Sunday, June 30, 2019

ஜூன் 2019

நாட்களும் மாதங்களும் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்கின்றன. மாதமொரு முறையாவது பதிவு போடவேண்டுமென்று நினைத்து, தூக்கத்தைக் கலைத்துக்கொண்டு ஜூன் 30-ஆம் தேதி இரவு 10.43க்கு ஒரு பதிவை தட்டிக்கொண்டிருக்கிறேன். :) :) :) 

இங்கே பள்ளிகளுக்குக் கோடை விடுமுறை ஜூன் 13ஆம் தேதி முதல் துவங்கியதால் ஸ்கூல் கிளம்(ப்)பும் அவசரம் இல்லை..ஆனால் நாள் முழுதும் 2 குட்டீஸை கட்டி மேய்க்கும் வேலை தூள் பறக்கிறது. கூடவே மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டி-யும் சேர்ந்துகொள்ள ஜூன் மாதம் வெகுவேகமாகப் பறந்துவிட்டது, ஜூலை இப்பவே எட்டிப்பார்க்கிறது. ;) 

சரி, இந்தப் பதிவில் மீண்டும் தோட்டத்தில் விளைந்த காய்களைக் காண்போமா?? 
 கேரட்..ஷார்ட் & ஸ்வீட் வகை விதைகள், டிசம்பர் 2018 கடைசியில் நட்டது. ஜூன் மாதம் அறுவடைக்கு தயாரானது. கேரட் கிழங்குகள் குட்டிக்குட்டியாக, கொழுகொழுவென்று இருந்தன. ஷார்ட் வெரைட்டி என்பதால் நீளமில்லை..சுவை நல்ல இனிப்பாக இருந்தது. ஒரு பேக்கட் விதைகள், முதல் அறுவடையில் சுமார் இரண்டரைக்கிலோ கேரட் கிடைத்தது. அதன் பின்னர் தேவைக்கேற்ப பறிக்கிறேன். லயாவின் ஆசிரியைக்கு ஒரு முறை, பக்கத்திலிருக்கும் நண்பிக்கு ஒரு முறை என பறித்திருக்கிறேன். இன்னும் மீதமிருக்கின்றன. நாளைக்கு மீண்டும் கொஞ்சம் பறிக்கலாம் என்று எண்ணம்.

முதன்முறையாக இத்தனை கேரட்டுகள் விளைந்தது, நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுமளவு கிடைத்தது மிக்க மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் இருக்கிறது. இயற்கையன்னைக்கு ஒரு மிகப்பெரிய நன்றி!! :)


 அடுத்து ஃபாவா பீன்ஸ்/ ப்ராட் பீன்ஸ்..ஒரு செடி வாடிப்போயாகிவிட்டது. மீதமுள்ள ஒரு செடியில் பறித்த காய்கள். சுத்தம் செய்வது ஒரு வேலை என்றாலும், சுவை அமோகம். வெண்ணெய் போல வாயில் கரைகிறது.
பீன்ஸ் குழம்பு, சுடச்சுட இட்லியுடன்!! :) 
~~~
இந்த வருடம் என் பிறந்தநாள், திருமணநாளை மிகவும் ஸ்பெஷலாக்கியது கடல் தாண்டி, கண்டங்களையும் தாண்டி, ஆகாயவிமானத்தில் அழகாகப் பறந்து வந்த வாழ்த்து மடல்கள்!! 

இத்தனை சிரத்தையெடுத்து, வெட்டி, ஒட்டி, அழகாக உருவாக்கி, வாழ்த்துகளை தன் அழகுக்கையெழுத்தால் மேலும் அழகாக்கி அனுப்பிய என் அன்புத்தோழிக்கு..நன்றி என்ற ஒரு வார்த்தை போதாது. I am so blessed to have you as a friend Aunty..Love you!!

இந்த வருடம் கோயில் தரிசனம் மிக நன்றாக இருந்தது. கூட்டமில்லை, குட்டிகள் இருவரும் சந்தோஷமாக விளையாடிக்கொண்டு சாமி கும்பிட்டார்கள். திரும்பி வரும் வழியில் இன்னொரு நண்பர் தம்பதி (அவர்களது திருமணநாளும் அதே ஜூன் 25)-யை உணவகத்தில் சந்தித்தது கூடுதல் மகிழ்ச்சி. நல்லதொரு நாளாக அமைந்தது. முகப்புத்தகத்தில் வாழ்த்திய அன்புநட்பூக்கள் இதையும் படிப்பீர்களென்ற நம்பிக்கையில் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

சரிங்க, மணி 11 ஆகிருச்சு..நான் தூங்கப் போறேன்..மீண்டும் ஜூலையில் சந்திப்போம். நன்றி!

Thursday, May 16, 2019

மா, பலா - மலரும் நினைவுகள்!


மாம்பழம், பலாப்பழம் என்றால் உடனே என் நினைவில் வருவது பள்ளிப்பருவத்து கோடைவிடுமுறை காலங்கள் தான்!! 8ஆம் வகுப்பு வரையிலும் கோடை விடுமுறை வந்தால் பள்ளி முடிந்த அடுத்தநாள் சித்திகள் வந்து என்னை ஊருக்கு (வீட்டிலிருந்து 2 பஸ் மாற்றி போகவேண்டும், மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் தொண்டாமுத்தூருக்குப் பக்கத்தில் ஒரு சின்ன கிராமம்.) என்னவோ ஏழு கடல் தாண்டி போகிற மாதிரி இருக்கும். காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் 56-ஆம் நம்பர் பேருந்துக்கு காத்திருந்து பஸ் வந்தவுடனே எல்லாரும் இறங்க காத்திருந்து ஓடிப்போய் ஏறி இடம் பிடித்து உட்கார்ந்தால் என்னவோ ஒரு பெரிய அச்சீவ்மெண்ட் போல இருக்கும். :))))

ஊரில் பஸ் விட்டு இறங்கி, வீடு சேரும்வரை பார்க்கும் ஆட்கள் எல்லாம் "டவுன் புள்ளை"களை நலம் விசாரிக்க வீடு வந்து சேருவோம். அப்புறம் லீவு நாட்கள் எல்லாம் பக்கத்து வீட்டு வாண்டுகளுடன் "பாண்டிங்குழி (பல்லாங்குழி) ஆடுவதும், புளியங்கொட்டைகளைப் பரப்பி வைத்து "ஒட்டி" விளையாடுவதும், தாயக்கட்டம் போட்டு தாயம் ஆடுவதும், மாலையானால் மல்லிகை மொக்குகளை பறித்து கோர்த்துவைப்பதுமாகக் கழியும்.

