Friday, September 24, 2010

என் இனிய தமிழ் மக்களே!

வணக்கம்! என் பெயர் எலிபன்ட் ஸீல்..நாங்கள்லாம் கடல்வாழ் உயிரினங்கள்.என்னைப்பத்தி விவரங்கள் தெரிய ஆசையா இருக்கா? இதோ இங்கே க்ளிக்குங்க. விக்கி-ல எல்லா வெவரமும், வெவரமாப் போட்டிருக்காங்க.

எங்களை பார்க்க விருப்பப்பட்டா நீங்க படகுல ஏறி, சிலமணி நேரம் கடலுக்குள்ள வந்து பாக்கோணும். எங்கள்ல சிலரைப் புடிச்சு, வித்தை காட்டறதுக்கு பழக்கி, "ஸீ வர்ல்ட்"ங்கற பேர்ல யுனைட்டட் ஸ்டேஸ்ல ஒரு ரெண்டு-மூணு இடங்கள்ல வச்சிருக்காங்க. அங்க நாங்க பந்து வெளாடுவோம்.குட்டிக்கரணம் போடுவோம்.இன்ஸ்ட்ரக்டர் சொல்லறா மாதிரி எல்லாம் பண்ணுவோம். கொஞ்சம் கஷ்டம்தான்,ஆனா அங்க வர சின்னக்குழந்தைங்க எங்களைப் பாத்து சந்தோஷப்படறதைப் பார்த்து மனசத் தேத்திக்குவோம்.

நாங்க அப்பப்ப கரையோரமா ஒதுங்குவோம்.இலவசமா நீங்க எங்களைப் பாத்துக்கலாம்.இது பஸிபிக் கடலோரம் எங்க காலனி..

எங்க உருவம் ரொம்ப வித்யாசமா இருக்கும். ஆண்கள் மிகவும் பெரிய உருவமா,எக்கச்சக்க எடையோட இருப்பாங்க.(எல்லாருமே குண்டு கல்யாணங்கதேன்.ஹிஹி)..உருவமும் பாக்கவே (உங்களுக்குத்தேன்)பயம்மா இருக்கும்.அவிங்க முகமும் கொஞ்சம் யானையின் சாயல்ல இருக்கறதாலதான் எங்க இனத்துக்கே இந்தப்பெயர் வந்திருக்கும்னு நினைக்கிறேன். ஆனா பாருங்க,லேடீஸ் நாங்கள்லாம் வழக்கம் போல, ஸ்லீக்&ஸ்லிம்-ஆ இருப்போம்.பார்க்கவும் லட்சணமா இருப்போம். :)

ஒரு நாள் மகி அக்கா எங்களையெல்லாம் பாக்க வரப்போறதா எனக்கு நியூஸ் வந்தது. நானும் காலைல இருந்து பாத்துகிட்டே இருந்தேன்..பொழுது போயிட்டே இருந்தது. எனக்கு கொஞ்சம் கொஞ்சமா பொறுமை குறைஞ்சுட்டே வந்தது.நிறைய மக்கள் அப்ஸர்வேஷன் டெக்ல இருந்து எங்களைப் பாத்துகிட்டே இருந்தாங்க. அக்கா கூட்டத்துக்குள்ள எங்கியாவது இருக்காங்களான்னு நாமே போய்ப் பாக்கலாம்னு நான் மட்டும் அப்படியே மெதுவா மக்கள் கூட்டத்துகிட்ட வந்தேன்.

ஊஹும்..அக்காவக் காணல! எல்லாருமே வெள்ளைக்காரங்கதேன் இருக்காங்க. அங்க ஒரு கைட் ஆன்ட்டி, எங்களைப்பத்தி கதையெல்லாம் எல்லாருகிட்டவும் சொல்லிட்டு இருந்தாங்களா..எனக்கும் கேக்க இன்ட்ரஸ்டிங்கா இருந்தது. கதை கேட்டுகிட்டே அக்காவுக்காக வெயிட் பண்ணி,அப்பூடியே தூங்கிப் போயிட்டேன்..
அக்கா வரதுக்குள்ள நீங்களும் தூங்கிரக்கூடாது.அதனால உங்களுக்கு ஒரு படங்காட்டறேன்.இது எங்க பேமிலி போர்ட்ரெய்ட்டுங்கோ. ஜூனியர் என்னைய மாதிரியே லட்சணமா இருக்காரல்ல? அப்பா ரெம்ப கத்தறாரும்மா,எனக்கு ரொம்ப பயமா இருக்குதுன்னு என்ரகிட்ட கம்ப்ளெயின்டு பண்ணிட்டு இருக்கறாரு ஜூனியரு. அவரு எப்பவுமே அப்புடித்தேஞ்சாமி,நீ பயப்படாதைன்னு சொல்லி சமாதானப்படுத்திருக்கறேன். இது பழைய படமுங்கோ. அடுத்த ஜனவரில வந்தீங்கன்னா எங்க குடும்பத்துப் புதுவரவைப் பாக்கலாம்.:)


திடீர்னு முழிச்சுப் பாத்தா அக்கா வந்து,என்னையவே கண்கொட்டாம பாத்துட்டு இருக்காங்க. எனக்கு ஒரே சந்தோஷமா போச்சுது.அப்புடியே உடம்பு சிலிர்த்துப் போச்சு, இது கனவா,நனவா?ன்னு என்னைய நானே கிள்ளிப் பாத்துகிட்டேன்.

