசித்து ருசித்து, அடுத்து மணத்தக்காளி வத்தல்ல குழம்பு வைத்தேன். :) கசப்பு-புளிப்பு-இனிப்புன்னு தூளா இருந்தது! :P:P
நம்ம சமையலையே ரசித்து ருசிக்கக்கூடாதா என்ன??என்ன சொல்றீங்க?! ? :))))))))))
நீங்களும் ரசித்து ருசியுங்க! நன்றி! :)
~~~
CNN-லயும் வந்தாச்சாம்...ஒய்....ஒய்....ஒய்...ஒய்?!!!!!!!!!!!!!!



ஒரிஜினல் பாட்டைவிட இந்தக் குட்டிப்பையன் பாடறது எனக்குப் பிடிச்சிருக்கு. நார்த் இண்டியன் வாசத்தோட, மழலையில் இந்தக்குட்டி பாடறதை கேட்டுப்பாருங்க. கொலவெறி அப்பப்ப குலவெறி ஆகும்..மூன் மூணாகும்!! க்யூட்டா இருக்கு! :))))

Saturday, December 24, 2011

சேமியா பாயசம்

சத்திய முத்திரை கட்டளையிட்டது
நாயகன் ஏசுவின் வேதம்
கட்டளை கேட்டவர் தொட்டிலில் கேட்டது
பாலகன் ஏசுவின் கீதம்

அது வானகம் பாடிய முதல் பாடல்
அந்த தூதுவன் ஆடிய விளையாடல்
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

மேய்ப்பன் அவனே ஆடுகளெல்லாம் குழந்தை வடிவத்தில்
மன்னவன் அவனே மக்கள் எல்லாம் மழலை வடிவத்தில்
மேரி மாதா தேவ மகனைக் காப்பது எப்படியோ
தேவதூதன் நம்மையெல்லாம் காப்பது அப்படியே!
அவன் ஆலயம் என்பது நம் வீடு
மணி ஓசையைக் கேட்பது பண்பாடு
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

வாசல் கதவை மூடுவதில்லை தேவன் அரசாங்கம்
வந்தவர் வீட்டில் கண்டவர் நெஞ்சில் கருணை ஒளி பொங்கும்
ராஜவாழ்வு தேவ அமைதி தோன்றும் சிலுவையிலே
நாளை அல்ல தேவனின் கருணை இன்றே கைகளிலே
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!
அவன் பாதங்கள் கண்டால் அன்போடு
ஒரு பாவமும் நம்மை அணுகாது
மெரி மெரி கிறிஸ்மஸ்! ஹேப்பி ஹேப்பி கிறிஸ்மஸ்!

-------------------------------------------------------------------------
உலகமெங்கும் ஏசுபாலன் பிறந்தநாளைக் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!
-------------------------------------------------------------------------
ஊரில் இருக்கையில் ஒவ்வொரு வருஷமும் க்றிஸ்மஸ் தினத்தில் இந்தப்பாடல் ரேடியோவில் போடுவாங்க..எனக்கு மிகவும் பிடிக்கும், இணையத்தில் தேடியபோது பி.சுசீலா அவர்களின் தளத்தில் இந்தப் பாடல் இருக்கிறது,வேறெங்கும் கிடைக்கவில்லை..ஒலி வடிவில் பாடலைக் கேட்க விரும்பினால், இங்கே க்ளிக் செய்யுங்க, பாடல்கள் லிஸ்டில் 1400-வது பாடலாக இருக்கிறது, கேட்டுப்பாருங்க.

தேவையான பொருட்கள்
வறுத்த சேமியா -1/2கப்
பால்-11/2கப்
எவாப்பரேடட் மில்க்-1/4கப்
சர்க்கரை-1/2கப் (இனிப்புக்கேற்ப)
ஏலக்காய்-2 (அ) ரோஸ் எஸ்ஸன்ஸ்-சிலதுளிகள்
திராட்சை முந்திரி
நெய்-1டேபிள்ஸ்பூன்


செய்முறை
சேமியாவைத் தனியே வேகவைத்து,குளிர்ந்த நீரில் அலசி வடித்து வைக்கவும்.
பாலை காய்ச்சவும். பால் பொங்கியதும் அடுப்பை குறைத்து 4-5நிமிடங்கள் சுண்டவைக்கவும்.
வேகவைத்த சேமியாவை சேர்த்து ஒரு கொதி வந்ததும் சர்க்கரை சேர்க்கவும்.
சர்க்கரை கரையும்வரை சூடாக்கி, எவாப்பரேடட் மில்க்-ஐ சேர்க்கவும்.
குறைந்த தீயில் சிலநிமிடங்கள் கொதிக்கவிட்டு பாயசத்தை அடுப்பிலிருந்து இறக்கவும்.
ஏலக்காய்ப் பொடி அல்லது ரோஸ் எஸ்ஸன்ஸ் சேர்த்து கலந்து வைக்கவும்.
நெய்யில் திராட்சை-முந்திரி வறுத்து வைத்துக்கொள்ளவும்.
பரிமாறும் கப்புகளில் பாயசத்தை விட்டு, வறுத்த முந்திரி,திராட்சை தூவி பரிமாறவும்.


சூடாகவும் நன்றாக இருக்கும்,அல்லது பாயசத்தை ஃப்ரிட்ஜில் குளிரவைத்து பரிமாறும் நேரம் வெளியே எடுத்து கப்புகளில் ஊற்றி முந்திரி திராட்சை தூவி சுவைத்தாலும் சூப்பரா இருக்கும், உங்க வசதிப்படி சாப்புடுங்க. :)

முதல் படம் இங்கே பக்கத்து வீட்டில் க்றிஸ்மஸ் லைட் டெகரே ஷன்.

Thursday, December 22, 2011

மழை..இசை..கதை!!

ஹலோ..ஹலோ..ஹலோ!!!!
................
மைக் டெஸ்டிங்...ஒன்..டூ..த்ரீஈஈஈஈ!!!!
................
எங்கே..எங்கே..எங்கே..எங்ங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ தேடறீங்க?? இங்கே..இங்கே..இங்கே..இங்ங்ங்ங்ங்ங்கேஏஏஏஏஏஏஏ பாருங்க!
..............
நாந்தான் மழை,மழை,மழேஏஏஏஏஏஏஏஏஏஏ வந்திருக்கேன்!