அப்புறம்  சித்தி ஒரு நாள் உக்கடம் வந்து மாம்பழம், பலாப்பழம் எடுத்துவருவார். எனக்கு நினைவில் இருப்பது  பாலக்காட்டு மாம்பழம், நீல மாம்பழம், கிளிமூக்கு மாம்பழம்!!! அல்போன்ஸா எல்லாம் கேள்விப்பட்டது கூட இல்லை! ஹிஹி...போகவர மாம்பழங்களை எடுத்து கழுவி கடித்து தின்று, கையெல்லாம் மாம்பழச்சாறு வடிய வடிய சுவைத்தது எல்லாம் மன அடுக்குகளில் அழியா நினைவுகளாய்!!!


பலாப்பழத்தை சுத்தம் செய்து சுளைகளை எடுக்கும் வரை பொறுமையாய்க் காத்திருக்க வேண்டும். வீடெல்லாம் மணக்கும், சுத்தம் செய்த பழங்களை சீக்கிரம் தீர்த்திடுதல் நலம். இல்லையென்றால் கோடைச்சூட்டிற்கு ஒரு நாளுக்கு மேல் தாங்காது. அக்கம் பக்கம் வீடுகளுக்கெல்லாம் பகிர்ந்து விட்டு மீதமிருப்பதை வெல்லம் சேர்த்து வதக்கியும் வைப்பார்கள். பலாக்கொட்டைகளை "தண்ணி அடுப்பில்" (குளிப்பதற்கு தண்ணீர் காயவைக்கும் அடுப்பு) போட்டு சுட்டெடுத்து சுவைப்போம். பலாச்சுளைகளை ஓவராகத் தின்று வரும் வயிற்றுவலிக்கு இந்த சுட்ட பலாக்கொட்டை நல்லது என்பார்கள். எவ்வளவு சுளைகளை வயித்துக்குள் அமுக்கினாலும், 2-3 சுட்ட பலாக்கொட்டைகள் தின்றுவிட்டால் எல்லாம் நலமே!!! :)

எதுக்கிந்த மலரும் நினைவுகள் என்றால்..தமிழ்ப்புத்தாண்டுக்கு வாங்கிய பலாப்பழமும், சமீபத்தில் வால்மார்ட்டில் சுகந்தமான மணம் வீசிக்கொண்டிருந்த மாம்பழங்களை வாங்கிவந்து கத்தி கபடா எல்லாம் உபயோகித்து நறுக்கி நளினமாகச் சாப்பிடாமல், சும்மா கழுவிட்டு, தோலை உரித்து துப்பிவிட்டு சுவைத்து தின்னும்போது இதெல்லாம் நினைவு வந்ததுதான். :))))

நன்றி, மீண்டும் சந்திப்போம்! 

Tuesday, April 30, 2019

தோட்டம் 2019

இந்த வருடம் எங்க வீட்டு குட்டி தோட்டத்தின் விளைச்சல்! 

கடந்த வருட இறுதியில் பேக்யார்ட் -ஐ கொஞ்சம் செப்பனிட்டோம்..அப்போது காய்கறிகள் வளர்க்க என்று ஒரு இடத்தில் Raised bed மாதிரி ஒன்றை உருவாக்கினோம். கிறிஸ்மஸ் பயணம் கிளம்புமுன் நர்சரியில் இருந்து வாங்கி வந்த நாற்றுகளை நட்டுவிட்டோம். 

ஜனவரி 30ஆம் தேதி மஞ்சள் நிற காலிஃப்ளவரும், ரொமனஸ்கோ காலிஃப்ளவரும் மொட்டுக்கட்டி வளர ஆரம்பித்தன. 
மடமடவென ஒரு மாதத்தில் இரண்டு காய்களுமே வளர்ந்துவிட்டன. :) 

அந்த காய்களைப் பறித்துச் சிலநாட்கள் கழித்து ப்ரோக்கலி பூக்கள் வளர ஆரம்பித்தன. 

ப்ரோக்கலி இரண்டே வாரங்களில் வெகு வேகமாக வளர்ந்துவிட்டது. அதனுடன் நட்ட காலிஃப்ளவர் தான் கொஞ்சம் ஏமாற்றம்.. ஒரு பூவைத்தவிர மற்றவை சரியாக வளரவில்லை..பிறகு இணையத்தில்  இருந்து காலிஃப்ளவர் வளர ஒரே சீரான சீதோஷ்ணம் தேவை எனத் தெரிந்தது. எல்லாம் ஒரு அனுபவம்தான்! 
நூல்கோல் (knol kohl, kohlrabi) நாற்றுகளும் டிசம்பரிலேயே நட்டு வைத்ததுதான்..6 செடிகளில் சில காய் பெருக்காமல் முழுத்தண்டுமே பெருத்து வளர்ந்தன..ஒழுங்காய் வளர்ந்த ஒரு காயையும் பூப்பூக்கும் வரை விட்டு வைத்துவிட்டேன். அறுவடை எப்பொழுது செய்ய வேண்டும் என்ற அறியாமை..முதல் முறை வளர்க்கையில் பல பாடங்கள்!! இருப்பினும் கிடைத்த ஓரிரு காய்கள் சுவை அலாதியாய் இருந்தன.