நானும் அக்காவுக்கு ரொம்பநேரம் பேசிட்டு இருந்தோம். சாயங்கால நேரமாயிருச்சா..கடல் காத்து கொஞ்சம் கூலா வீச ஆரம்பிச்சதும் அக்கா கூட வந்தவங்க எல்லாரும் காருக்கு போயிட்டாங்க. அக்காவுக்கு என்னை விட்டுப் போறதுக்கு மனசே இல்ல. நாந்தான்,"குளிர ஆரம்பிச்சிருச்சு,போயிட்டு வாங்க"ன்னு டாட்டா சொல்லி அனுப்பிவச்சேன். அக்கா பத்திரமா ஊருக்கு வந்திருப்பாங்கன்னு நினைக்கிறேன்.

என்ர ஊட்டுக்காரர் வேற இப்புடி என்னத்தேன் பேசுவியோ நீயி..பேச ஆரம்பிச்சா நிறுத்தவே மாட்டியா?-ன்னு அர்ச்சனை பண்ண ஆரம்பிச்சுட்டாரு,வர்ட்டா?
~~~~~
எலிபன்ட் ஸீல் பேமிலி போர்ட்ரெய்ட்(மட்டும்)உதவி:விக்கிபீடியா

Wednesday, September 22, 2010

கேப்ஸிகம் க்ரேவி

தேவையான பொருட்கள்
கேப்ஸிகம்-1
வெங்காயம்-1(மீடியம் சைஸ்)
தக்காளி-1(மீடியம் சைஸ்)
பச்சைமிளகாய்-1
புளிக் கரைசல்-1/4கப்
வரமிளகாய்-4(காரத்துக்கேற்ப)
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
பட்டை-2" துண்டு
கிராம்பு-2
பிரிஞ்சி இலை-1
இஞ்சி-பூண்டு விழுது-1ஸ்பூன்
கொத்துமல்லி இலை-சிறிது
சர்க்கரை-1/2ஸ்பூன்
உப்பு
எண்ணெய்

வறுத்து அரைக்க
எள்-1டேபிள்ஸ்பூன்
வறுத்த வேர்க்கடலை-2டேபிள்ஸ்பூன்
தேங்காய்த் துருவல்-1 டேபிள்ஸ்பூன்

செய்முறை
கேப்ஸிகம்-ஐ பெரிய துண்டுகளாக நறுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,பச்சைமிளகாயை பொடியாக நறுக்கவும்.
வெறும் கடாயில் எள், வேர்க்கடலை,மிளகாய்,தேங்காய் இவற்றை கருகாமல் வறுத்துக்கொள்ளவும்.

அதிகம் வறுக்க வேண்டியதில்லை.எள் பொரிந்து,கடலை சூடானதும், மற்ற பொருட்களை சேர்த்து இறக்கிவிடலாம்.கடாயின் சூட்டிலேயே மிளகாயும், தேங்காயும் சூடாகிவிடும்.வறுத்த பொருட்களை ஆறவைத்து,புளிக்கரைசலுடன் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.


கடாயில் 1ஸ்பூன் எண்ணெய் காயவைத்து, கேப்ஸிகம் துண்டுகளை வதக்கி,தனியாக எடுத்துவைக்கவும்.

அதே கடாயில் இன்னும் சிறிது எண்ணெய் சேர்த்து, பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை போட்டு பொரியவிடவும். அத்துடன், வெங்காயம்-மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நிறம் மாறியவுடன் இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து,பச்சை வாடை போகும்வரை கிளறவும்.
நறுக்கிய தக்காளி சேர்த்து குழையும்வரை வதக்கவும்.

அதனுடன்,அரைத்த விழுது,மஞ்சள்தூள்,உப்பு,தேவையான நீர் சேர்த்து மிதமான தீயில் நன்றாக கொதிக்கவிடவும்.
குழம்பு நன்கு கொதித்து வந்ததும், வதக்கி வைத்துள்ள கேப்ஸிகம் சேர்க்கவும்.


குறைந்த தீயில்,எண்ணெய் மிதக்கும் வரை கொதிக்கவிட்டு, மல்லி இலை,சர்க்கரை தூவி இறக்கவும்.
கேப்ஸிகம் க்ரேவி தயார்!
சப்பாத்தி,பிரியாணி,வெஜ்-புலாவ்,தோசை இவற்றுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

குறிப்பு
  • வரமிளகாயிற்கு பதிலாக மிளகாய்த்தூள் சேர்க்கலாம். (வெங்காயம்,தக்காளி வதக்கும்போது சேர்த்து வதக்கவும்,)
  • மசாலா தவிர்க்க நினைத்தால், இஞ்சி-பூண்டு,பட்டை,கிராம்பு,பிரிஞ்சி இலை இல்லாமலும் செய்யலாம்.
  • புளிக்கரைசலை அரைப்பதற்கு பதிலாக, மசாலா வதங்கி வந்தபின்னர் நேரடியாக ஊற்றி கொதிக்கவிடலாம். எள்+தேங்காய்+கடலையை ட்ரையாக பொடித்து சேர்க்கலாம்.

Monday, September 20, 2010