:))))))))))))))))))))))))))))))))

எல்லாரும் சுகமா..எனது காதலி..மனைவி, என் முதலும் முடிவுமான பூமிப்பெண் சுகமா இருக்காளா? ஒரே ஆள், பலமுகம் கொண்டவள் என் காதலி!!! காதல்வெறியில் அவ்வப்பொழுது சிலசமயம் பெய்தும் கெடுப்பேன்,பலசமயம் காய்ந்தும் கெடுப்பேன். love drives people crazy, not only people,but including me!!... :P:P:P

ஹிஹீஹீ..என்ன பார்க்கறேள்? மழை இங்கிலீஷ் பேசுதேன்னா...நான் எல்லா பாஷையும் பேசுவேன். அதை விடுங்கோ..இப்ப நான் ஒரு கதை சொல்லப்போறேன்!!! இதோ இந்தப் பொண்ணைப் பாருங்களேன். இவ பேரு வர்ஷா(வர்ஷா = மழை) ..காலேஜில படிச்சுட்டு இருக்கா..லீவில் ஊருக்கு போறப்ப எப்பூடி என்னை ரசிக்கிறா எண்டு பாருங்க! இதைப் பார்க்கறப்ப எனக்கே டான்ஸ் ஆடலாம் போல வருது! :)



இந்தியப்பெண்ணாய் என் காதலியைப் பார்க்க நினைத்தால் இந்தியத் தீபகற்பம் பக்கம் வந்து பார்ப்பேன்..நவீன யுவதியாகப் பார்க்க நினைச்சால் அமெரிக்க ஐரோப்பியக் கண்டங்களிலே பார்ப்பேன்.வெள்ளைப் பனித் தேவதையாய் அவளைக் காண நினைத்தால் அண்டார்ட்டிக்காவில் பார்ப்பேன்..பச்சைப்பட்டுடுத்திய தேவதையாய்ப் பார்க்க நினைத்தான் அமேஸான் காடுகளிலே ஓடிப்போய்ப் பார்ப்பேன்..மொத்தத்தில் அவள்மீது பைத்தியமாய்ப் பால்வெளியெங்கும் திரிகிறேன்!!!!!! இப்பொழுது கூடப் பாருங்க..மழை வந்திருக்கேன்,கதை சொல்லப்போறேனு சொல்லிட்டு பூமிப்பெண்ணைப் பற்றி பிதற்றிட்டு இருக்கிறேன்! அவ்வளவு காஆஆஆஆஆதலுங்க! ;))))

அட,நம்ம வர்ஷாப் பொண்ணை எங்க விட்டோம்?? ஆங்...அவிங்க ஊர்ல!! வர்ஷா கற்பனையில் மூழ்கி, கவிதையில் முத்தெடுத்து, எழுத்திலே கோர்த்து வைத்திருக்கா..அதை இந்தப்பையன் களவாடிட்டான்..ஆனாலும் பரவாயில்லை,நல்ல்ல்ல்ல்ல்ல்ல்லாவே பாடறான். :)



சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்..
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனவே வருவாய்..
பயிர் வேரினிலே விழுந்து நவதானியமாய் விளைவாய்..
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்!! ...ம்ம்ம்ம்ம்...அனுபவிச்சு எழுதிருக்காங்கள்ல? இதைக்கேக்கறப்ப எனக்கே என்மேல கொஞ்சம் பெருமையா இருக்கு..என்ன, காலர்தான் இல்ல...இருந்தா காலரைத் தூக்கி விட்டுப்பேன்.

இப்புடியே நாள் ஓடிட்டு இருக்கப்ப பாவம்,காலேஜில படிச்சிகிட்டு இருக்கற வர்ஷாவுக்கு கலியாணம் முடிவு பண்ணறாங்க... கரீக்ட்டா நான் போய், அந்தப்புள்ளை வீட்டுக்கு போவதை தாமதப்படுத்திட்டேன்..வர்ஷா ஒரே சந்தோஷமாயிருச்சு..என்னையக் காரணம் காட்டி வீட்டுக்கு லேட்டாப்போலாம்ல?? என்ன ஒரு சந்தோஷம் பாருங்களேன்..



எப்படியோ ஒரு வழியா பெண்பார்க்கும் படலத்தைத் தாமதப்படுத்தியாச்சு..நாட்கள் ஓடிட்டே இருக்கு. ஒருநாள் நான் என் காதலியைப் பார்க்க சென்னை மாநகருக்கு வந்தப்ப, மார்க்கெட்ல இருந்த ஒரு பையன் என்னைப் பார்த்து, நான் ஏற்படுத்தும் ஒலிகளையும் ரசிச்சு பாடறான்..அதே நேரம் அந்தப்பக்கம் நம்ம வர்ஷாப்புள்ளையும் பாடுது.

பாட்டு நல்லாருக்கும்..பையனையும்,புள்ளையையும் பார்க்கப்புடிக்கலைன்னா கண்ணை மூடிகிட்டு பாட்டைக் கேளுங்கோ, விசய்-திரிசா :):)வைப் புடிக்கும்னா கண்ணையும் காதையும் ஓபனா வைச்சிகிட்டே என்சொய் பண்ணுங்ஓஓஓ!;) ;)



ஒத்த ரசனையோட இருக்க ரெண்டு பேரும் எதிர்பாராத விதமாச் சந்திச்சு, தடக்-தடக்குன்னு கலியாணம் பண்ணி, ஆசைக்கு ஒண்ணு, ஆஸ்திக்கு ஒண்ணுன்னு குட்டீஸும் வந்து மும்பைல செட்டில் ஆகிட்டாங்க. ஒரு ஹோலி நாளில் எல்லாரும் வண்ணங்கள் பூசி மகிழ்வதைப் பார்க்க நானும் பூமிக்கு வந்தேன்..பாட்டுப்பாடி நடனம் ஆடி, கலர்ப்பொடி பூசின்னு ஒரு நாள் சந்தோஷமாக் கழிஞ்சது.



கதையும் முடிஞ்சது,கத்தரிக்காய் காய்ச்சது! :))))))))))))) போயிட்டு வரேன்..முடிந்தால் மீண்டும் சந்திப்போம்!

பி.கு. அதிரா ஆரம்பித்து வைத்து, ஆசியாக்கா என்னைக் கோர்த்துவிட்ட "இசையும் கதையும்" தொடர்பதிவு இது. இதைக் கோர்க்கும்படி இமா,வானதி, சிவா ஆகியோரை நானும் கோர்த்து:)விடுகிறேன்.