அடுத்து வருவது Fava Beans / Broad beans செடி..நான் இதுவரை பார்த்திராத வண்ணம் இலைகளுடன் தளதளவென இருந்ததால் 2 நாற்றுகள் வாங்கிவந்தேன். அமைதியாக அழகாக வளர்ந்து பூக்கள் மலர ஆரம்பித்தன..பிறகு பார்த்தால் செடி பாட்டுக்கு மடமடவென வளர்ந்துவிட்டது. காய்கள் ஒன்றுமே வரக்காணோம்..திடீரென ஒரு நாள் பார்க்கையில் காய்கள் தட்டுப்பட்டன..தண்டின் ஓரத்திலேயே ஒவ்வொரு காயாய், வெண்டைக்காய் போல காய்கள் வளர்கின்றன. நூல்கோல் பறிக்க ஏமாந்துபோனதில் முதல் முறை ஃபாவா பீன்ஸை கொஞ்சம் இளசாகவே பறித்துவிட்டேன். கொஞ்சமாக இருந்ததினால் பிரியாணியில் போட்டு செலவழித்தாயிற்று. 


இரண்டாம் முறை பீன்ஸ் காய்களை பறித்தாயிற்று. கூடவே புழுக்கள் தொந்தரவு நிறைய இருக்கிறதால் பார்த்து பார்த்து அவற்றை பிடித்து நீக்கிக்கொண்டும், புழு தின்ற இலைகளை நறுக்கி வீசிக்கொண்டும் நாட்கள் நகர்கின்றன. 

டர்னிப் - குளிர்கால காய்கறி என்று அதுவும் போட்டிருந்தோம். தப்பிப்போய் தள்ளி விழுந்த ஒரு விதை மட்டும் நல்ல முற்றிய காயாய் விளைய, ஓரே இடத்தில் போடப்பட்ட மற்ற விதைகள் நெருக்கியடித்துக்கொண்டு வளர்ந்தன.
டர்னிப்பும் பூப்பூக்கத் தொடங்கவே சுதாரித்துக்கொண்டு இந்த வாரம் அவற்றையும் பறித்தாயிற்று.
அதிகம் எழுத நேரமில்லாததால் படங்களை நிறையச் சேர்த்து ஒரு பதிவு. இந்தக் காய்கறிகள் வளர்ப்பதைப் பற்றி ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கருத்துப்பெட்டியில் கேளுங்கள்..தெரிந்ததைப் பகிர்கிறேன். நன்றி!! :))) 


Saturday, March 23, 2019

Apple Crumb Pie

தேவையான பொருட்கள் 
ஆப்பிள் -5
Unbaked Pie crust 9" -1 (I have used Marie calendar's frozen pie crust here)
Cold butter / குளிர்ந்த வெண்ணெய்-1/3 கப்
All purpose flour / மைதா மாவு- 3/4கப்
சர்க்கரை -1/2கப்
Cinnamon powder / பட்டை தூள் - 2டீஸ்பூன்

செய்முறை
ப்ரோஸன் பை க்ரஸ்ட்டை ஃப்ரீஸரில் இருந்து 2 மணி நேரம் முன்னதாக வெளியே எடுத்துவைக்கவும்.

குளிர்ந்த வெண்ணெயை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். அதனுடன் சர்க்கரை, மைதா சேர்த்து கலக்கவும்.  கலவையானது (வெண்ணெய் முக்கால்பாகம் கரைந்து ) மணல்மணலாக வரும்வரை கலக்கவேண்டும். இதனை இரண்டு வெண்ணைக்கத்திகளைக்(butter knife) கொண்டு cut & fold method-ல் செய்யவேண்டும். கைகளாலும் கலக்கலாம், கை சூட்டில் வெண்ணெய் உருகிவிடும் என்பதற்காக இந்த ப்ரிகாஷன்!! ;) அல்லது விரல் நுனிகளால் மெதுவாக கலக்கலாம். அதிகமாக கலந்தால் வெண்ணெய் முழுவதும் கரைந்துவிடக்கூடும், அது நமக்கு தேவையில்லை. வெண்ணெய் துண்டுகள் பட்டாணி அளவு வரும்வரை கலந்தால் போதும்.

ஆப்பிள்களை, தோல் சீவி, விதைகள் கொண்ட நடுப்பகுதியையும் அகற்றிவிட்டு நறுக்கிக்கொள்ளவும். நறுக்கிய ஆப்பிள் துண்டுகள், சின்னமன் பொடி, 1டேபிள்ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து வைக்கவும்.

அவன்(Oven)-ஐ 400F ப்ரீஹீட் செய்துகொள்ளவும். 
பை க்ரஸ்டில் சர்க்கரை சேர்த்த ஆப்பிள் துண்டுகளை இடைவெளியில்லாமல் அடுக்கவும். நிறைய்ய்ய்ய ஆப்பிள்களை குவித்துவைக்கலாம்..பார்ப்பதற்கு நிறைய இருந்தாலும் பேக் செய்து எடுத்ததும் ஆப்பிள்கள் குறைவாகவே தெரியும். அதன் மீது மாவு-சர்க்கரை கலவையைப் போட்டு மூடவும்.
இதனை Oven -ல் வைத்து 45 முதல் 50 நிமிடங்கள் பேக் செய்யவும். பை- மீது தூவிய க்ரம்பிள் கலவை பொன்னிறமாக மாறும்வரை பேக் செய்து எடுக்கவேண்டும்.  சுவையான ஆப்பிள் பை ரெடி. குறைந்தது 2 மணி நேரங்கள் குளிரவைக்கவேண்டும். அல்லது ஒரு நாள் இரவு முழுக்க குளிர்சாதனப்பெட்டியில் வைத்து அடுத்தநாள் பரிமாறலாம்.