தொடர் பதிவு: திரும்பிப் பார்க்கிறேன்...

பல நாட்களாக வலைப்பூக்களில் உலவிக்கொண்டிருக்கும் தொடர்பதிவுகளில் ஒன்று பதிவுலகில் இதுவரை கடந்துவந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும் இந்தத் தொடர்பதிவு.இந்தச் சங்கிலியில் விஜிசத்யா அவர்கள் என்னையும் இணைத்ததை அடுத்து...தொடர்கிறேன்!:)

1.வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்



மகி










Mahi







2.அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
ஆமாங்க..அது என் உண்மைப்பெயரின் சுருக்கம்..என் முழுப்பெயர் ஜஸ்ட் ஐந்தெழுத்துதாங்க.அது நீளமா இருக்குன்னோ என்னவோ,சிறுவயது முதலே வீட்டில் இப்படிதான் கூப்பிடுவாங்க.அதனால் இங்கும் இதே பெயரிலேயே தொடர்கிறேன்.

3
.நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி...
இதைப்பற்றி சொல்வதுன்னா,ஒரு குறுநாவலே எழுதலாம்.:) என்னால் முடிந்த அளவு சுருக்கிஎழுதுகிறேன்.

கையில் ஒரு டிஜிட்டல் கேமராவும், சமையல்ல ஆர்வமும்,ஏராளமான நேரமும் கிடைத்த காலங்கள்.நானும் சமைக்கிறேன்னு எனக்கே நம்பமுடியாம(!) ப்ரூஃபுக்காக (இது கொஞ்சம் ஓவராவே இருக்கோ?;) ) போட்டோ எடுத்து வைக்க ஆரம்பிச்சேன்.அப்பொழுது என் கணவரின் ஆபீஸும் வீட்டுப்பக்கத்திலேயே இருந்ததால்,ஒரு சிலநாட்கள் லன்ச்சுக்கு வீட்டுக்கு வருவார். ஒவ்வொரு நாள் வரேன்னு சொல்லிட்டு வரவே மாட்டாருங்க.சமைச்சு வச்சு, மண்டை காஞ்சு போய் உக்காந்திருப்பேன்.இவர் லன்ச்சுக்கு வராம இருக்க நாட்கள்ல சமைத்த உணவை அழகா டேபிள்ல அடுக்கி, போட்டோ எடுத்து அவருக்கு மெய்ல் பண்ணுவேன்.இதோ இதுதான் அப்படி முதன்முதலா அவருக்கு அனுப்பிய மெனு.

அதே வேகத்தில எடுத்த மற்றொரு நாளின் லன்ச்..


இந்த ஐடியா நல்லாவே வொர்க் அவுட் ஆச்சு. போட்டோவைப் பார்த்த உடனே வேலை இருந்தாலும் முடிச்சிட்டு உடனே சாப்பிட வருவாரு. அப்படி எடுத்த போட்டோஸ் எல்லாம்,மஹி'ஸ் கிச்சன் என்ற பேர்ல பிக்காசால அப்லோட் பண்ணி,என் நண்பர்களுக்கு,குடும்பத்துடன் பகிர்ந்துகொள்ளவும் ஆரம்பிச்சேன்.

இணையத்தில உலவும்போது பல குக்கிங் ப்ளாக்ஸ்-ஐ பார்ப்பேன். இந்தத் தளங்களைப் பார்த்துப் பார்த்து நாமும் ஒரு ப்ளாக் ஓப்பன் செய்தால் என்னன்னு தோணியது.என் கம்ப்யூட்டர் அறிவு
ப்ரிலிமினரி லெவல்தான்.இருந்தாலும் முயற்சித்துப்பார்க்கலாம்னு wordpress-ல ஒரு அக்கவுண்ட் ஓபன் பண்ணேன்.அதைப்பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக்குங்க. வேணாம்னா அப்படியே தொடருங்க.

அந்நேரம்தான் யூட்யூப்ல ஏதோ தேடுகையில் தமிழ்குடும்பம்.காம் கண்ணில பட்டுது. ஒரு ரெசிப்பி அனுப்பி சில மணி நேரங்கள்லயே பப்ளிஷ் பண்ணாங்க,அதுக்கு கமெண்ட்ஸ் வேற வேகமா வந்தது. எனக்கு ரொம்ப சந்தோஷமாகிடுச்சு.இவ்வளவு சிம்பிளா இருக்கே..மெய்ல்-ல டைப் பண்ணி,போட்டோஸ் அட்டாச் பண்ணி அனுப்பினாலே போதுமே,அப்புறம் எதுக்கு கஷ்டப்பட்டு(!!) ப்ளாக்ல போடணும்? இங்கேயே அனுப்புவோம்னு அனுப்ப ஆரம்பித்தேன்.மெல்ல மெல்ல அறுசுவை.காம் அறிமுகமானது. அதிலும் உறுப்பினராகி, செல்லங்கள் என்ற த்ரெட்ல என் வீட்டுச் செல்லங்கள் பற்றி சொல்ல ஆரம்பிச்சேன். நட்பு வட்டமும் விரிவடைந்தது.