Tuesday, December 20, 2011

ப்ரோக்கலி பஃப்ஸ் & முட்டை பஃப்ஸ்

தேவையான பொருட்கள்
முட்டை - 2
*பஃப் பேஸ்ட்ரி ஷீட்
வெங்காயம்-1
தக்காளி -1
பச்சைமிளகாய்-1
கரம் மசாலா -1 டீஸ்பூன்
எண்ணெய்-1டீஸ்பூன்
பால்-1டேபிள்ஸ்பூன்
உப்பு


செய்முறை
தண்ணீரை கொதிக்கவிட்டு,கால் டீஸ்பூன் உப்புப் போட்டு, முட்டைகளை 8 நிமிடங்கள் வேகவைத்து எடுக்கவும். வெந்த முட்டைகளை குளிர்ந்த நீரில் சிறிது நேரம் வைத்து, உரித்து இரண்டாக நறுக்கிக்கொள்ளவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை ஃப்ரீஸரில் இருந்து அரைமணி நேரம் முன்பாக வெளியே எடுத்துவைக்கவும்.

வெங்காயம்,மிளகாய்,தக்காளியை நீளவாக்கில் நறுக்கவும்.
கடாயில் காயவைத்து நறுக்கியவற்றை சேர்த்து வதக்கவும். தக்காளி குழைந்ததும் உப்பு,கரம்மசாலா சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கி ஆறவிடவும்.

பேஸ்ட்ரி ஷீட்டை சப்பாத்திக்குழவியால் லேசாகத் தேய்த்து சதுரங்களாக நறுக்கவும். ஒவ்வொரு சதுரத்திலும் கொஞ்சம் வெங்காயமசாலாவை வைத்து முட்டைகளை (நறுக்கிய பக்கம் கீழே இருக்கும்படி) வைக்கவும்.

பேஸ்ட்ரி ஷீட்டின் ஓரங்களை தண்ணீர் தடவி, ஸ்டஃபிங் வெளியே தெரியாதவாறு ஒட்டவும். ஒட்டிய பஃப் மீது கொஞ்சம் பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவனில் சுமார் 20நிமிடங்கள்
பேக் செய்து எடுத்தால் முட்டை பஃப்ஸ் ரெடி!

வெங்காய மசாலா வைப்பது ஆப்ஷனல்..வெறுமனே வேகவைத்த முட்டை மீது உப்பு - மிளகாய்ப்பொடி தூவி bake செய்தாலும் எக் பஃப்ஸ் நல்லாவே இருக்கும்.

பேஸ்ட்ரி ஷீட் இங்கே ரெடிமேடா கிடைப்பது ரொம்ப ரொம்ப வசதியா இருக்கு!
நினைச்ச அரைமணி நேரத்தில சுடச்சுட பஃப்ஸ் செய்து சாப்பிடலாம்! :P :P ஸ்டஃபிங் எல்லாம் ஒரு விஷயமே இல்ல..வெறுமனே பேஸ்ட்ரி ஷீட்டை bake செய்தாலே டேஸ்ட் சூப்பரா இருக்கும்,அதனால் ஸ்டஃப்பிங் நம்ம வசதிப்படி பண்ணலாம்.

ஒருமுறை பேஸ்ட்ரி ஷீட்டை வெளியே எடுத்து வைச்சப்புறம் ஸ்டஃபிங் செய்ய சோம்பலா இருந்ததால் டின்னருக்கு செய்த ப்ரோக்கலி பொரியலை (!) ஸ்டஃப் பண்ணி bake பண்ணினேன். "ப்ரோக்கலியில பஃப்ஸ்-ஆ??? சூப்பரா இருக்குது..வெரி இன்னொவேட்டிவ்!"-னு என்னவர் புகழ்ந்துகிட்டே சாப்ட்டார்! ;) நம்ம லேஸி கதையெல்லாம் சொல்லிடுவோம என்ன?? கெத்தா பாராட்டை வாங்கிட்டு பஃப்ஸ் சாப்பிட்டேன்! :D

அதேபோல பேஸ்ட்ரிஷீட்டை நீட்டா சதுரமா,முக்கோணமா,வட்டமா எல்லாம் ஷேப் செய்ய எனக்கு பொறுமை இருப்பதில்லை..அப்படியே கைக்கு வந்தமாதிரி இழுத்து தண்ணியவைச்சு ஒட்டிடுவேன், என்னமாதிரி ஒட்டினாலும், ஸ்டஃபிங் வெளியே தெரியாம இருந்தாச் சரி! bake ஆகி வரப்ப பஃப்ஸ் பார்க்கவே சூப்பரா இருக்கும். நீங்களே சாப்பிட்டுப் பாருங்களேன், எப்படி இருக்கு பஃப்ஸ்...ஓக்கேவா?? :)

எக் பஃப்ஸ்-டொமாட்டோ கெட்ச்-அப் & டீ!

***Pepperidge farm பேஸ்ட்ரிஷீட் என்றால் ஒரு ஷீட்டுக்கு 6 பஃப்ஸ் செய்யலாம். நான் வாங்குவது சிறிய சதுரங்களா கிடைக்கும் மிட் ஈஸ்டர்ன் பேஸ்ட்ரிஷீட்..ஒரு சதுரத்தில் 2 பஃப்ஸ் செய்யலாம்.

Saturday, December 17, 2011

Meetha Semai

செப்டம்பர் மாதத்தில் ஒரு ஞாயிற்றுக் கிழமை என்னவரின் கொலீக் ஒருவர் வீட்டில் ஒரு பார்ட்டி இருந்தது. அவர் சொந்தவீட்டிற்கு குடிபோய் ஆறுமாதங்கள் ஹவுஸை warm பண்ணியபிறகும் விடாமல் எல்லாரும் அவரைத் தொந்தரவு செய்து housewarming பார்ட்டி கொடுக்க வைச்சிட்டாங்க. :)))))

அந்தப் பார்ட்டியில் எல்லா உணவுவகைகளும் ஹோட்டலில் ஆர்டர் செய்துவிட்டு இனிப்பு மட்டும் அவங்களே செய்திருந்தாங்க. நம்ம ரவா கிச்சடி போல, உதிரியா, சாஃப்ட்டா, இனிப்பா, சூப்பரா இருந்தது. இது என்ன ஸ்வீட்னு கேட்டப்ப, "loads and loads of nuts,dry fruits,desi ghee,mawa,sugar and semai"-ன்னாங்க. ஒடனே எனக்கு மண்டைக்குள்ள "பளீஈஈஈஈஈஈஈஈச்"னு ஒரு மின்னல் வெட்டிச்சு.(பல்ப் எரிஞ்சதுன்னே சொல்லி போரடிக்குது,அதான்!! ஹிஹி). ஷீர் குருமா ரெசிப்பிய அங்க இங்க ப்ளாக்ஸ்ல பார்த்து ஜொள்ளுவிட்டு, இண்டியன் ஸ்டோர்ல "Semai"ன்னு ஒரு பேக்கட் கண்ணுல பட்டதும் வாங்கிட்டு வந்து pantry-ல வைச்சிருக்கோமே என்ற மின்னல்தான் அது!!!