பை செய்து அடுத்தநாள் காலையில் கட் செய்து சுவைத்தபோது இனிப்பு கொஞ்சம் தூக்கலாக இருப்பதாகத் தோன்றியது. அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்துவிட்டேன். கொஞ்சம் ஏமாற்றம்..ஆசைஆசையாய் செய்து இப்படி திகட்டும் தித்திப்பாய் போய்விட்டதே என்று!!  2 நாள் கழித்து மனது கேட்காமல் மறுபடி ஒரு துண்டு எடுத்து சாப்பிட்டுப் பார்க்க சூப்பராக இருந்தது. பிறகு ஒரு வாரத்துக்கும் மேலாக நான் மட்டுமே வைத்து வைத்து சாப்பிட்டேனாக்கும். ஹிஹிஹி... :) 

குறிப்பு 
Cutting the butter into flour - Click here to see the method.
இந்த ரெசிப்பி இண்டர்நெட்டில் பார்த்து செய்தது..லிங்க்-கை சேவ் செய்ய மறந்துபோனேன்..பிப்ரவரி முதல் வாரம் செய்தது.. இப்போ தேடினால் கிடைக்க மாட்டேன் என்கிறது. மறுபடி தேடி கிடைக்கையில் இணைப்பேன். 
பொதுவாக ஆப்பிள் பை- யில் க்ரீன் ஆப்பிள்/ க்ரானி ஸ்மித் ஆப்பிள் சேர்ப்பார்கள். அது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் இருக்கும்.  அது எனக்கு அவ்வளவாக விருப்பம் இல்லாததால் இங்கே இனிப்பான ஆப்பிள் தான் உபயோகித்திருக்கிறேன். 

Sunday, March 10, 2019

கடலை வறுக்கலாமா? :)

U.S. வந்து பலநாட்கள் நம்ம ஊர் வேர்க்கடலை கிடைக்கவில்லை/ கிடைக்குமிடம் எனக்குத் தெரியவில்லை..ஹிஹி!! வால்மார்ட்-ல் கிடைக்கும் Planters ப்ராண்ட் வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலையையே பலகாலம் உபயோகித்தேன். 

இந்தியன் ஸ்டோர்ஸில் கடலை பேக்கட்டை பார்த்திருந்தாலும், பச்சைக்கடலை..அதை வாங்கி வறுக்கவேண்டுமே என்ற கவலை (கவனிக்க..12 வருடங்கள் முன்பு! ;))..அதான் வால்மார்ட்டில வறுத்து தோல் நீக்கியதே கிடைக்கிறதே என வாங்கிய காலங்கள்!! பிறகொருமுறை வாங்கித்தான் பார்ப்போமே என வாங்கி உப்புத்தண்ணீர் தெளித்து வறுத்து வைத்திருக்கிறேன்.,2010 ஆம் ஆண்டு என நினைக்கிறேன், அப்போது நேரம் நிறைய்ய்ய்ய இருந்தது. பிறகு பெர்ஷியன் கடையில் வறுத்த கடலை கிடைத்தது..அது வால்மார்ட் கடலையை விட கொஞ்சம் பெட்டர்!! அதனால் அங்கே வாங்க ஆரம்பித்தாயிற்று.

மறுபடி ஒரு சின்ன கொசுவர்த்தி...சிறுவயதில் பக்கத்தில் இருக்கும் மளிகைக்கடை (எங்க சொந்தக்காரங்க கடைதான்!! )யில் நாலணாவுக்கு "கள்ள" வாங்கி அதை அரைமணி நேரம் நிதானமாக சோடனைகள் செய்து சாப்பிடுவேன்..முதல்ல கடலையைத் தேய்த்து தோலை எல்லாம் ஊதி அப்புறப்படுத்திவிட்டு, பிறகு இரண்டிரண்டாகப் பிரித்து, பிறகு அதிலே இருக்கும் குட்டி கொண்டையையும் பிரித்து முதலில் அதைச் சாப்பிட்டுவிட்டு பிறகு ஒவ்வொன்றாக கடலையைத் தின்பது!! :) :) :)  அந்தக் கடலையின் ருசி இங்கே கிடைக்காததால் கடலையை சட்னி, புளிசாதத்துக்கு உபயோகிப்பதோடு நின்றுபோனது.  

2013-ஆம் ஆண்டு மாமனார்-மாமியார் இங்கே வந்திருந்தபோது மறுபடி கடலை தேடல் ஆரம்பமாயிற்று..இருவரும்  வேர்க்கடலையை விரும்பிச் சாப்பிடுவார்கள், அவர்கள் மகனும் அப்படியே என அப்போதான் எனக்குத் தெரியவந்தது வேற கதை!! மாமியாருக்கு நான் வாங்கும் பெர்ஷியன் கடலை ருசி பிடிக்கவில்லை..வேறு கிடைக்குமா கிடைக்குமா எனக் கேட்டு இந்தியன் ஸ்டோரில் மறுபடி பச்சைக்கடலை வாங்கி வந்தேன். அதனை மைக்ரோவேவ்-ல வறுக்கலாமென எங்கோ இண்டர்நெட்டில் படித்தது..எக்ஸ்பெரிமெண்ட்ஸ் செய்து மெல்ல மெல்ல என்ன செய்ய வேண்டுமென பிடிபட்டது.. அப்போதிருந்து இதே முறைதான். என்ன தான் சொல்லுங்க, நம்ம ஊர் சிறு வேர்க்கடலையின் ருசி அமெரிக்காவின் மெகா சைஸ் வேர்க்கடலைல இல்லவே இல்லை!!   

இவ்வளைவையும் பொறுமையாப் படிச்சுட்டீங்க, அப்படியே கடலையையும் வறுத்துடலாம், வாங்க..

இது இங்கே இண்டியன் ஸ்டோரில் வாங்கிய பச்சைக்கடலை..