இதுக்கிடையிலே கூகுள் ப்ளாகர்-லயும் ஒரு அக்கவுண்ட் ஆரம்பிச்சு,அதுவும் தூங்கிட்டு இருந்தது.இந்த வருடத்தின் ஆரம்பத்தில் நிறைய ஆட்கள் தனித்தனியே வலைப்பூக்கள் ஆரம்பிச்சாங்க. எனக்கும் தைரியம் வந்து பழைய அக்கவுண்ட்டை தூசு தட்டி எடுத்தேன். அதிலே ஒரு பதிவும் போட்டபின்னர் பார்த்தா,போட்டோஸ் சேர்க்க முடில.ஸ்பேஸ் இல்ல. (என்ன ஒரு நேரம் பாருங்க!) இந்த முறை விடாது கருப்பு-ரேஞ்சுல இன்னொரு அக்கவுண்ட்ல இருந்து இந்த ப்ளாகை போன பொங்கலன்று பொங்க வச்சுட்டேன்.:) [அப்ப ஸ்பேஸ் இல்லாத ப்ளாக் என்னாச்சுன்னு கேக்கறீங்களா? அதுவும் இருக்கு,Mahi's kitchen என்ற பெயரிலே,இந்த ப்ளாகின் டாப் ரைட் கார்னர்ல பாருங்க.]

4.
உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
எதுவுமே செய்யலைங்க.ப்ளாகிங் என் பொழுதுபோக்கு.எனக்குப் பிடித்த,நான்ரசித்த விஷயங்களை, ரசித்துச் செய்த சமையலை,சென்று வந்த பயணங்களின் இனிமையான நினைவுகளை சேமித்து வைக்க இது ஒரு இடம்,அவ்வளவே.என் வலைப்பதிவு பிரபலமாகவேண்டும் என்ற எண்ணம் எனக்கும் இன்னமும் வரமாட்டேனென்கிறது.இந்த வலைப்பூவில் உலவுபவர்கள்,முகம் சுளிக்காமல் வாய் விட்டு சிரித்துட்டு,இங்கே செலவிட்ட நிமிடங்கள் வீணாகவில்லை என்ற திருப்தியுடன் சென்றால் அதுவே போதும்.

5.
வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
ஆம்..பகிர்ந்திருக்கிறேன்.பெரும்பாலும் அவை காமெடிப் பதிவுகளே..என் எழுத்துத் திறமையைப் பரிசோதிக்கன்னு வச்சுக்கோங்களேன்.:) கொஞ்சம் நகைச்சுவை உணர்வுடன் எழுத முடியுமா என்று முயன்று பார்த்திருக்கிறேன்/பார்த்துக்கொண்டிருக்கிறேன்/பார்ப்பேன்.:) டெஸ்ட்ல பாஸ் பண்ணேனா,இல்லையா என்பதை நீங்கள்தான் சொல்லணும்.சாம்பிளுக்கு ஒரு சில பதிவுகள்..
பண்டோரா முறுக்கு
பூப்போல இட்லி-புதினா சட்னி: பகுதி-1,பகுதி-2,பகுதி-3
வீட் ப்ரெட் ஹல்வா
விளைவுகள்னு பாத்தா, பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய விளைவுகள் எதுவுமில்லை.சிறு-சிறு நிகழ்வுகளை அவ்வப்பொழுது மறந்துடுவேன்.நினைவு வைத்துக்கொள்வதில்லை.

6.நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
101 சதவீதம் பொழுதுபோக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.

7.
நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
ஏற்கனவே சொன்னமாதிரி,ஆரம்பித்து அம்போ-ன்னு விட்ட ப்ளாகுகளை கணக்கிலெடுத்தால் என்னிடம் ஒன்றுக்கு மேற்பட்ட வலைப்பதிவுகள் இருக்கு. அவற்றில் ஆரோக்கியமா,ஆக்டிவா பூத்துக் குலுங்குவது இந்த தமிழ் வலைப்பூ ஒன்றுதான்.

8.
மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
மற்ற பதிவர்கள் மீது கோபம்-பொறாமையெல்லாம் இல்லைங்க.ஒரொருவரின் தளங்கள்,ஆர்வம்,ரசனைகள் ஒவ்வொரு மாதிரி. என் விருப்பங்கள்,எண்ணங்கள் வேறுபடலாம். அதனால் நீங்க கேட்ட உணர்வுகளுக்கு இடமில்ல.

9.
உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.
இணையத்தில் எனக்குக் கிடைத்த தோழமைகள்தான் முதலில் கருத்து சொல்லியிருக்காங்க.அவரைப்பற்றி நானே சொல்வதைவிட,கொஞ்சம் வெயிட் பண்ணினீங்கன்னா அவங்களே சொல்லுவாங்க.. :):):)ஏன்னா..இந்தத் தொடர்பதிவைத் தொடரப்போவது அவங்களேதான்.


10.
கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்.
அதிகமா சொல்வதற்கு ஒன்றும் இல்லை..யார் மனதையும் என் வார்த்தைகள் புண்படுத்தக்கூடாது என்று நினைத்து அதே போல இருக்க முயற்சிக்கிறேன்.
~~~~~~~~~~~~~~