ஷீர் குருமா செய்வாங்களே,அந்த சேமியாவான்னதும் ஆமான்னு அவங்களும் அவங்களால முடிஞ்ச அளவு ( அவங்க பிஹாரு,நம்ம கோயமுதத்தூரு!!;)))) ) ரெசிப்பியை விளக்கினாங்க. நம்மள்ளாம் விம்பார் போட்டு வெளக்கினாலும் வெளாங்காத சிறப்பு வாய்ந்த மூளையைக் கொண்டவங்கன்னு அவிங்களுக்கு எங்கே தெரியப்போகுது,பாவம்!!!!!!!

அதுக்கும்பொறகு நானும் என்னமோ என்னமோ செஞ்சு அதுவும் என்ன என்னமோவா ஆகி..அது இது எதுன்னு நான் மண்டையப் பிச்சுகிட்டதும் இல்லாம உங்களையும் மண்டையப் பிச்சிக்க வைச்சதை நீங்க எல்லாரும் மறந்திருக்க மாட்டீங்க! ஒரு தோழி ஒருவாரம் கழிச்சு போன் பண்ணி நீங்க ட்ரை பண்ணியது இதுவா இருக்கலாமோன்னு ஒரு வீடியோ லிங்க் தந்தாங்க. ஒரு பத்துகிலோ பொறுமைய காசுகுடுத்தாவது வாங்கி ஸ்டாக் வைச்சுகிட்டு அந்த வீடியோவை பாருங்கன்னு வார்னிங் வேற குடுத்தாங்க. அவ்வ்வ்வ்! நீங்க தயவு செய்து பாருங்க, அப்ப நான் எவ்வளவு சுருக்கமா ஒரொரு ரெசிப்பியும் தரேன்னு என்னை பாராட்டுவீங்க. ஹிஹிஹி! வீடியோ இங்க இருக்கு.

கரெக்ட்டா அதே வீகெண்ட்ல ஒரு பர்த்டே பார்ட்டில நம்ம பிஹார் அக்காவை மறுபடியும் சந்திச்சனா..மிச்சம் மீதி டவுட்டுகளையும் க்ளியர் பண்ணிட்டு இந்தமுறை தைரியமாக் களமிறங்கினேன்! :)))))))))
~~~~

கைவசம் நெய் இல்லை...வெண்ணைய உருக்கி நெய் காய்ச்சவும் பொறுமை இல்ல..அதனால ஒரு 3 டேபிள்ஸ்பூன் வெண்ணைய உருக்கி, ஒண்ணு ரெண்டாப் பொடிச்ச பாதாம்-முந்திரிப் பருப்புகள் & திராட்சையை வெண்ணெயில வதக்கி எடுத்து வைச்சுகிட்டேன். அதிலயே 11/2கப் semai-ய போட்டு பொன்ன்ன்ன்ன்ன்ன்னிறமா வறுத்தேன். (அடுப்பு லோ ஹீட்/ஸிம்-லயே இருக்கோணும்)

சேமை(!) நல்லா கலர் வந்ததும் ரெண்டு கரண்டி(~1/4கப்) எவாபரேடட் மில்க் ஊத்தி கிளறி..சேமை வெந்ததும்..
அரை கப் சர்க்கரையைப் போட்டு கிளறினேன்.( மாவா/இனிப்பில்லாத பால்கோவா சேர்ப்பதா இருந்தா இந்த ஸ்டெப்ல சேர்க்கணும்.)

முதல்லயே வதக்கிவைச்ச முந்திரி-ஆல்மண்ட்-திராட்சை, நறுக்கிய பேரீச்சை, பொடித்த ஏலக்காய் இதெல்லாம் போட்டு...
நல்லா கிளறிவிட்டு இறக்கினா.... meetha semai /இனிப்பு சேமியா ரெடி!

:))))))))))
~~~
அடுத்த படம் முதல்முறை முயற்சித்த அதுஇதுஎது-வின் போட்டோ டுடோரியல்..கரீக்ட்டா நம்பர் போட்டிருக்கற ஆர்டர்லயே படம் பாருங்க,என்ன?? அப்பதான் நான் முதல்முறை என்ன காமெடி பண்ணேன்னு உங்களால கண்டுபுடிக்க முடியும்...கமென்ட் பாக்ஸிலே வந்து சொல்ல முடியும்..எல்லாருமா சேர்ந்து கும்மியடிக்க முடியும்,ஓக்கை??????
அப்பறம்,சொல்ல மறந்துட்டேனே.. இந்தவாட்டியும் எனக்கு 90% வெற்றிதான் கிடைச்சது..கரெக்ட்டா இது செய்யும்போது ஒரு போன்கால் வந்துதா...பேச்சு மும்முரத்தில ரெம்ப நேஏஏஏரம் கிண்டிட்டேன் போல..ஃபனல் ப்ராடக்ட் உப்புமாக்கு பதில் மிக்ஸராகிருச்சு!!!!!! எவ்வளவோ பார்த்துட்டோம்,,இதுக்கெல்லாம் சளைச்சவங்களா நம்ம? ;))))
கொஞ்சம் பாலை விட்டு 20செகண்ட் மைக்ரோவேவ் பண்ணி ஜூஊஊஊஊஊப்பராச் சாப்ட்டுறமாட்டம்? என்ன சொல்றீங்க?
:)))))))))))

Wednesday, December 14, 2011

காஃபி வித் மகி!

வாங்க,வாங்க,வணக்கம்! :)))))))))))))))))))

உட்காருங்க..எப்படி இருக்கீங்க? வீட்டுல எல்லாரும் சௌக்கியம்தானே?

என்னோட காஃபி சாப்பிட வந்ததுக்கு நன்றி!

ரொம்ப நாளா காப்பியைப் பத்தி எழுதணும்னு நினைச்சுட்டே இருந்தேன்..ஒருவழியா அதுக்கு நேரம் வந்திருக்கு. பில்டர் காப்பி/ ப்ரூ காப்பி/கண்ணன் காப்பி/நரசுஸ் காப்பி/உதயம் காப்பி/சன்ரைஸ் காப்பி/ஹோட்டல் காப்பி/வரக்காப்பி.. இதெல்லாம் எனக்குப் பரிச்சயமான காப்பி வகைகள்..(அப்பாடி எத்தனை வகைக் காப்பி?!!