 பேக்கட்டை பிரிச்சு, ஒரு மைக்ரோவேவ் பவுல் (உயரம் குறைவான, அகலமான பவுல் அல்லது ப்ளேட் நன்று) இல் எடுத்துக்கொள்ளவும். ஆர்வக்கோளாறுல அதிகமா எடுத்துகிட்டீங்கனா அதுக்கேற்ற மாதிரி நேரம் அதிகரிக்கும். நான் எடுத்திருப்பது  ஏறத்தாழ ஒரு கப். மைக்ரோவேவில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும். மைக்ரோவேவ் ஆஃப் ஆன உடனே அதனைத் திறக்காமல் சில நிமிடங்கள் கழித்து திறக்கணும்..பாத்திரச்சூட்டில் கடலை இன்னும் வறுபட்டுக்கொண்டிருக்கும்.
 2 நிமிடங்கள் வறுபட்ட கடலை...வெளியே வைத்து ரூம் டெம்பரேச்சருக்கு ஆறிய பின்னர் கலந்துவிட்டு, மீண்டும் 2 நிமிடங்கள் வைக்கவேண்டும். 
அதே போல ஆறவிட்டு, கலந்துவிட்டு மீண்டும் 2 நிமிடங்கள்.. 
நன்றாக ஆறிய பிறகு, சுவை பார்த்துக்கொண்டு விரும்பினால் மீண்டும் ஒரு நிமிடம் மைக்ரோவேவில் வைத்து எடுத்து ஆறவைத்தால், 
சுவையான வறுத்த கடலை ரெடி..
குறிப்பு 
இது என்னைப் போன்ற சோம்பேறிகளுக்கு..ச்சீ,ச்சீ...ஆர்ட்டிஸ்ட்களுக்கு வசதியான மெத்தட்..மைரோவேவ்-ல இரண்டு நிமிஷம் முடிந்ததை மறந்தே போய் சிலமணி நேரங்கள் விட்டாலும் பாதகமில்லை...ஆடி அசைந்து 2 நாட்கள் நிதானமாக வறுத்தாலும் ஓகேதான்.. ஸ்டவ் பக்கத்திலேயே நின்னுகிட்டு கறுகாமப் பாத்து பாத்து வறுக்கும் டென்ஷன் இல்ல.. Oven- ல ரோஸ்ட் பண்ணியும் எடுக்கலாம் என்றாலும், நம்ம கவனக்குறைவா அவரை (oven) கவனிக்காமல் விட்டா மைக்ரோவேவ் மாதிரி அமைதியா இல்லாம, கடலையைக் கறுக்கி, கத்தி, புகை வரவச்சுன்னு ரெம்ப வேலை குடுப்பார்..ஸோ, மைக்ரோவேவ் இஸ் ஈஸி யு ஸீ!! ;) :) :D :D

Sunday, February 24, 2019

அறுந்த வாலு..குறும்பு தேளு..!!

 ஆனாலும் அவ ஏஞ்சலு!!! :) :D

ஆமாங்க..எங்க வீட்டு குட்டி தேவதை ஒரு அறுந்தவாலு, குறும்புத்தேளு..விஷமக்காரக் குட்டி!! அப்பாவை தன் சுண்டுவிரலில் கட்டிச் சிறை வைப்பதிலாகட்டும்...
அம்மாவை அரை நொடி அக்கடான்னு அமர விடாமல் படுத்துவதிலாகட்டும்..
அக்காவை பார்த்துப்பார்த்து அவள் செய்யும் எல்லா வேலைகளையும் செய்வதாகட்டும்..
ஜீனோவை "அட்ட்ட்ட்டி (அடி!!)..." என்று செல்ல மிரட்டல் செய்வதாகட்டும்...
அப்பாவோ அம்மாவோ கோபக்குரல் கொடுத்தால் கழுத்தைக்கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சி சமாதானப்படுத்துவதாகட்டும்..
லயாவுடன் சண்டை போட்டு அடி பின்னுவதாகட்டும்...
ஸ்வராக்குட்டியை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது எங்க சின்ன சாம்ராஜ்யத்தில்!!

இப்பத்தான் சின்னூண்டு விரல்களைப் படம் பிடித்த நினைவாக இருக்கிறது..அதற்குள் இரண்டு வருடங்கள் உருண்டோடி விட்டன..அம்மணி இப்ப எங்களையெல்லாம் மிரட்டியது போதாதென்று வருண பகவானையும் மிரட்ட ஆரம்பித்துவிட்டார். மழை வரும்போதெல்லாம் "ரெய்ன் ரெய்ன் கோ அவே.." பாடிப்பாடி போரடித்தபின் ஒருநாள் வெளியே பெய்து கொண்டிருந்த மழைக்கு ஒரே மிரட்டல்..."ரெய்ன்...ஸ்டாப்!! அக்கா அண்ட் பாப்ப வான்ட்ஸ் டு ப்ளே..ஸ்டாப்!" என்று கத்த ஆரம்பித்தார்..ஆனாலும் மழை விடலைங்கறது வேற கதை..ஹிஹி..!! 

இரண்டாம் பிறந்தநாளுக்கு முதல்நாள் கொட்டிய மழையில் தானே குடையைப் பிடித்துக்கொண்டு நடப்பதாய் அடம்பிடித்து அக்காவும் தங்கையும் மழையில் கொட்டமடித்து கும்மாளம் போட்டார்கள்..
கூடவே அக்காவுக்கு ஒரு வாரமாய் இருந்த ஜலதோஷமும் தங்கைக்கு ஒட்டிக்கொள்ள பிறந்தநாளன்று நல்ல சளி.. வாங்கிவந்த கேக்கை கட் செய்யவில்லை..எதுவுமே செய்யவில்லை..வாடிப்போன கீரைத்தண்டாய் வதங்கிக்கிடந்தவளைத் தோளில் போட்டுக்கொண்டே பிறந்தநாள் ஓடிவிட்டது.. ஒரு வாரம் படுத்தி எடுத்த ஜலதோஷம் கொஞ்சம் கொஞ்சமாய் விடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இங்கே இந்த வருடம் குளிரும் மழையும் கொஞ்சம் அதிகபட்சமாகவே இருப்பதால் சளித்தொந்தரவும் விடாமல் துரத்திக்கொண்டே இருக்கிறது. 