வழக்கம்போல,
பொறுமையா இதுவரை படித்த அன்புள்ளங்களுக்கு நன்றி சொல்லிட்டு, படிச்ச களைப்பைப் போக்க,சூடா..மொறு-மொறு வடை!

இந்தத்தொடரை தொடர இருப்பது அன்புத்தோழி




வானதி





வானதி,சீக்கிரமா வடையை ருசித்துட்டு,சட்டுப்புட்டுனு தொடருங்க..நன்றி!

Wednesday, September 15, 2010

தயிர் பச்சடி

கடந்த பதிவில் கொழுந்து விட்டு எரிந்த சந்தேகத்தீயைத்(!) தணிக்க கூலா ஒரு தயிர் பச்சடி!:)

தயிரில் வெங்காயத்தை அரிஞ்சு போட்டு,உப்பு சேர்த்து கலந்தா சரி..இதுக்கெல்லாம் ஒரு ரெசிப்பி வேணுமா?-ன்னு நீங்க கேப்பது எனக்கும் கேக்குது. ஆனா பாருங்க, ப்ளாக்னு ஒண்ணு ஆரம்பிச்சிருக்கோம்.அதுக்கு ஒரு அர்த்தம் வேணுமல்ல? அதனாலதான்!:)

ஒரு முறை என் கணவரின் கொலீக் வீட்டுக்கு போயிருந்தப்ப, அவங்க வீட்டில இந்த ரைத்தா சாப்ட்டேன். கொஞ்சம் வித்யாசமா இருந்தது..ரெசிப்பிய சொல்லுங்கன்னு கேட்டுட்டு வந்தேன்.ஆனா,சொன்னபடி கேக்கிற ஆளா இருந்தா,எங்கேயோ போயிருப்பேனே!:) அவங்க சொன்னதுல என் ருசிக்கேத்தமாதிரி மாற்றங்கள் பண்ணி செய்த ரைத்தா இது. மிகவும் சுவையா இருக்கும்.

தேவையான பொருட்கள்
தயிர்-1/4கப்
பொடியாக நறுக்கிய வெள்ளரித்துண்டுகள்-1/4கப்
இது மெஷர் பண்ணலீங்க..குட்டிக்குட்டியா இருக்குமே,படம் இதோ(நன்றி:கூகுள் இமேஜஸ்)


இந்த வெள்ளரிக்கால 2 காயை தோல்சீவி, நறுக்கி போட்டிருக்கேன்.
மிளகுத்தூள்-1/4 டீஸ்பூன்
சர்க்கரை-1/2 டீஸ்பூன்
உப்பு
நறுக்கிய கொத்துமல்லி இலை-சிறிது.
*****எவர்சில்வர்/பைரக்ஸ் கிண்ணம்-1*****

செய்முறை
இது மிக,மிக சுலபமான ரெசிப்பி. சமைக்கத்தெரியாதவங்க(?!) கூட ஈஸியா,நொடியில செய்துடலாம்.

முதல்ல தேவையான பொருட்கள்-ல இருக்க தயிரைத்தவிர, மற்ற எல்லாப்பொருட்களையும் ஒரு கிண்ணத்துல போடுங்க.

அதனுடன் தயிரை சேருங்க..

எல்லாவற்றையும் ஸ்பூனால நல்லா கலக்குங்க..

அவ்ளோதான்..டேஸ்ட்டி ரைத்தா ரெடி!!
சப்பாத்தி,பிரியாணி இவற்றுடன் சாப்பிட நல்லா இருக்கும். அப்படியே சாப்ட்டாலும் நல்லா இருக்கும். :P :P

பி.கு.
இந்த தயிர்பச்சடில உபயோகித்த தயிர் ஹோம் மேட் தயிர். தயிர் பச்சடிக்கு ரெசிப்பி சொல்லிட்டு,தயிர் எப்படிப் பண்ணறதுன்னு சொல்லாம இருந்தா நல்லா இருக்குமா?

விட்டமின் D மில்க்(ஹோல் மில்க்,2% மில்க் இப்படிப் பல பெயர்கள் கொண்டது) ஒரு 2 கப் எடுத்து காய்ச்சணுங்க. பால அடுப்பில வச்சுட்டு, அங்க-இங்க போயிரக்கூடாது,பக்கத்துலயே நிக்கணும்.இல்லைன்னா,கரெக்ட்டா நீங்க அந்தப்பக்கம் போன நேரம் பாத்து, இங்க பால் பொங்கி வழிஞ்சுடும்,ஜாக்கிரதை!