கல்யாணத்துக்கு முந்தி காலைல வீட்டில் எல்லாருக்கும் நரசுஸ் காபி போட்டாலும் எனக்கு மட்டும் ஸ்பெஷலா ப்ரூ காப்பிதான்! (இப்பவுமே அப்புடித்தான்!!:)).. சுடச்சுடக் கையில் காப்பி டம்ளரோட வாசப்படியில் உட்கார்ந்து காலைக் குளிர் காற்றை அனுபவிச்சுட்டே ஒரொரு ஸிப்பா காபியை என்ஜாய் பண்ணறதே ஒரு சுகம் போங்க! :)

கல்யாணத்துக்கு அப்புறம் என்னவர் வீட்டில் பெரியவங்க எல்லாரும் காலை/மாலை ரெண்டு நேரமும் டீதான்..இருந்தாலும் எங்களுக்கு (நாங்க & கொழுந்தனார்கள்) ஒரு பாக்கெட் காஃபி பவுடர் வாங்கி வைச்சு காப்பி போட்டு குடிப்போம். இப்பவும் நாங்க ஊருக்கு போகைல எங்களுக்கு ஸ்பெஷலா காபிபவுடர் வாங்கி வைச்சிருந்தாங்க.

பெங்களூர்ல முதல்முறையா எவர்சில்வர் காஃபிபில்டர் வாங்கி அதிலே எப்படி டிகாக்ஷன் போடணும்னு தெளிவாக் கத்துக்கறதுக்குள்ளே இங்ஙன வந்திட்டோம்..ஃபில்டரையும் எடுத்துட்டு வரல. அதனால் ப்ரூ காப்பிதான் யூஸ் பண்ணினோம். சிலபல ஊர்கள் மாற்றியதும் என்னவர் காஃபி மேக்கர் வாங்கணும்னு அடம் பிடிச்சு ஒரு 4கப் காஃபி மேக்கர் வாங்கித்தந்தார்.


இந்தப் படத்தில் வலப்புறம் இருப்பது காபி ஃபில்டர் பேஸ்கட்..இந்த பேப்பர் கப்பை காஃபி மேக்கர்ல வச்சு, அதிலே காப்பித்தூளை ஃபில் பண்ணி, தேவையான அளவு குளிர்ந்த நீரை காஃபிமேக்கர் உள்ளே ஊற்றி மெஷினை ஆன் பண்ணி, க்ளாஸ் காஃபி மக்-ஐ வைச்சா நிமிஷங்களில் சூடான கருப்பு காபி கிடைக்கும். இது basic காஃபி மேக்கரின் செயல்பாடு. மத்தபடி எஸ்பிரஸோ மேக்கர், cappuccino மேக்கர்னு பலவகையா காஃபி மேக்கர்கள் இருக்கிறது. (அதெல்லாம் நமக்கு வேணாம்,விட்டுடுங்க!;))

ஆனா பாருங்க,நமக்குத்தான் இந்த ஸ்டைல் காஃபி பிடிக்காதே. இந்த காஃபி மேக்கரை வச்சு என்ன பண்ணன்னு நான் மண்டையபிச்சுகிட்டு இருந்தேன்..அப்ப என் தோழி ஒருவர் (ஊரில் ஃபில்டர் காபி போடுபவர்) இந்த மெஷினிலும் நான் அதே போல காஃபி போடுவேன் என்று சொல்லி, " ஃபில்டர்ல காபித்தூளைப் போட்டு,தண்ணீரையும் ஊற்றி, மெஷினையும் ஆன் பண்ணிடனும், ஆனா காபிமக்-ஐ உடனே வைக்காமல் ஒரு பத்துநிமிஷம் கழிச்சு வையுங்க..திக் டிகாக்ஷன் கிடைக்கும்"னு டிப்ஸ் குடுத்தாங்க. அதை ட்ரையல் & எரர் மெதட்ஸ்ல பலமுறை முயற்சித்து ஒரு வழியா எங்க டேஸ்டுக்கு ஏத்தமாதிரி காப்பி போடக் கத்துகிட்டேன். :)

Folger's Classic Roast coffee பவுடரை ஒரு ஆறுஸ்பூன் போட்டு ஒரு கப் தண்ணியையும் காஃபிமேக்கர்ல ஊத்தி க்ளாஸ் காஃபி மக்-ஐ வைக்காம ஆன் பண்ணிடனும்.

அட்லீஸ்ட் 20 நிமிஷம் கழிச்சு, ரெண்டு கப்ல அரைகப் பாலை மைக்ரோவேவ்-ல 2.30 நிமிஷம் சூடு பண்ணி எடுக்கணும். பால் நல்லா சூடாகி ஆடை கட்டி இருக்கும். மேலே படிந்திருக்கும் பாலாடையை எடுத்துட்டு,ரெண்டு கப்லயும் தேவையான சர்க்கரையைப் போட்டுடணும்.

இப்ப காபி மேக்கர்ல காஃபி மக்-ஐ வைச்சம்னா திக் டிகாக்ஷன் கிடைக்கும்.
அதை ரெண்டு பால் கப்லயும் சரிசமமா:) ஊத்தி, ஸ்பூனால நல்லா கலக்கி, 2-3 தடவை சர்-சர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆத்தினா....
மணக்க மணக்க காப்பி ரெடி!:))

இன்னை வரை எனக்கு அமெரிக்க காப்பி காப்பி புடிக்காது..வேற வழியே இல்லைன்னாஒரு ஸ்மால் latte/ cappuccino வாங்கி அதில நாலுவாய் குடிப்பேன், அப்பறம் அது அவ்ளோதான்!!:)))
~~~~
அது..இது..எது?-ல ஒரு ஸ்வீட் போட்டேன்..அது என்னன்னு தெரிஞ்சுக்க எல்லாரும் ஆர்வமா இருந்தீங்கள்ல? ஒருவேளை.....