சரி, அவையெல்லாம் போகட்டும்..பதிவில் இறுதியாக ஒரு புது ரெசிப்பி..டிரையல்!! கொஞ்சம் சொதப்பிவிட்டது என நான் முடிவேகட்டி குளிர்சாதனப்பெட்டியில் பூட்டி வைத்த மறுநாள் சில உணவுகள் பழசானாத்தான் ருசி என்பதை நினைவூட்டிய ஆப்பிள் க்ரம்ப் பை ( Apple Crumb Pie)
ரெசிப்பி விரைவில் எங்க குட்டி வாலுங்க, குறும்புத்தேளுங்க ரெண்டு பேரும் அனுமதிக்கையில் வெளியிடப்படும். வழக்கம் போல என் ஸ்வராக்குட்டி-க்கு நீங்கள் வழங்கும் ஆசீர்வாதங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.


Thursday, February 7, 2019

புளிக்காய்ச்சல் & புளி சாதம்

தேவையான பொருட்கள் 
புளி - பெரிய ஆரஞ்சுபழம் அளவு 
 வறுத்த வேர்க்கடலை - 1/4கப் 
கடுகு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை 
கடலைப்பருப்பு -1டேபிள்ஸ்பூன்
உளுந்துபருப்பு -1 டேபிள்ஸ்பூன் 
மஞ்சள்தூள் - 1/2டீஸ்பூன் 
வரமிளகாய் -2 
நல்லெண்ணெய் 
வெல்லம் - சிறுதுண்டு
உப்பு 
வறுத்து பொடிக்க
கொத்துமல்லி விதை/தனியா - 1டேபிள்ஸ்பூன்
வரமிளகாய் -3 (காரத்துக்கேற்ப) 
வெந்தயம் - 1டீஸ்பூன்

செய்முறை 
கடாயில் கொஞ்சமாக எண்ணெய் காயவைத்து கொத்துமல்லி விதை, மிளகாய், வெந்தயம் இவற்றை தனித்தனியே (கருகாமல்) வறுத்து ஆறவைத்து கரகரப்பாக பொடித்துக்கொள்ளவும்.
புளியை ஒண்ணரை கப் தண்ணீர் விட்டு குக்கரில் ஒரு விசில் விட்டு ஆறவைத்து கெட்டியான புளிக்கரைசல் (சுமார் 2 கப்) எடுத்துக்கொள்ளவும். 

அகலமான வாணலியில் நல்லெண்ணெய் விட்டு காயவைக்கவும். (புளிக்காய்ச்சல் நாள்பட வைத்து உபயோகிக்க நிறைய எண்ணெய் விட்டால் நன்றாக இருக்கும். உங்க விருப்பப்படி எண்ணெய் ஊற்றிக்கலாம், மினிமம் ஒரு 4 டேபிள்ஸ்பூனாவது உபயோகித்தால் நன்று)

எண்ணெய் காய்ந்ததும் கடுகு தாளித்து,  கறிவேப்பிலை சேர்த்து வரமிளகாய்களை ஒடித்துப்போட்டு வறுக்கவும். பிறகு க.பருப்பு, உ.பருப்பு, வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.

கெட்டியான புளிக்கரைசல், உப்பு, மஞ்சள்பொடி சேர்த்து கொதிக்கவிடவும். எண்ணெய் பிரிந்து வருகையில் கொஞ்சம் வெல்லம் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்கவும். (புளி ஏற்கனவே குக்கரில்  வேகவத்ததால் சீக்கிரம் கொதித்து எண்ணெய் பிரிந்துவிடும்.)

நன்றாக ஆறியதும் காற்று புகாத டப்பாவில் எடுத்து வைத்தால் வாரம், பத்துநாட்களுக்கு மேலாகவே நன்றாக இருக்கும். அல்லது குளிர்சாதனப்பெட்டியில் வைத்தும் உபயோகிக்கலாம்.
உதிரியாக வடித்த சாதத்துடன் தேவையான அளவு புளிக்காய்ச்சலை கலந்தால் சுவையான புளிசாதம் தயார். சிம்பிளா ஒரு உருளை வறுவல், அல்லது தேங்காய்த்துண்டுகளுடன் சாப்பிட சுவையாக இருக்கும். 

பின்குறிப்பு 
பொதுவாக எங்க வீடுகளில் புளி சாதம் வெங்காயம் போட்டுதாந் செய்வோம். எங்காவது பயணம் போகையில் முதல் நாள் இரவே இப்படி புளிக்காய்ச்சல் செய்து சாதமும் செய்து கலந்து வைத்துவிடுவோம். காலையில் நேரத்தில் கிளம்பி இதை எடுத்துப்போக சுலபமாக இருக்கும். மற்றபடி புளிக்காய்ச்சலை செய்து சில நாட்கள் வைத்து அவ்வப்போது புளி சாதம் கலப்பதெல்லாம் இல்லை..சில நேரங்களில் மீதமாகும் சாதத்துக்கு புளிக்கரைசலைப் பிரட்டி வைத்து அடுத்த நாள் காலையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இன்ன பிற வகைகளுடன் தாளித்து சூடாகச் சாப்பிடுவதும் உண்டு. சில நாட்கள் முன்பு தோழிகளுடன் பேசுகையில்(வாட்ஸாப்-புகையில் என்று படிக்கவும் ;)) இந்த புளிசாதம் விவகாரம் வந்தது...எல்லாரும் " என்ன...புளி சாதத்தில் வெங்காயமா? " என்று மூக்கில் விரலை வைத்தார்கள். சரி..ஒரு முறை வெங்காயம் இல்லாமல் செய்து பார்ப்போம் என்று முயற்சித்தது இது. தோழி ஒருவர் யூடியூப் லிங்க் கொடுத்தார்..அந்த லிங்க் பார்த்து செய்ததுதான் இந்த புளிக்காய்ச்சல் & புளிச்சாதம். தேங்க்யூ காயத்ரி!! :)) 
புளியை குக்கரில் வேகவிடுவதும் யுடியூபில் இன்னொரு வீடியோவில் பார்த்ததுதான். 