பால் பொங்கினதும், அடுப்பை ஸிம்-ல வச்சு ஒரு அஞ்சு நிமிஷம் சுண்ட வைங்க. அப்புறம் அடுப்பிலிருந்து இறக்கி(இப்பலாம் உஷாராயிட்டமில்ல,அடுப்பை 'அணைங்க'-ன்னு சொல்லவே மாட்டேனே!!;)) ஆறவையுங்க.

பால் கை பொறுக்கற சூடுக்கு ஆறினதும்(அது என்ன சூடுன்னு அங்கே ஒருத்தர் கேக்கறது தெரியுது..அதாவதுங்ணா, பால் இருக்கற கிண்ணத்த வெளிப்பக்கமா தொட்டுப்பாருங்க. ஒரு 30 செகண்ட் உங்களால கிண்ணத்த தொட முடிஞ்சா,அதுதாங்க கை பொறுக்கற சூடு) 3 டேபிள்ஸ்பூன் தயிரை பால்ல சேர்த்து ஸ்பூனால நல்லா கலந்துவிடுங்க.

தயிர் உறை ஊத்தற கிண்ணம் எவர்சில்வர்/பைரக்ஸ்-ஆக இருந்தா நல்லது. ஏன்னா, இந்த பால்+தயிர் கலவை 100% தயிர் ஆகறவரைக்கும் அது நம்ம சமைக்கும் அடுப்பு பக்கத்துலயே இருக்கணும். ப்ளாஸ்டிக் எல்லாம் வச்சீங்கன்னா,டேஞ்சருங்க.உருகிடும்! இப்படி ஒரு warm-ஆன இடத்துல ஒரு 12மணிநேரம் வச்சீங்கன்னா, கட்டித்தயிர்..இதோ இது போல ரெடியாகிடும்.
தயிர் புளித்ததும்,பத்திரமா எடுத்து ப்ரிட்ஜ்(அதேதான்..போன பதிவுல வந்ததே,அதே கருப்பு ப்ரிட்ஜ்தான்) உள்ளாற வச்சுடுங்க. தேவையானப்ப..இந்த பிரியாணி சமைக்கறப்ப, ரைத்தா பண்ணறப்ப, உங்க வீட்டுல யாராவது 'எனக்கு சின்ன பவுல்-ல தயிர், மேல ஷுகர் ஸ்ப்ரிங்கிள் பண்ணி குடுங்க'-ன்னு கேட்கும்போது,தேவையான அளவு எடுத்து யூஸ் பண்ணிட்டு, மீதியை ப்ரிட்ஜில வச்சுடுங்க.ஓக்கேவா?

பி.குறிப்புக்கு ஒரு பி.கு.
இந்த உறை ஊத்தறதுக்கு தயிருக்கு என்ன பண்ணலாம்? கடைகள்-ல விக்கற ப்ளெய்ன் low fat யோகர்ட் வாங்குங்க ஒரு முறை. அது தீரும்போது இந்த மெதட்-ஐ பாலோ பண்ணி ஈஸியா வீட்டுலயே தயிர் பண்ணிக்கலாங்க.

அது எதுக்கு low fat யோகர்ட்வாங்கோணும்?நாங்க நார்மல் யோகர்டே வாங்குவம்னு சொன்னீங்கன்னா,அது நூறு சதவீதம் அது உங்க வசதி. நாங்க கொஞ்சம் டயட் கான்ஷியஸ்..அதனால low fat யோகர்ட்தான் வாங்கறது.ஹிஹிஹி ஹி(இந்த அசட்டு சிரிப்பு எதுக்குன்னா,நீங்க கேக்க நினைச்சு, டீஸன்ட்டா கேக்காம போவீங்க பாருங்க..ஒரு கேள்வி..அதுக்கான பதில். அந்த கேள்வி "low fat யோகர்ட் வாங்கற நீங்க பால் மட்டும் ஏன் low fat/fat-free வாங்கறதில்ல?")

இன்னொரு விஷயம்..இங்கே half&half -ன்னு திக் மில்க் கிடைக்கும்..அதை மைக்ரோவேவ்ல சூடு பண்ணி உறை ஊத்தினா தயிர் சூஊஊஊப்பரா இருக்கும்.ஆனா, டயட்ல இருக்கறவங்களுக்கு அதெல்லாம் வேணாம்ல?? :)

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்...ஸ்ஸப்பா..முடீல! எனக்கே தாங்க முடீல.அப்ப உங்க நிலைம?!!!!! அதனால, மொக்கைய இப்போதைக்கு இத்தோட நிறுத்திடறேன்.நன்றி!

***** ===>தேவையான பொருட்களில் இந்த ஐட்டம் மிஸ் ஆனதாக கண்டுபிடித்த துப்பறியும் நிபுணருக்கு நன்றி!:)

Monday, September 13, 2010

சந்தேகம்..