இதானோ அது??இருக்கலாம்,இல்லாமலும் இருக்கலாம்,ஆக மொத்தம் அது இதுவாக இருக்க 90% வாய்ப்புகள் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
:))))))))
~~~~


Sunday, December 11, 2011

ரவா இட்லி

தேவையான பொருட்கள்
வெள்ளை ரவை-11/2கப்
மோர்-11/2கப்
பொடித்த சீரகம்-மிளகு -11/2டீஸ்பூன்
பச்சைமிளகாய்-1
கடுகு-1டீஸ்பூன்
கடலைப்பருப்பு-1டீஸ்பூன்
உளுந்துப்பருப்பு-1டீஸ்பூன்
எண்ணெய்-1டேபிள்ஸ்பூன்
ஈனோ ஃப்ரூட் சால்ட்-3/4டீஸ்பூன்
உப்பு-1/4டீஸ்பூன்
கேரட் துருவல்-2டேபிள்ஸ்பூன்
முந்திரி - தேவைக்கு


செய்முறை
பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து கடுகு தாளித்து,பொடித்த மிளகு சீரகம் போட்டு பொரியவிடவும். பருப்புகளை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் ரவையைச் சேர்த்து மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் வறுக்கவும். ரவை வறுபட்டு நல்ல வாசம் வந்ததும் இறக்கி ஆறவிடவும்.

ரவை ஆறியதும் உப்பு, மோர் சேர்த்து கரைத்து (குறைந்தது 10நிமிடங்கள்) வைக்கவும்.
இட்லிப் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். தண்ணீர் கொதிவரும்போது ரவைக்கலவையுடன் ஃப்ரூட் சால்ட் சேர்த்து கலக்கி, தேவையானால் கொஞ்சம் நீரும் சேர்த்து இட்லிமாவு பதத்திற்கு கரைத்துக்கொள்ளவும்.

எண்ணெய் தடவிய இட்லித்தட்டில் ஒவ்வொரு குழியிலும் கொஞ்சம் கேரட் துருவல்,ஒரு முந்திரிப்பருப்பு வைத்து இட்லிப்பாத்திரம்/குக்கரில் வைக்கவும். சில வினாடிகளுக்குப் பிறகு மாவை இட்லித்தட்டுகளில் ஊற்றி 10நிமிடங்கள் வேகவிடவும்.

இட்லி வெந்ததும் ஸ்பூனால் இட்லிகளை எடுத்து வைக்கவும். சூடாக சட்னி/சாம்பாருடன் ருசிக்க ரவா இட்லிகள் ரெடி! :)

~ரவா இட்லி-பீட்ரூட் சட்னி-காரசட்னி~

Wednesday, December 7, 2011

மினி மீல்மேக்கர் வறுவல்

இந்த முறை ஊருக்குப் போயிருந்த பொழுது, கிச்சன்ல இருந்த மளிகை சாமான்களில் ஒரு பாக்கெட் என் கவனத்தைக் கவர்ந்தது. குட்டிகுட்டி உருண்டைகளா ப்ரவுன் கலரில் இருந்தது என்னன்னு என்னால யூகிக்க முடியல..அது என்னன்னு தெரிஞ்சதும் ஒரே ஆச்சரியமாப் போச்சு போங்க. மீல் மேக்கர்/சோயா சங்க்ஸ்/சோயா மீல் உருண்டைகள்தானாம் அது!

பாருங்களேன், நார்மல் சைஸ்ல இருக்க மீல் மேக்கருக்கும் மினிமீல் மேக்கருக்குக்கும் எவ்ளோ வித்யாசம்னு! க்யூட்டா இருக்கில்ல? :) இந்த வறுவல்ல அப்பளத்தை நொறுக்கிப் போட்டு, தக்காளி-வெங்காயம் போட்டு, லெமன் ஜூஸும் புழிஞ்சு சாப்ட்டா...சூஊஊஊப்பரா இருந்தது.

தேவையான பொருட்கள்
மினி மீல் மேக்கர்-1/2கப்
வெங்காயம்(மீடியம்சைஸ்)-1
பச்சைமிளகாய்-1
மஞ்சள்தூள்-1/4டீஸ்பூன்
புதினா,மல்லி இலை-கொஞ்சம்
உப்பு
எண்ணெய்
அரைத்துக்கொள்ள
தேங்காய்-1/4கப்
ஏலக்காய்-1
பட்டை-2"துண்டு
கிராம்பு-1
சோம்பு-1டீஸ்பூன்
பிரியாணி இலை-1
வரமிளகாய்-5

செய்முறை
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்கவிட்டு மீல்மேக்கர் உருண்டைகளைப் போட்டு 3 நிமிடங்களில் எடுத்து தண்ணீரை வடித்து, குளிர் நீரில் அலசி வைக்கவும்.

வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லி-புதினாவை பொடியாக நறுக்கிவைக்கவும்.

அரைக்கக் கொடுத்தவற்றை கொஞ்சமாகத் தண்ணீர் விட்டு மைய அரைக்கவும்.

கடாயில் எண்ணெய் காயவிட்டு, வெங்காயம்-மிளகாய்,புதினா,மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமானதும் மினி மீல் மேக்கரை சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும்.

அரைத்த மசாலாவை ஊற்றி அரை கப் தண்ணீர்,தேவையான உப்பு சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும்.

மசாலாவில் தண்ணீர் வற்றியதும் அடுப்பை ஸிம்மில் வைத்து வறுவல் ட்ரையாக வரும் வரை அடிபிடிக்காமல் கிளறி, மல்லித்தழை தூவி இறக்கவும்.

சுவையான மீல் மேக்கர் ஃப்ரை ரெடி. சாதம்,சப்பாத்தியுடன் சாப்பிட நன்றாக இருக்கும். அல்லது நாங்க சாப்பிட்டது போலவும் சாப்பிட்டுப் பாருங்க,சூப்பரா இருக்கும்!

மினி மீல் மேக்கர் இல்லைன்னா பெரிய சோயா உருண்டையிலும் செய்யலாம்..நான் எப்பவுமே அதில்தான் செய்வது..இந்தமுறை செய்தபொழுது எடுத்த படத்தை விட பழைய படம் நல்லா இருக்கு...நீங்க என்ன சொல்றீங்க?? :)

குறிப்பு
பெரிய மீல் மேக்கரை நீரில்லாமல் பிழிந்துவிட்டுத்தான் சமைப்பது வழக்கம், மினி மீல் மேக்கரை தண்ணீரில் கொதிக்கவிட்டு எடுத்தபோது அழகழகா முத்துப்போல:) இருந்தது. தண்ணீரைப் பிழிந்ததும் பரிதாபமா ஷேப்லெஸ்-ஆப் போனது! :-| அதனால் அப்படியே சேர்த்து செய்தேன், ருசியில் பெரியவித்யாசம் தெரியவில்லை.இருந்தாலும் பிழிந்துவிட்டு செய்யச்சொல்லி நட்பூக்கள் எல்லாரும் சொல்றாங்க..அடுத்த முறை பிழிஞ்சுருவோம்! :)

Monday, December 5, 2011

போவோமா ஊர்கோலம்?