என்னிடம் இருக்கும் வரமிளகாய் கொஞ்சம் டூமச் காரம்..மொத்தமாகவே 5 மிளகாய் (பொடிக்க 3, தாளிக்க 2) மட்டுமே சேர்த்தும் காரம் கொஞ்சம் தூக்கலாக இருந்தது. உப்புமா, தோசை, சப்பாத்தியுடன் தொட்டு சாப்பிடவும் ரொம்ப சூப்பராக இருந்தது. நீங்களும் செய்து பாருங்க.  நன்றி! 

Tuesday, January 15, 2019

பொங்கல் நல்வாழ்த்துகள்!

அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்!


புதிய ஆரம்பங்கள்..இந்த வருடத்தில் இந்தச் சிறுநாற்றுகள் செழித்து வளர்ந்து விரைவில் உங்களைச் சந்திக்க இங்கே வரவேண்டும் என்ற நம்பிக்கையோடு தைமகளுக்கு வரவேற்பு! :) 
நன்றி! 

Saturday, January 12, 2019

இரண்டாம் பதிவு 2019


2018 இறுதியில் சென்ற பயணப்பதிவு தொடர்கிறது..முதல் பகுதி இங்கே


 ஒரு வெள்ளிக்கிழமை காலையில் கிளம்பி Rocky Mountain National park  சென்றோம். போகும் வழியெல்லாம் பனி உறைந்து கண்களுக்கு விருந்தளித்தது. பனிப்பொழிவின் காரணமாக பார்க்கின் பெரும்பாலான பகுதிகள் மூடப்பட்டிருந்தன. மூடப்பட்ட பாதைகளின்நுழைவாயில் அருகே காவலர்  வாகனம் பாதுகாப்புக்கு நின்றிருந்தது. சுற்றுலாப் பயணிகள் ஆர்வக்கோளாறில் உள்ளே நுழைந்து பனியில் மாட்டிக்கொள்ளாதிருக்கக் காவலர் காவல்!! பனிபடர்ந்த சாலைகள், பனி போர்த்திய மலை முகடுகள், பனித்துளி சிதறிய பைன் மரங்கள் என எங்கெங்கு காணினும் பனி..ஏரிகளும் ஆறுகளும் பனியில் உறைந்து கிடந்தன. ஏரி மீது ஒரு சிலர் நடப்பதையும் காண முடிந்தது. ஆறுகளில் உறைந்த ஐஸ்கட்டிகளின் ஊடே நீர் ஓடிக்கொண்டும் இருந்தது. மிக அழகான இடம்.
மலையுச்சிகளின் அருகே செல்லச்செல்ல மனித நடமாட்டமில்லாத வெண்பனியைப் பார்க்க அவ்வளவு ஆசையாக இருந்தது..ஓடிச்சென்று கை கொள்ளாமல் அள்ளிக்கொள்ளலாம் போல..படுத்து உருளலாம் போல..எதுவும் செய்யாமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம் போல.!!! எல்லாம் போல தான்...2 குட்டிப்பெண்களை வைத்துக்கொண்டு காரில் இருந்த் பெரிதாக கீழே இறங்கியெல்லாம் ரசிக்க முடியவில்லை..மேலேயுள்ள படத்தில் முதலிரண்டு டென்வரில் நடந்த "Paw Patrol Live" show. லயாம்மாவின் ஃபேவரிட் ஷோ..டென்வரில் லைவ் ஷோ நடந்ததால் அங்கே சென்று பார்த்தோம்.. டிக்கட், பாப்கார்ன், பொம்மைகள் என்று டாலர்களை அள்ளிக் குவிக்கிறார்கள்..பெற்றோர்களும் பிள்ளைகளின் சந்தோஷத்துக்காக நண்டு சிண்டுகளையும் அள்ளிக்கொண்டு ஆஜர்!! :) :) 

 பயணத்தின் இறுதியாக சென்ற இடம் டென்வர் பொட்டானிகல் கார்டன்..குளிர் காரணமாக வெளியில் இருக்கும் செடிகள் எல்லாம் ஏறக்குறைய வறண்டு காய்ந்து போய்க்கிடந்தன..ஆனாலும் அது ஒரு அழகாக இருந்தது..கருப்பும் அழகு, காந்தலும் ருசி போல!! :)
 Denver Botanical Garden-இல் ஒரு இடத்தில் பெரிய கண்ணாடிக்கூரையுடன் கட்டங்கள் கட்டி உள்ளே டிராபிகல் கன்சர்வேட்டரி வைத்திருக்கிறார்கள். அங்கே வெயில் விரும்பும் செடிகொடிகள், மரங்கள், ஆர்க்கிட் பூக்கள் மற்றும் பற்பல பசுமை பூசிய தாவரங்கள்..கண்களுக்கு குளிர்ச்சியாய் இருந்தன. நம்ம வாழைமரம், பப்பாளி, பாக்கு மரம், வெனிலா பீன் கொடி உள்ளிட்டவற்றை காணமுடிந்தது.
மஞ்சக் கனகாம்பரம் குடும்பத்தைச் சேர்ந்த செடிதான் அது என நினைக்கிறேன்..பூக்கள் அழகாக இருந்தன. இன்னொரு புறம் ஆர்க்கிட் செடிகள் மட்டும் ஸ்பெஷலாக வளர்க்கப்பட்டு, ஜனவரி முதல் வாரத்தில் நடக்க இருக்கும் ஆர்க்கிட் கண்காட்சிக்குத் தயாராகிக் கொண்டிருந்தன..பல நிறங்களில் "பாயிண்ட் செட்டியா" செடிகள்..இது வரை சிவப்பு நிறம் மட்டுமே கண்டிருந்த கண்களுக்கு,  ஆரஞ்சு பிங்க் மஞ்சள் வண்ணச்செடிகள் புதிது..அழகும் கூட!