தக்காளித்தொக்கு ரெசிப்பில நான் சொல்லியிருந்த அளவுகளான,
//தக்காளி-4 (பெரியது)
வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//
இதைப்பார்த்து,நம்ம சந்தேக சங்கத் தலைவருக்கு ஒரு சந்தேகம் வந்தது.
~~~~
//வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//

இந்த மீடியம் மட்டும் எனக்கு புரியவே மாட்டேங்குது...எந்த ஊரில வெங்காயம் மீடியம் சைஸுல வருது. எந்த வெங்காயமாவது ஒரே சைஸு , ஹைட் வெயிட்ல வருதா ...
~~~~
ஒரு ஆளுக்கு சந்தேகம் வந்தா பரவால்ல,ஆனா இன்னொருவருக்கும் இதே டவுட்டு வந்துடுச்சு!
~~~~
தக்காளி-4 (பெரியது)//
என்னங்க பதிவு படிக்க வந்த திட்டுறிங்க ?

//வெங்காயம்-2(மீடியம் சைஸ்)//

என்னங்க மறுபடியும் திட்டுறிங்க ?
~~~~
சகோதரர்களின் சந்தேகத்தை தீர்க்கலைன்னா,பாவம் தூங்கும்போது கண்ணு தெரியாம,சாரிசாரி, தூக்கமே வராம மண்டையப் பிச்சுக்குவாங்க.அதனால, இதோ உங்கள் சந்தேகத்தைத் தீர்க்க இந்தப்பதிவு..

இந்த வாரம் ஷாப்பிங் போயிட்டு வந்து காய்கறிகளை எடுத்து வைக்கும்போது திடீர்னு இப்படி ஒரு ஐடியா உதயமாச்சு.:) உடனடியா செயல்படுத்திட்டேன்.
*******
முதல் வரிசை,இடமிருந்து வலமாக..பெரீய்ய வெங்காயம்,மீடியம் சைஸ் வெங்காயம்&சிறிய வெங்காயம்.(சின்ன வெங்காயம் இல்லீங்க,சிறிய சைஸ் பெரிய வெங்காயம்!ஹிஹி)
இரண்டாம் வரிசை,இடமிருந்து வலமாக..பெரீய்ய தக்காளி,மீடியம் சைஸ் தக்காளி&சிறிய தக்காளி.
(கரெக்ட்டா லெப்ட் டு ரைட் பாக்கணும்..ஆப்போஸிட் டைரக்ஷன்ல பாத்தீங்கன்னா,நான் பொறுப்பில்ல..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!)

ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு அளவில் காய்கறிகள் கிடைக்குது. ஊரிலிருந்தவரை எனக்கு தெரிந்தது பெரிய வெங்காயம் & சின்ன வெங்காயம் ஒன்லி. இங்கே வந்தப்புறம் தான் ரெட் ஆனியன்,யெல்லோ ஆனியன்,ஒயிட் ஆனியன், பர்ல் ரெட் ஆனியன்(சின்ன வெங்காயத்துக்கு இங்கத்த பேரு:)),ஸ்ப்ரிங் ஆனியன்,லீக்ஸ் இப்படி பலவகைகளை பார்த்தேன்.இங்கே படத்திலிருப்பது யெல்லோ ஆனியனுங்கோ.
~~~~
ஓரு சின்ன வேண்டுகோள் ரெக்வஸ்ட், மாம்ஸுக்கு மூணு நாளைக்கு 3 X 3 = 9 வேலையும் இதையே குடுத்துடாதீங்க பாவம் அவர் ...க்கி..க்கி...
~~~~
டோன்ட் வொர்ரீ! தக்காளித்தொக்கு ஒரே நாளில தீர்ந்துபோச்.அதனால பலநாட்கள் அதையே சாப்பிடும் அதிர்ஷ்டமெல்லாம்(!!) கிடைக்கல. :) அதை எப்படி சாப்ட்டம்னா,

ஒரு சப்பாத்திய எடுத்து உள்ளங்கைல வச்சு,ஒரு ஸ்பூன் தொக்கை எடுத்து சப்பாத்தி மீது சீராகத் தடவி...
அப்பூடியே சுருட்டி சப்பாத்தி ரோலா பண்ணி அப்படியே சாப்பிடலாம்.:) இல்லைனா,சப்பாத்தியை சிறு துண்டுகளாப் பிச்சு, தொக்கிலே ஒரொரு பீஸா தொட்டும் சாப்பிடலாம்.
~~~~
//2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம்//

பிரிட்ஜ்ல் ஒரு வாரம் இருப்பது இருக்கட்டும் . அதுக்கு ஃபிரிட்ஜ் ஆன்ல அவசியம் இருக்கனுமா..? இல்ல ஆஃப் பண்னி இருந்தால் போதுமா..!!!///

பஸ்ட்டு யாரு வீட்டு பிரிட்க்சுலன்னு கேளு
~~~~
இது இவிங்களோட அடுத்த டவுட்டு.. எங்க வீட்டு ப்ரிட்ஜ்(கவனிக்க,எங்க ப்ரிட்ஜ் இல்ல,வீடும் எங்களுது இல்ல,ஹிஹி) எப்பவுமே ஆன்-ல தானுங்க இருக்கும்.ஆப் பண்ணற பழக்கமே இல்லீங்க.அதனால,

இதோ இந்த ப்ரிட்ஜ்-ஐ கதவைத்திறந்து உள்ளே வச்சுட்டு,மறக்காம கதவச் சாத்திடோணுமுங்க.தொக்கு யாரு வீட்டுல சமைக்கரமோ, அவிங்க வீட்டு ஃப்ரிட்ஜ்லதானுங்க வைக்கோணும்.