ஜோஷ்வா மரங்களும் கள்ளித் தோட்டமும்..

சின்னத்தம்பில குஷ்பு சுத்திப் பார்த்த மாதிரி பசுமையான குளுகுளு சத்தியமங்கலம்,கொடிவேரிக் காட்சிகளை மனசுக்குள்ள ஓட்டிகிட்டே இங்கே வந்தீங்கன்னா..சாரி, உங்கள் எதிர்பார்ப்பு ஏமாற்றமாகப் போகிறது. இந்தப் பதிவில் நான் உங்களைக் கூட்டிப்போகப் போவது ஒரு கள்ளிக்காடு! தேங்க்ஸ்கிவிங் வியாழனன்று நாங்கள் மற்றும் இன்னொரு நண்பர் குடும்பமும் ஜோஷ்வா ட்ரீ என்ற மரங்கள் நிறைந்த ஒரு நேஷனல் பார்க்கிற்கு போயிருந்தோம்.

மரங்களின் பெயராலேயே இந்த பார்க்கிற்கு ஜோஷ்வா ட்ரீ நேஷனல் பார்க் என்று பெயரும் கொடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட பாலைவனமாய்க் கிடக்கும் ஒரு இடத்தில் ஜோஷ்வா மரங்கள் பல ஏக்கர் பரப்பளவிற்கு பரந்து விரிந்து கிடக்கின்றன. குளிர்காலம் ஆரம்பித்த காரணத்தால் கொஞ்சம் குளிரும் காற்றுமாக இருந்தாலும் வெயிலும் நன்றாகவே இருந்தது அன்று. முற்பகலில் பார்க்கை அடைந்து நுழைவுச்சீட்டுடன் பார்க் மேப்பையும் வாங்கிட்டு உள்ளே நுழைந்தோம்.

மொட்டைக்காடாக இருக்கும் இந்தப் பூங்கா(!)வில், ஆங்காங்கே பெரிய பெரிய பாறைகள், சின்னசின்னப் பாறைகளாலான மலைகள் ஏராளமாக இருக்கின்றன. "ராக் க்ளைம்பிங்" செய்பவர்களின் விருப்பத்திற்குகந்த இடமாக இருக்கிறது இந்த ஜோஷ்வா ட்ரீ பார்க்.

பாறைகள் இருக்கும் இடங்களிலெல்லாம் எறும்புகள் போல மனுஷர்கள் தொத்திக்கொண்டு இருக்கிறார்கள். எப்படி இவ்வளவு செங்குத்தாக இருக்கும் பாறைகளில் எல்லாம் ஏறுகிறார்களோ!! எல்லாரும் ஒரே இடத்துக்கு சென்று அங்கே இருக்கும் பறவைகள்,செடிகொடிகள் பாதிக்கப்படக்கூடாது என்பதால் ராக் க்ளைம்பிங் செய்ய விரும்புவர்கள் பார்க் மேனேஜ்மென்ட்டிடம் முன் அனுமதி வாங்க வேண்டும் என்று தெரிவிக்கிறது இந்தப் பலகை..

எங்கு பார்த்தாலும் ஜோஷ்வா மரங்களும் பாறைகளும் மட்டுமே கண்ணில் படும் இந்தப் பார்க்கில் ஹைக்கிங் ட்ரெய்ல்களும் இருக்கின்றன. ஒரு மைல் தூரமுள்ள Hidden Valley Hiking Trail-லில் உள்ளே நுழைந்தோம்..ட்ரெய்ல் முழுவதும் ஆங்காங்கே வழிகாட்டும் பலகைகள்..சிறுவர் முதல் முதியவர் வரை கடந்து செல்லும் சக பயணிகள்.

ஜோஷ்வா மரங்களுடன் பைன் மரங்களும் இருக்கின்றன. முன்காலத்தில் செவ்விநிதியர்களின் முக்கிய உணவாக பைன் மரக்கோன்கள் இருந்ததாகத் தெரிவிக்கிறது ஹைக்கிங் ட்ரெய்லில் உள்ள இந்தப் பலகை..பச்சைக்கோன்களை மரத்திலிருந்து பறித்துச் சென்று நெருப்பில் சுட்டு உள்ளே இருக்கும் பைன் நட்ஸ்-ஐ சாப்பிடுவார்களாம்.

வீடு கட்ட பைன் மரம், பைன் மரப்பிசினுக்கும் உபயோகம்..நல்ல உபயோகமான மரம்தான் இந்தப் பைன் மரம்!:)

சில இடங்களில் சாதாரணமாக இருக்கும் பாதை ஒரு சில இடங்களில் பாறைகளாலான படிக்கட்டுகளாக இருக்கிறது. சுற்றிலும் பாறைகள் சூழ, இருக்கும் குட்டிகுட்டி மலைகள்..பாறைகள் ஒவ்வொன்றும் கரடுமுரடாகவெல்லாம் இல்லை..மழமழன்னு உருட்டி வைத்த களிஉருண்டைகளைப் போல இருக்கு! ஒவ்வொரு பாறையைப் பார்க்கையிலும் ஒவ்வொரு உருவம் தெரிகிறது! ;) இந்தப் படத்தில் இடதுமூலையில் இருக்கும் போட்டோல குட்டியா இருக்கும் பாறையைப் பார்க்கையில் சின்னதா ஒரு சேர் தெரிந்தது..அடுத்த படத்தில் கட்டத்தினுள் உட்கார்ந்திருக்கும் நாய்க்குட்டியின் உருவம் தெரிகிறதா? :)))))))

தஞ்சாவூர் பெரிய கோயில் நந்தி போல இருந்தது ஒரு மலையுச்சியில் இருந்த பாறை..இப்படியே பாறைகளையும் காட்டுச் செடிகளையும் ரசித்தவாறே பாறைகளில் ஏறி இறங்கி, நடந்து வெற்றிகரமாக ஹைக்கிங் ட்ரெய்லை கம்ப்ளீட் பண்ணினோம்.

வழியில் டென்ட் (Tent) அடித்து, காஸ்-ஸ்டவ், பாத்திரங்கள் சகிதம் கேம்ப் அடித்திருந்த மக்கள் கூட்டத்தைப் பார்த்துக் கொண்டே(நல்ல பசியுடன்) காருக்கு வந்து நாங்கள் எடுத்துப் போயிருந்த தக்காளி சாதம்-எலுமிச்சை சாதம்-உருளைகிழங்கு பொடிமாஸ்-புதினாத் துவையல்-பருப்புத் துவையலை ஒரு பிடி பிடிச்சோம்.அதையும் விடாம ஒரு போட்டோவைப் புடிச்சு கொண்டாந்திட்டமுல்ல?ஹிஹி!