புத்தரின் கை - என்ற பெயருடைய எலுமிச்சை வகை ஒன்றும் காண முடிந்தது..வித்யாசமான உருவுடன் இருந்த எலுமிச்சை உங்கள் பார்வைக்கு. கூடவே இணைப்பு - ஸ்வராவின் குட்டிக்கையின் குறும்பு!! :)

ஆக மொத்தம் சென்று வந்த பயணத்தின் சில துளிகளைப் பதிந்திருக்கிறேன்..பொறுமையாய்ப் பார்த்து/படித்து ரசித்தமைக்கு என் மனமார்ந்த நன்றிகள். 

Friday, January 11, 2019

முதல் பதிவின் தொடர்ச்சி - புகைப்படத்தொகுப்பு

முதல் பதிவிற்கு கிடைத்த அமோக வரவேற்பினால்(!!??!) வெகு விரைவாக அடுத்த பதிவு வெளியிடப்படுகிறது..ஹிஹி!! :) :);)  
இந்தப் பதிவு முழுவதும் Key Stone Resort- ல் எடுத்த படங்கள். மேலே உள்ள ஐஸ் ஸ்னோமேன்  ரிசார்ட் நுழைவாயிலில் நிற்கிறார். 
உள்ளே சென்றதும் வரவேற்பருகே இருக்கும் ஹாலில்தான் இந்த சாக்லேட் சிற்பங்கள் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் இப்படி சாக்லேட் சிற்பங்கள் வழக்கமா வைப்பார்களாம். அந்த இடமே கமகமவென சாக்லேட் மணக்க, தகவலைப்படித்து எல்லாமும் சாக்லேட் உருவங்கள் என மூளை புரிந்துகொள்ளும் முன்னமே மூக்கு தன் பணியைச் செவ்வனே செய்து புரிய வைத்துவிடுகிறது! :) படங்களை க்ளிக் செய்து பார்த்தால் தெளிவாக படிக்கலாம்.
குழந்தைகளின் உள்ளங்கவர்ந்த பல்வேறு கேரக்டர்கள், பரிசுப்பொருட்கள் வைத்திருக்கும் பொதிகள், நட் க்ராக்கர், ஆடும் குதிரை, டெடி பேர் என முடிவில்லாத கற்பனைக்கு சாக்லெட்டில் உருவம் கொடுத்திருந்தார்கள். 
கூடவே சாக்லெட் அல்லாத 13 பொருட்கள் இவற்றுள்ளே ஒளிந்திருப்பதாகவும் தகவல் பலகை சொன்னது..பிங்க் மங்கி, கோல்ஃப் பந்து உள்ளிட்ட சில பொருட்களை நாங்களும் கண்டுபிடித்தோம்.


இப்படி இத்தனை இத்தனை சிற்பங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்களே...இவற்றையெல்லாம் என்ன செய்வார்கள்? என்ற கேள்வி இந்நேரம் உங்கள் மண்டையைக் குடைந்தால் ஆச்சரியமில்லை..அதற்குப் பதில் அடுத்த படத்தில்!
விருப்பமான உருவை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளலாமாம்!! கொள்ளை விலை இருக்கும்..அப்படி வாங்கினாலும் அதனை உண்ண மனம் வருமா??! 
சிற்ப அலங்காரத்துக்கு முன் குழந்தைகளுக்காகப் பெட்டிகளில் கேண்டிகேன் மிட்டாய்கள் வைக்கப்பட்டிருந்தன.,இதுங்க 2ம் பூந்து விளையாடுச்சுங்க. ;) ;) 




வீடியோ இணைத்திருக்கிறேன்..ஒர்க் ஆகுமா என்ற சந்தேகம் பதிவு வெளியானதும்தான் தீரும்!

இதனை முடித்துக்கொண்டு உணவகம் சென்றோம்..க்றிஸ்மஸ் தினம் என்பதால் சிறப்பு பஃபே வைத்திருந்தார்கள். விதம் விதம் விதமான கேக் வகைகள், பை, குக்கீ இவற்றுடன் சாக்லட் சான்ட்டா-வும் தரிசனம் தந்தார்.

அப்படியே நடந்தால் சாக்லட் ஃபவுண்டெய்ன்!! அதில் டிப் செய்து சாப்பிட மார்ஷ்மெலோ,ஸ் ட்ராபெரி உள்ளிட்ட பண்டங்கள் அணிவகுப்பு..
கூடவே சூப் வகைகள், சாலட், ப்ரெட்வகைகள் என ஏகத்துக்கும் உணவு..விலை விசாரித்தால் அதிகமில்லை, $55 மட்டுமே என்றார்கள். நமக்கு ஒத்துவராது என்பதால், படங்கள் மட்டும் க்ளிக்கிகொண்டு ப்ளாக் பீன் பர்கரை வாங்கி சாப்பிட்டாச்சு. அப்போது அருகிலிருந்தவர் பேச்சுவாக்கில் "வெளியே ஐஸ் ஸ்கல்ப்ச்சர்ஸ் இருக்கு, பாத்தீங்களா? ரொம்ப அழகா இருக்கு!" என்றார்..சரி, அதையும் பார்த்துடுவோம், வாங்க! :)

க்றிஸ்மஸ் மரம், ரெயின் டீர், ஸ்லெட்ஜ் போன்றவற்றை அழகாக ஐஸ் கட்டியில் செதுக்கி வைத்திருந்தார்கள்.
புகைப்படங்களை ரசித்திருப்பீர்கள் என்ற நம்பிக்கையுடன், மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம். நன்றி!! 



LinkWithin

Related Posts with Thumbnails