சரி,சரீ..ரெம்ப டென்ஷனாகாதீங்க..சும்மா, டைம்பாஸுக்கு இப்படி ஒரு போஸ்ட் போட்டேன். கூல் டவுன்! இந்த வட-பாயாசம் சாப்ட்டு சந்தோஷமா ஒரு கமெண்ட்டையும் போட்டுட்டுப் போங்க!

Wednesday, September 8, 2010

பூப்பூவா பூத்திருக்கு..

வானத்தில் நொடிக்கொரு உருவமெடுக்கும் மேகக்கூட்டங்களும், பூமியில் பூத்திருக்கும் பூக்களின் வடிவங்களும்,நிறங்களும்,நிறக்கலவைகளும் எப்பொழுதும் என்னை பிரம்மிக்க வைக்கும். அப்படி என்னைக் கொள்ளை கொண்ட சில மலர்கள்,இங்கே...
இந்த மலர்களைப் பார்க்கையில்தான் ஆண்டவன் எப்பேர்ப்பட்ட ஓவியன் என்று தெரிகிறது!





பூப்பூவாப் பூத்திருக்கும் பூக்களைப் பார்க்க இங்கே வாங்க!

Friday, September 3, 2010

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்
தக்காளி-4 (பெரியது)
வெங்காயம்-2(மீடியம் சைஸ்)
பச்சைமிளகாய்-2
மிளகாய்த்தூள்-1ஸ்பூன்(காரத்துக்கேற்ப)
கடுகு-1/2ஸ்பூன்
சீரகம்-1ஸ்பூன்
கறிவேப்பிலை-1 இணுக்கு
கொத்துமல்லிஇலை-சிறிது
மஞ்சள்தூள்-1/4ஸ்பூன்
சர்க்கரை-1/2ஸ்பூன்
எண்ணெய்-3டேபிள்ஸ்பூன்
உப்பு

செய்முறை
வெங்காயம்,தக்காளி,மிளகாயைப் பொடியாக நறுக்கவும்.

கடாயில் 2டேபிள்ஸ்பூன் எண்ணெய் காயவைத்து, கடுகு-சீரகம் தாளித்து,வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

வெங்காயம் நன்கு வதங்கி,லைட் ப்ரவுன் கலரானதும் தக்காளியைச் சேர்க்கவும்.

தக்காளி ஓரளவுக்கு வதங்கியதும் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு சேர்த்து நன்றாக கிளறி, மூடி போட்டு குறைந்த தணலில் வேகவிடவும். (தண்ணீர் சேர்க்கக்கூடாது,தக்காளி விடும் தண்ணீரே போதும்.)

அவ்வப்பொழுது, மூடியைத்திறந்து தக்காளியைக் கிளறிவிடவும். நன்கு சுருண்டு வரும்போது மீதமிருக்கும் 1டேபிள்ஸ்பூன் எண்ணெயையும் ஊற்றி அடிபிடிக்காமல் கிளறிவிடவும்.


கலவை நன்றாக சுண்டி,எண்ணெய் மிதக்கும் பக்குவம் வந்ததும், சர்க்கரை,பொடியாக நறுக்கிய மல்லி இலை தூவி அடுப்பிலிருந்து இறக்கவும்.நன்கு ஆறியதும் ஈரமில்லாத டப்பாவில் எடுத்து வைக்கவும்.

சுவையான தக்காளி தொக்கு தயார். இது பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது. 2 நாட்கள் வரை கெடாமல் இருக்கும். ப்ரிட்ஜில் ஒரு வாரம் வரை கூட வைக்கலாம். சப்பாத்தி,இட்லி,கலந்தசாத வகைகளுடன் சாப்பிடப் பொருத்தமாக இருக்கும்.

இரண்டாவது படம், அழகா இல்லாட்டாலும்(!) இங்கே போட்ட காரணம், தொக்கு எந்த அளவுக்கு சுண்டியிருக்கு என்று உங்களுக்கு ஒரு ஐடியா கிடைப்பதற்காகவே.(ஓக்கே,ஓக்கே,பல்லை கடிக்காதீங்க,கொஞ்சம் ஓவராதான் தெரியுது எனக்கே! நிறுத்திக்கறேன்:))

பி.கு./இது பயணங்களுக்கு எடுத்துச் செல்ல ஏற்றது/இதைப் படித்ததுமே உங்களுக்கு தெரிந்திருக்கும்.:) இங்கே இந்த வாரம் மூன்று நாட்கள் லீவ். நாங்களும் ஊர்சுற்றப்போறோம். சமையல் குறிப்பில்லாமல் வேறு பதிவு போட நினைத்தேன்,டைப் செய்ய நேரமில்லாத காரணத்தால்(!!?)...நீங்க இந்த வீகெண்டு தப்பிச்சீங்க,அடுத்த வாரம் வந்து மொக்கைய போட்டுருவமில்ல?ஹிஹிஹி!

LinkWithin

Related Posts with Thumbnails