அடுத்து எங்கே போலாம்னு பார்க் மேப்பை எடுத்து பார்க்கும்போதே மணி 3 ஆகியிருந்தது. "காக்டஸ் கார்டன்" என்ற கள்ளித்தோட்டம் நல்லா இருக்கும்னு சொல்லியிருந்தாங்க..சரி அதைப் பார்க்கப்போவோம்னு போனோம்,போனோம்..போயிட்டேஏஏஏ இருந்தோம்..மைல் கணக்கில் விரிந்து கிடக்கும் பார்க்கில் ஒரு மூலையில் இருக்கிறது இந்த Cholla Cactus Garden. 20-30 மைல்கள் ட்ரைவ் செய்த பிறகும் கள்ளித்தோட்டமே கண்ணில் படவில்லை. கூடவே வந்து கொண்டிருந்த ஜோஷ்வா மரங்களூம் திடீரென்று காணாமல் போயிருந்தன.

சூரியனும் மேற்கில் புதைய ஆரம்பித்திருந்தான். ஒரு இடத்தில் ரோடு சற்றே திரும்ப, திரும்பியதும் முகத்தில் அறைந்தன சோயா ( cholla-ல ரெண்டு "L"ம் சைலன்ட்டாமாங்க..கர்ர்ர்ர்ர்)செடிகள். எதாவது ஒரு கட்டடம் இருக்கும், ஆட்கள் இருப்பாங்கன்னு ஊட்டி பொட்டானிகல் கார்டன் ரேஞ்சுக்கு எதிர்பார்த்துப் போன எனக்கு மாலை நேர மஞ்சள் வெயிலில் தலையாட்டி வரவேற்ற கள்ளிக்காட்டைப் பார்த்ததும் சந்தோஷ ஆச்சர்யம்!

பாலைவனத்தின் ஒரு குறிப்பிட்ட ஏரியாவில் மட்டுமே இந்த கள்ளிச்செடிகள் வளர்வதற்கான தட்பவெப்பம் இருக்கிறதாம். அதனால் அங்கே மட்டும் குத்துக்குத்தாக வளர்ந்து இருக்கின்றன இவை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை எந்தக் கட்டடமும் இல்லை..எந்தத் திசையில் பார்த்தாலும் மலைக்குன்றுகள் எல்லை கட்ட, அழகான கரடிக்குட்டிகள் போல சோயா கள்ளிச்செடிகளே நிற்கின்றன. உச்சி முதல் பாதம் வரை முள்ளாய்ப் இருந்தாலும், அந்த அடர்த்தியான முட்களே இச்செடிக்கு டெடி பேர் செடிகள் என்று பேரும் வாங்கிக் கொடுத்திருக்கு! கள்ளிச்செடியில் என்ன அழகு என்று கேட்பவர்களும் இந்தச் செடிகளை, முள்ளில் பூத்திருக்கும் மலர்களைப் பார்த்தால் வாயடைத்துப் போவது உறுதி! :)

கள்ளித்தோட்டத்தினுள் நடந்து செல்ல கால் மைல் தொலைவில் ஒரு செல்ஃப் கைடிங் ட்ரெய்ல் இருக்கிறது. இந்த கள்ளிச்செடிகள் பற்றிய விளக்கங்கள் கொண்ட பேப்பர் வைக்கப்பட்டிருக்கு, செடியில் இருக்கும் முட்கள் விஷத்தன்மை கொண்டது, க்யூரியாஸிட்டியில் செடிகளை தொடாமல் ஹைக்கிங் ட்ரெய்லில் மட்டும் நடந்து சுற்றிப்பாருங்கள் என்று எச்சரிக்கைப் பலகையும் வைச்சிருக்காங்க. இந்த முட்கள் நம் உடலில் குத்திவிட்டால் எடுப்பது மிகவும் சிரமம் என்று அங்கு வந்திருந்த அமெரிக்கர் ஒருவரும் எச்சரித்தார். கூகுளில் கிடைத்த சோயா கள்ளித் தோட்ட வீடியோவை இணைத்திருக்கேன்,பாருங்க..



சூரியன் இறங்க இறங்க குளிரும் ஏறத்துவங்கியது.கள்ளித்தோட்டத்தினுள் கொஞ்சம் சுற்றிப் பார்த்துவிட்டு காரில் ஏறி " Key's View Point"விரைந்தோம்..சிறு குன்றின் மேல் இருக்கும் இந்த வியூ பாயின்ட் சன்ஸெட்-டிற்கு மிகவும் பிரபலம்!

நாலரை மணிக்கு நாங்கள் போய்ச் சேர்வதற்குள் கதிரவன் மேற்கு வானில் இறங்கி பஸிஃபிக் கடலில் மூழ்கியிருந்தான். செவ்வானமும், மலைக்குன்றுகளும் கண்களுக்கு விருந்து கொடுத்தாலும் குளிர்காற்று காருக்குப் போ என்று துரத்தியது. அந்த அழகிய காட்சியை முடிந்த அளவு கேமராவில் க்ளிக்கிவிட்டு குடுகுடுன்னு காருக்கு ஓடிவந்து ஹீட்டரை ஹை-ல போட்டுகிட்டு கிளம்பினோம். அன்று தேங்க்ஸ்கிவிங் என்பதால் பெரும்பாலான அமெரிக்கக் கடைகள் மூடப்பட்டிருக்க, திறந்திருந்த ஒரு பஞ்சாபி உணவகத்தில் டின்னரை முடித்துக்கொண்டு வீடு வந்து சேரும்போது இரவாகியிருந்தது.

பார்க் பற்றி மேலதிகத் தகவல்கள் தேவைப்பட்டால் ஆங்காங்கே இணைப்புகள் கொடுத்திருக்கேன்..அவற்றை க்ளிக்கிப் பாருங்க. ஜோஷ்வா ட்ரீ நேஷனல் பார்க்கில் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய இருக்கு..வருங்காலத்தில் மறுபடியும் போனால் இந்தப் பதிவைத் தொடர்கிறேன். பொறுமையா இந்தக் கள்ளிக்காட்டு இதிகாசத்தை(!!??!!) படித்தமைக்கு நன்றி!

LinkWithin

Related Posts with Thumbnails